தலீபான் பிரச்சினையில் இந்தியாவுக்கு என்ன தாக்கம்?


தலீபான் பிரச்சினையில் இந்தியாவுக்கு என்ன தாக்கம்?
x
தினத்தந்தி 17 Aug 2021 8:15 PM GMT (Updated: 17 Aug 2021 8:15 PM GMT)

உலகம் முழுவதுமே கடந்த சில நாட்களாக ஆப்கானிஸ்தான் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் ஒரு புரட்சியைத்தான் உற்றுநோக்கிக்கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு ஒரு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது.

இந்த நாட்டின் மேற்குப்பகுதியில் ஈரான் எல்லையும், கிழக்கு மற்றும் தெற்குப்பகுதியில் பாகிஸ்தான் எல்லையும், வடக்கு பகுதியில் துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஜகிஸ்தான் எல்லையும், வடகிழக்கின் ஒருசிறிய பகுதி சீனாவின் எல்லையாகவும் இருக்கிறது. பாகிஸ்தான் எல்லைக்கோட்டின் கடைசியில் 106 கி.மீ. நீளமுள்ள ஒரு சிறிய எல்லைப்பகுதி இந்தியாவின் உச்சியில் அதாவது, இமயமலையில் உள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே ஆட்சி அமைத்தவர்களுக்கும், தலீபான்களுக்கும் இடையே கடும் மோதல்கள் ஏற்பட்டுக்கொண்டிருந்தது.

‘தலீபான்கள்’ என்றால் ‘மாணவர்கள்’ என்று பொருள். தலீபான்கள் உருவானது வடக்கு பாகிஸ்தானிலுள்ள ‘மதரசா’ என்று கூறப்படும் பள்ளிக்கூடங்களில்தான். ஆப்கானிஸ்தானில் இருந்து ரஷியநாடு 1989-ல் பின்வாங்கியபோது, 1990-ல் முதன்முதலாக தலீபான்கள் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டனர். தங்களுடைய ஆட்சியில் ஊழல் இருக்காது, சட்டம்-ஒழுங்கு பராமரிக்கப்படும் என்று பிரகடனப்படுத்தியதால் மக்களும் அதை விரும்பினார்கள். 1996-ம் ஆண்டு தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றி, ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலுக்குப்பிறகு, ஆப்கானிஸ்தான் விவகாரத்தை கையிலெடுத்து தலீபான்களை அங்கிருந்து அமெரிக்க படைகள் அகற்றின. தொடர்ந்து தலீபான்களுக்கும், அமெரிக்க படைகளுக்கும் ஓயாத போராட்டம் நடந்தது. அமெரிக்க வீரர்கள் ஆப்கானிஸ்தானில் எதற்காக உயிரிழக்கவேண்டும்?, எதற்காக அமெரிக்காவின் கஜானாவிலிருந்து கோடிக்கணக்கான டாலர்கள் தலீபான்களுடன் நடக்கும் போருக்கு செலவிடவேண்டும் என்ற உணர்வு அமெரிக்க மக்களிடம் எழுந்ததால் முதலில் டிரம்ப் அரசாங்கமும், தொடர்ந்து பைடன் அரசாங்கமும் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையை திரும்பப்பெறும் நடவடிக்கையை மேற்கொண்டது.

இதற்கிடையே 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்காவுக்கும், தலீபான்களுக்குமிடையே நடந்த ஒப்பந்தத்தில், 2021-ம் ஆண்டு மே 1-ந்தேதிக்குள் அமெரிக்கப் படைகள் திரும்பப்பெறப்படும் என்று கையெழுத்திட்டதை தொடர்ந்து கடந்த மே 1-ந்தேதி அனைத்து படைகளும் திரும்பப்பெறப்பட்டன. அன்றிலிருந்து தலீபான்கள் தங்கள் உள்நாட்டுப்போரை தொடங்கி, இப்போது ஆப்கானிஸ்தான் முழுவதையும் தங்கள் வசம் கொண்டுவந்துள்ளனர். ஏற்கனவே தலீபான்கள் ஆட்சியிலிருந்தபோது ஆண்களெல்லாம் தாடிவளர்க்கவேண்டும். பெண்குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்லக்கூடாது. உடல்முழுவதும் பர்தாவால் மூடப்படவேண்டும். வெளியே செல்வதாக இருந்தால் ஆண் உறவினர்களோடுதான் செல்லவேண்டும். டி.வி., இசை, ஓவியம், போட்டோ எடுத்தல் போன்றவை முழுமையாக தடைசெய்யப்பட்டிருக்கிறது. இதை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை என்று நடைமுறைப்படுத்தியது. அது அவர்களது உள்நாட்டு பிரச்சினை. ஆனால் இந்தியாவை பொறுத்தமட்டில், அங்கிருக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு கொண்டுவரவேண்டும் என்பது முதல் கடமையாக இருக்கிறது.

ஆப்கானிஸ்தானிலுள்ள 106 கி.மீ. எல்லைப்பகுதி மூலமாக போதைமருந்து கடத்தலோ, பயங்கரவாதிகள் ஊடுருவலோ ஏற்படாமல் 106 கிலோ மீட்டரையும் பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும். சீனாவும், பாகிஸ்தானும் தலீபான்களுக்கு மிகவும் நெருங்கியவர்கள், பாகிஸ்தான் உளவுப்படைக்கும், தலீபான்களுக்கும் நெருக்கம் உண்டு என்ற வகையில், அந்த கோணத்திலும் தலீபான்களோடு எத்தகைய உறவுகளை வைத்துக்கொள்ளலாம் என்று பார்க்கவேண்டும். ஆப்கானிஸ்தானுக்கு கடல்பகுதி இல்லை. முழுக்க முழுக்க தரைப்பகுதியாலேயே சூழப்பட்டிருப்பதால், தன் ஏற்றுமதி, இறக்குமதியை பாகிஸ்தான், ஈரான் கடற்கரை வழியாகவே நடத்துகிறது. ஈரானில் ‘சபாகர்’ துறைமுகத்திட்டத்தை இந்தியா மேற்கொண்டு முடிக்கும் தருவாயில் உள்ளது. இந்த துறைமுகத்தை பயன்படுத்துவதுதான் ஆப்கானிஸ்தானுக்கு நல்லது என்றாலும், கராச்சி அல்லது பந்தர் அப்பாஸ் என்ற பாகிஸ்தான் துறைமுகங்களை ஆப்கானிஸ்தான் பயன்படுத்துமா?, அப்படியானால் இந்த திட்டம் என்னவாகும்? என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்தியாவில் இருந்து ரூ.6 ஆயிரத்து 200 கோடி அளவில் பொருட்கள் ஆப்கானிஸ்தானுக்கு ஏற்றுமதியாகி வரும் நிலையில், ஏற்றுமதியாளர்களும் பண பரிமாற்றம் இனி எப்படி இருக்குமோ? என்ற கவலையில் இருக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், ஆப்கானிஸ்தான் பிரச்சினையில் கவனமான நிலைப்பாட்டை இந்தியா எடுக்கவேண்டியது மிக அவசர அவசியமாக இருக்கிறது.

Next Story