மாநிலங்களுக்கு இடையே எல்லைப் பிரச்சினையா?


மாநிலங்களுக்கு இடையே எல்லைப் பிரச்சினையா?
x
தினத்தந்தி 5 Aug 2021 8:18 PM GMT (Updated: 2021-08-06T01:48:04+05:30)

வடகிழக்கு மாநிலங்களான அசாம்-மிசோரம் இடையே எல்லைப் பிரச்சினை தலைதூக்கி நிற்கிறது.

இந்தியா இவ்வளவு நாளும் அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான், வங்காளதேசத்துடன் எல்லைப் பிரச்சினைகளை சந்தித்து கொண்டிருக்கிறது. சமீப காலமாக, நேபாளமும் இந்தப்பட்டியலில் சேர்ந்துவிட்டது. எங்கள் எல்லை இதுதான்.. இதுதான்.. என்று புதிதாக அவர்களே எல்லைக்கோட்டை வகுத்துக்கொள்கிறார்கள். இந்த எல்லைப் பிரச்சினை தொடர்வதால், ராணுவத்தினர் கொட்டும் மழையிலும், முழங்கால் அளவு பனிக்குள்ளும் நின்று, உடலை வருத்தி இரவு-பகல் பார்க்காமல், எல்லைப்பகுதியில் ரோந்து செல்ல வேண்டியநிலை இருக்கிறது.

இந்தப்பிரச்சினை ஒருபக்கம் இருக்க, இப்போது புதிதாக, வடகிழக்கு மாநிலங்களான அசாம்-மிசோரம் இடையே எல்லைப் பிரச்சினை தலைதூக்கி நிற்கிறது. பிரச்சினை பல ஆண்டுகளாக இருந்தாலும், கடந்த அக்டோபர் மாதம் முதல் வன்முறைக்கு செல்லும் அளவுக்கு தீவிரமாகியுள்ளது. இருமாநிலங்களுக்கும் இடையே 164.6 கிலோ மீட்டர் நீள எல்லைப்பகுதி இருக்கிறது. ஏதோ, எதிரி நாட்டில் இருப்பதுபோல, எல்லைப்பகுதியில் ஒரு பக்கம் அசாம் போலீசாரும், மறுபக்கம் மிசோரம் போலீசாரும் நின்று கொண்டிருந்தார்கள். இவ்வளவுக்கும் இருமாநிலங்களிலும் ஆட்சிசெய்வது பா.ஜ.க. தான்.

அசாம் மாநிலத்தை பொறுத்தமட்டில், ஹிமந்தா பிஸ்வா சர்மாவை முதல்-மந்திரியாக கொண்டு பா.ஜ.க. ஆட்சி நடந்துவருகிறது. மிசோரமை பொறுத்தமட்டில், பா.ஜ.க. அங்கம் வகிக்கும் மிசோ தேசிய முன்னணி அரசு நடந்துவருகிறது. அதன் முதல்-மந்திரி சோரம்தங்கா. ஆக, ஒரே கொள்கைகளை கொண்ட இருமாநில அரசுகளின் இடையே இவ்வளவு கசப்புணர்வு இருந்ததன் உச்சமாக, கடந்த ஜூலை 26-ந்தேதி, இருமாநில போலீசார் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில், அசாம் மாநில போலீசார் 6 பேரும், ஒரு சாதாரண குடிமகனும் உயிரிழந்துவிட்டார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உள்பட 60 பேர் காயமடைந்துவிட்டனர்.

தங்களது காவல்துறையினர் மீது எந்திர துப்பாக்கியால் மிசோரம் போலீசார் சுட்டதாக குற்றம்சாட்டும் அசாம் அரசு, தங்கள் எல்லையை காப்பாற்ற 4 ஆயிரம் அதிரடி படையினரை பணியில் அமர்த்தப்போவதாக தெரிவித்தது. மிசோரம் தரப்பில், அசாம் முதல்-மந்திரி மீதே வழக்கு தொடரப்போவதாக கூறியது. மேலும், சுப்ரீம் கோர்ட்டுக்கு போகப்போவதாக மிசோரம் அரசு தெரிவித்திருக்கிறது. நல்ல வேளையாக, இப்போது இருமாநில அரசுகளுக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தையில், “தற்காலிகமாக இருமாநிலங்களும் பிரச்சினைகளை பேசி தீர்த்துக்கொள்ளலாம்” என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையை தொடக்கத்திலேயே மத்திய அரசு தலையிட்டு தீர்த்திருந்தால், எல்லைப் பிரச்சினை எல்லைமீறி போயிருக்காது.

இப்போது, செயற்கைகோள் வரைபடம் மூலம் இருமாநிலங்களுக்கு இடையே எல்லையை வரையறுத்து கொடுப்பதற்கு மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதேபோல, அசாம் மாநிலத்துக்கும், நாகாலாந்துக்கும் இடையேகூட பிரச்சினை இருக்கிறது. அங்கு 434 கிலோ மீட்டர் எல்லைப் பகுதியில் 60 ஆண்டுகளுக்கு மேலாக பிரச்சினை இருந்து வருகிறது. அங்கும் எல்லைப் பிரச்சினை எந்த நேரத்திலும் விபரீத எல்லைக்கு போகலாம்.

வடகிழக்கு மாநிலங்களில், மாநிலங்களுக்கு இடையே ஒற்றுமையில்லாமல் இருந்தால் நிச்சயமாக எதிரி நாடுகளுக்கு லட்டு சாப்பிடுவதுபோல இருக்கும். அவர்கள் இதை பயன்படுத்திக்கொண்டு ஊடுருவலுக்கும், வேவு பார்ப்பதற்கும் முயற்சிப்பார்கள். வடகிழக்கு மாநிலங்களில் எல்லைப் பிரச்சினை என்றால், தென்மாநிலங்களில் நதிநீர் பங்கீடு பிரச்சினை இருக்கிறது. மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினையில் தலையிடமாட்டோம். சம்பந்தப்பட்ட அரசுகளே பேசி தீர்த்துக்கொள்ளட்டும் என்று மத்திய அரசாங்கம் ஒதுங்கியிருந்து விடக்கூடாது. சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல மத்திய அரசு ஒரு நியாயமான நடுநிலை அணுகுமுறையோடு செயல்பட்டு பிரச்சினைகளை தீர்த்துவைக்கவேண்டும்.

இத்தகைய சூழ்நிலையில், தேசிய கட்சிகள், மாநிலத்துக்கு ஒரு நிலைப்பாடு என்று எடுக்காமல், எது நியாயமோ, அந்த நிலைப்பாட்டை உறுதியாக எடுத்து, நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களும், “ஒருதாய் மக்கள் நாம் என்போம்” என்ற உணர்வோடு, வாழ்வதற்கு வழிவகை செய்ய வேண்டியது மத்திய அரசாங்கத்தின் கடமையாகும்.

Next Story