பெட்ரோல் விலையை குறைக்கமுடியாது - மத்திய அரசாங்கம் மறுப்பு!


பெட்ரோல் விலையை குறைக்கமுடியாது - மத்திய அரசாங்கம் மறுப்பு!
x
தினத்தந்தி 25 Aug 2021 7:57 PM GMT (Updated: 2021-08-26T01:27:55+05:30)

சென்னையில் நேற்று பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.99.20. டீசல் விலை ரூ.93.52. பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.

சென்னையில் நேற்று பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.99.20. டீசல் விலை ரூ.93.52. பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் விலை உயர்வு பணக்காரர்களுக்கு மட்டும் பாதிப்பு இல்லை. ஏழை, நடுத்தர மக்களுக்கும் பெரும் பாதிப்பு இருக்கிறது. ஏனெனில் மோட்டார் வாகனங்கள், குறிப்பாக ‘மொபட்’ போன்ற இருசக்கர வாகனங்கள் மக்கள் வாழ்க்கையின் அங்கமாக மாறிவிட்டது. டீசல் விலை உயர்வால் சரக்கு வாகன கட்டணங்கள் உயர்ந்து எல்லா பொருட்களின் விலையும் மக்களை பெரிதும் துயரத்துக்குள்ளாக்கும் வகையில் அதிகரித்துக்கொண்டே போகிறது.

கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் இப்போதுதான் கொஞ்சம், கொஞ்சமாக மீண்டு எழுந்துகொண்டிருக்கும்நிலையில், பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. மு.க.ஸ்டாலின் அரசு, தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றும் வகையில் பெட்ரோல் மீதான மாநில வரியை ஒரு லிட்டருக்கு ரூ.3 குறைத்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை மற்ற மாநிலங்களை விடவும் ரூ.3 குறைவாக விற்கப்படுகிறது. தமிழக அரசு குறைத்துவிட்டது. இனி மத்தியஅரசு தன்னுடைய பங்குக்கு, தான் விதிக்கும் கலால் வரியை குறைக்க வேண்டும் என்பது பெரிய கோரிக்கையாக இருக்கிறது.

ஏனெனில் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் மீதும் மத்தியஅரசாங்க வரிகள் ரூ.32.90 ஆகும். ஒரு லிட்டர் டீசல் மீது ரூ.31.80 ஆகும். தமிழகஅரசு குறைத்த தொகைக்கு மேலாக மத்திய அரசாங்கம் வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ள நிலையில், குறைந்தபட்சம் அந்த அளவாவது குறைக்க வேண்டும் என்பது ஏழை, நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்தநிலையில், இதற்கான வாய்ப்பே இல்லை என்பதுபோல நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம், எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு மானியத்தொகையை ரொக்கமாக வழங்காமல் ரூ.1.44 லட்சம் கோடி அளவில் சிறப்பு எண்ணெய் பத்திரங்களை வெளியிட்டுள்ளது. இதற்காக வட்டியை 6 மாதங்களுக்கு ஒருமுறை மத்திய அரசாங்கம் கட்டவேண்டியது இருக்கிறது. இந்த எண்ணெய் பத்திரங்களுக்கு வட்டி கட்டும் சுமை இல்லாமல் இருந்தால், பெட்ரோல்-டீசல் மீதான வரியை குறைத்திருக்க முடியும் என்பது நிர்மலா சீதாராமனின் கூற்று.

மத்திய அரசாங்கம் தன்னுடைய செலவை சரிகட்ட எண்ணெய் பத்திரங்களை வெளியிடுவதோ, கடன் வாங்குவதோ அவர்கள் பாடு. ஆனால் அதற்கெல்லாம் மக்கள் தலையில் கை வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் கடன் பத்திரங்களுக்கான வட்டி 3.2 சதவீதம்தான். இந்த வட்டியை மத்திய அரசாங்கம் தன் நிதியில் இருந்து கட்டிவிட்டு, இப்போது வரியை குறைத்து நிவாரணம் அளிக்கலாமே என்பது மக்களின் கருத்து.

இந்தநிலையில், நிர்மலா சீதாராமன், தமிழக அரசு பெட்ரோல் விலையை குறைத்தது தொடர்பாக கூறிய கருத்தில், “எண்ணெய் பத்திரங்களை வெளியிட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகித்த தி.மு.க.வும் ஒரு காரணமாக உள்ள நிலையில், இப்போது பெட்ரோல் விலையை குறைத்தது ஒரு சூழ்ச்சி” என்று தெரிவித்திருக்கிறார். இதற்கு பதிலளித்த தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “இது சூழ்ச்சி அல்ல. எங்களின் நேர்மை” என்று கூறிவிட்டு, “2016 முதல் 2020 வரை பா.ஜ.க. எந்த கூட்டணியில் இருந்ததோ, அந்த அ.தி.மு.க. கூட்டணி பெட்ரோல் மீதான வரியை 2 கட்டங்களாக ரூ.7 உயர்த்திய நிலையில், அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. அதை எதிர்த்து நின்றது. இப்போது அரசமைத்த தி.மு.க. பெட்ரோல் மீதான வரியை ரூ.3 குறைத்தது”என்று பதில் அளித்துள்ளார். மக்களை பொறுத்தமட்டில் பெட்ரோல் விலை உயர்வுக்கு யார் காரணம்? என்ற சர்ச்சைக்குள் நுழைய விரும்பவில்லை. மாநில அரசு குறைத்தது போல மத்திய அரசாங்கமும் பெட்ரோல்-டீசல் விலையை குறைக்கவேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கை.

Next Story