மாற்றுத்திறனாளிகள்-மாற்று குறையாத தங்கங்கள்


மாற்றுத்திறனாளிகள்-மாற்று குறையாத தங்கங்கள்
x
தினத்தந்தி 6 Sep 2021 9:07 PM GMT (Updated: 6 Sep 2021 9:07 PM GMT)

ஜப்பான் நாட்டு தலைநகரான டோக்கியோ இந்த ஆண்டு 2 பெருமைகளை பெற்றிருக்கிறது. ஒலிம்பிக் போட்டி முதலில் டோக்கியாவில்தான் நடந்தது. அந்த போட்டி முடிந்தவுடனே பாராஒலிம்பிக் என்று கூறப்படும் பாரலல் ஒலிம்பிக் அதாவது ஒலிம்பிக் போட்டிக்கு இணையாக கருதப்படும், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியும் டோக்கியோவில் நடந்தது.

ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 7 பதக்கங்களை பெற்றது மிகவும் பூரிப்பாக கருதப்பட்டது. ஆனால் சாதனைக்கு ஊனம் ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் இந்தியாவிலிருந்து சென்ற மாற்றுத்திறனாளி வீரர்களில் 17 பேர் பாராஒலிம்பிக்கில் 19 பதக்கங்களை வென்று பெருமை சேர்த்திருக்கிறார்கள். 1960-ம் ஆண்டு பாராஒலிம்பிக் போட்டி முதன்முதலில் ரோம்நகரில் தொடங்கியது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பாராஒலிம்பிக் போட்டியில், தற்போது நடந்துமுடிந்த பாராஒலிம்பிக் போட்டிக்கு முன்புவரை இந்தியா மொத்தமாகவே 12 பதக்கங்களை மட்டுமே வென்றிருந்தது. ஆனால் இந்த டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டியில் மட்டும் 5 தங்கப்பதக்கங்கள், 8 வெள்ளிப்பதக்கங்கள், 6 வெண்கலப்பதக்கங்களை நமது மாற்றுத்திறனாளி வீரர்கள் வென்றெடுத்து இந்தியாவை மிகவும் பெருமைப்படுத்தியிருக்கின்றனர்.

ஊனம் உடலில்தானே தவிர, எங்கள் உள்ளத்தில் அல்ல என்று பிரகடனப்படுத்தி இருக்கின்றனர், இந்த வீரர்கள். எழுத்தாளர் ராபின் சர்மா கூறியதுபோல, ‘உங்களின் ஒவ்வொரு எண்ணமும், உங்கள் செயலும் உங்கள் வாழ்வின் இலக்கை நோக்கிச்சென்றால், நீங்கள் தடுக்கமுடியாத சக்தியாக விளங்கி, மாபெரும் வெற்றியும், மகிழ்ச்சியும் உங்களுக்கு உறுதியாகும்’ என்பது போன்று இந்த வீரர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு சோகக்கதை இருந்தாலும், ஏதாவது சாதிப்பேன் என்ற லட்சியத்தில் கடும் பயிற்சிகளுக்கு பிறகு இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றனர். இவர்களில் ஒரு சிலர் விளையாட்டில் மட்டுமல்லாமல், தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல வெற்றிகளை அடைந்திருக்கின்றனர். பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற சுஹாஸ் யதிராஜ் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி. ஒரு தங்கப்பதக்கத்தையும், ஒரு வெண்கலப்பதக்கத்தையும் துப்பாக்கிச்சுடும் போட்டியில் வென்ற அவனி லெகரா ஒரு சட்டக்கல்லூரி மாணவி.

இந்த வீரர்கள் இதில் வெறும் பதக்கங்களை மட்டும் பெற்றுவராமல் உலக சாதனைகளையும் நிகழ்த்தியிருக்கிறார்கள். ஈட்டிஎறிதல் போட்டியில் சுமித் அன்ட்டில் உலக சாதனை படைத்திருக்கிறார். துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் அவனி லெகரா உலக சாதனை மட்டுமல்லாது, பாராஒலிம்பிக் போட்டியிலும் சாதனை படைத்திருக்கிறார். துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் மனிஷ் நார்வால், பாராஒலிம்பிக்கில் சாதனை படைத்திருக்கிறார். உயரம் தாண்டுதலில் நிஷாத்குமார், பிரவீன்குமார் ஆகியோர் ஆசிய சாதனைகளை படைத்திருக்கிறார்கள். ஆக நமதுவீரர்கள் வெற்றி பதக்கங்களை மட்டுமல்லாமல், சாதனைகளையும் படைத்து தேசியக்கொடியை உயர்த்தி பிடித்திருக்கிறார்கள். கவிஞர் வைரமுத்து ‘ஊனம்... ஊனம்... ஊனம்... இங்கே ஊனம் யாருங்கோ? உடம்பில் உள்ள குறைகளெல்லாம் ஊனம் இல்லீங்கோ! என்றதுபோல, தமிழ்நாட்டு வீரரான மாரியப்பன் கடந்த பாராஒலிம்பிக் போட்டியிலும் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்றார். இந்த போட்டியிலும் தங்கப்பதக்கம் பெறவேண்டியவர், மழைபெய்த காரணமாக வெள்ளிப்பதக்கத்தை பெற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.

இந்த வீரர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும், அவர்களுக்கு உடல் ஊனம் ஏற்பட்ட வரலாற்றையும், அவர்களது முயற்சிகளையும் மாற்றுத்திறனாளிகளாக இருக்கும் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் வெளியிட்டு எல்லோருக்கும் ஒரு உற்சாகத்தை அளிக்கும் முயற்சியில் மத்திய-மாநில அரசுகள் ஈடுபடவேண்டும். பாராஒலிம்பிக்கில் மொத்தமுள்ள 22 போட்டிகளில், 9 போட்டிகளில்தான் இந்தியா கலந்துக்கொண்டு 19 பதக்கங்களை பெற்று திரும்பியிருக்கிறது. அடுத்து பாரீசில் நடைபெற இருக்கும் பாராஒலிம்பிக்கில் 22 போட்டிகளிலும் இந்திய வீரர்கள் கலந்து கொள்வதற்கான முயற்சிகளையும், பயிற்சிகளையும் உடனடியாக தொடங்கவேண்டும். வெள்ளிப்பதக்கம் கொண்டுவந்துள்ள தமிழக வீரர் மாரியப்பனுக்கு மத்திய-மாநில அரசுகள் வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என்பது அவரின் கோரிக்கை மட்டுமல்லாது, அவரால் மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்திக்கொண்டு இருக்கும் தமிழக மக்களின் கோரிக்கையாகவும் இருக்கிறது.

Next Story