தொழிற்சாலைகளை மூடும் நிலை வரக்கூடாது


தொழிற்சாலைகளை மூடும் நிலை வரக்கூடாது
x
தினத்தந்தி 12 Sep 2021 9:05 PM GMT (Updated: 12 Sep 2021 9:05 PM GMT)

இந்தியாவின் குறிப்பாக தமிழகத்தின் பொருளாதாரம் மிகவேகமாக சென்று கொண்டிருந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக பெரும்சரிவு ஏற்பட்டிருக்கிறது.

இந்தியாவின் ‘டெட்ராய்ட்’ என்று அழைக்கப்படும் தமிழ்நாட்டில், போர்டு நிறுவனம் தொடங்கி 25 ஆண்டுகளுக்கு பிறகு, நாங்கள் எங்கள் தொழிற்சாலையை மூடப்போகிறோம் என்று அறிவித்தது பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. புதிது புதிதாக தொழிற்சாலைகள் வரவேண்டும். அதனால் தொழில்வளர்ச்சி மட்டுமல்ல, அரசுக்கு வரிவருவாய் மட்டுமல்ல, ஏராளமான தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பளிக்கும் என்பதால் தொழில் வளர்ச்சியில் தமிழக அரசு அதிக முயற்சிகளை எடுத்து வருகிறது.

தி.மு.க. அரசானாலும் சரி, அ.தி.மு.க. அரசானாலும் சரி, தமிழ்நாட்டில் தொழில்வளர்ச்சிக்கு ஆற்றிய பெரும் பங்களிப்பை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. சென்னைக்கு அருகில் போர்டு தொழிற்சாலையை கொண்டுவர வேண்டும் என்ற அரும்பெரும் நோக்கில் ஜெயலலிதா அந்த நிறுவனத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டார். அடுத்து 1996-ல் கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சிவந்தபோது, இந்த தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இதன் விரிவாக்கப்பிரிவை அப்போது முதல்-அமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதியும், தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் நேரில்சென்று திறந்து வைத்தனர். 2015-16-ல் இந்த நிறுவனம் தன் முழுஉற்பத்தி திறனாக ஒரு நாளைக்கு 650 முதல் 700 கார்கள் வரை உற்பத்தி செய்துவந்தது. ஆனால் கடந்த 2 வாரங்களாக இதன் உற்பத்தி 20 சதவீதமாக சரிந்தது. அதாவது ஒருநாளைக்கு ஏறத்தாழ 130 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த 25 ஆண்டுகளில் 12 லட்சம் கார்களை விற்பனை செய்த இந்த நிறுவனம், பிகோ, அஸ்பயர், பிரீஸ்டைல், ஈகோ ஸ்போர்ட், என்டெவர் போன்ற பெயரிலான கார்களை உற்பத்தி செய்து வருகிறது.

இப்போது போர்டு நிறுவனத்தின் கார்கள் விற்பனை பெருமளவில் சரிந்ததால், சென்னை மற்றும் குஜராத் மாநிலம் சனாந்த் தொழிற்சாலைகளில் இதுவரை ரூ.15,000 கோடி நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக இந்த நிறுவனம் கூறுகிறது. சென்னை தொழிற்சாலையை அடுத்த ஆண்டு மத்தியில் மூடுவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 3 ஆயிரத்து 300 தொழிலாளர்கள் வேலையிழப்பார்கள். இதுதவிர, இந்தியா முழுவதும் உள்ள 391 விற்பனை நிலையங்களில் பணியாற்றும் 40 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் இருக்கிறது. போர்டு தொழிற்சாலைக்கு உதிரி பாகங்களை தயாரித்து சப்ளைசெய்யும் தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் பெருத்தநஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

ஏற்கனவே கடந்த சிலநாட்களுக்கு முன்பே மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள், தாங்கள் இந்த தொழிலில் அடைந்துவரும் பெரும் நஷ்டத்தை குறிப்பிட்டு, அரசு அதிகாரிகள் வெறும் வாய்வார்த்தை ஜாலங்களை கூறுவது இந்த தொழிலின் வீழ்ச்சியை காப்பாற்றிவிடாது. வரி மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளால் மோட்டார் வாகனங்களின் விலை 25 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துவிடுகிறது. சாதாரண ஏழை-எளிய, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் இருசக்கர வாகனங்களுக்குக்கூட ஆடம்பர பொருட்களுக்கு விதிக்கப்படும் 28 சதவீத சரக்கு சேவைவரி விதிக்கப்படுகிறது. மோட்டார்வாகன தொழில் இந்தியாவின் பொருளாதாரத்தில் முக்கிய இடத்தில் உள்ளது. ஏறத்தாழ 3 கோடி பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு அளிக்கிறது என்று தெரிவித்தனர்.

ஜெனரல் மோட்டார்ஸ், ஹார்லே டேவிட்சன் போன்ற தொழிற்சாலைகள் ஏற்கனவே மூடப்பட்டநிலையில், போர்டு நிறுவனமும் அந்த பட்டியலில் சேர்ந்துவிடக்கூடாது. இதை மத்திய அரசாங்கம் தடுத்தாக வேண்டும். எனவே நஷ்டத்தைக்காட்டி மூடப்போவதாக போர்டு தொழிற்சாலை அறிவித்து இருந்தாலும், ஏதாவது வரிக்குறைப்பு, சலுகைகள் மூலம் அந்த நிலையை தவிர்க்க முடியுமா? என்பது குறித்தும், வேறு நிறுவனங்கள் அதை வாங்குவதற்கு மத்திய-மாநில அரசுகள் வசதி ஏற்படுத்துவது குறித்தும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மொத்தத்தில் தமிழ்நாட்டில் எந்த தொழிற்சாலையும் மூடப்பட்டது; தொழிலாளர்கள் வேலையிழந்தார்கள் என்ற நிலை ஒருபோதும் வரக்கூடாது. அதற்கு தமிழக தொழில்துறை நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

Next Story