வழியனுப்புகிறோம் பன்வாரிலால் புரோகித்தை; வரவேற்கிறோம் ஆர்.என்.ரவியை...


வழியனுப்புகிறோம் பன்வாரிலால் புரோகித்தை; வரவேற்கிறோம் ஆர்.என்.ரவியை...
x
தினத்தந்தி 13 Sep 2021 8:32 PM GMT (Updated: 13 Sep 2021 8:32 PM GMT)

கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் 6-ந்தேதி தமிழக கவர்னராக பொறுப்பேற்ற பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநில கவர்னராக மாற்றப்பட்டுள்ளார். நாகலாந்து கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி, தமிழக கவர்னராக பொறுப்பேற்க இருக்கிறார். தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றாக தெரிந்த பன்வாரிலால் புரோகித், இன்று தமிழகத்தை விட்டு விடைபெற்று செல்கிறார்.

இவ்வளவு ஆண்டுகளும் தமிழக கவர்னராக பதவிவகித்த பன்வாரிலால் புரோகித், சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பலமுறை இருந்த அனுபவமிக்கவர். மராட்டிய மாநிலம் நாக்பூரில் இருமுறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, ராஜாங்க மந்திரியாகவும் மராட்டிய அரசில் பணியாற்றியிருக்கிறார். நாக்பூர் பாராளுமன்ற உறுப்பினராக 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். புகழ்பெற்ற ‘ஹிட்டாவாடா’ பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராக பணியாற்றியவர். ஊழலுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் அவர் தொடர்ந்த வழக்கு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டையே, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் ரத்து செய்யவைத்தது. தமிழக கவர்னராக பொறுப்பேற்கும் முன்பு அசாம் மாநில கவர்னராகவும், மேகாலயா மாநில பொறுப்பு கவர்னராகவும் பதவி வகித்தவர். தமிழ்நாட்டில் கவர்னர் மாளிகையில் ஆகும் செலவை பெரிதும் குறைத்தவர். தனது உணவுக்கும், தான் விருந்தினராக அழைப்பவரின் உணவுக்கும் பணத்தை கட்டிவிடுவார். பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை எடுத்தார். மக்கள் எளிதில் கவர்னர் மாளிகைக்கு செல்லமுடியும், சுற்றிப்பார்க்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தினார்.

எல்லோருடைய அன்பையும் பெற்றிருந்தாலும், சில விமர்சனங்களுக்கும் ஆளானவர் பன்வாரிலால் புரோகித் என்பதை மறுக்கமுடியாது. ராஜீவ்காந்தி கொலைவழக்கில் நீண்டகாலம் சிறையில் இருக்கும் 7 பேருக்கு விடுதலை வழங்கவேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியபிறகும், அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றியபிறகும், அனைத்து எதிர்க்கட்சிகள் வேண்டுகோள் விடுத்தபிறகும், நீதிமன்றங்கள் வழிவிட்டபிறகும் இன்னும் விடுதலை செய்யவில்லை என்ற குறை அவர் மீது உண்டு. அரசு பள்ளிக்கூடங்களில் படித்து ‘நீட்’ தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற மசோதாவில் கையெழுத்திட தாமதத்தை ஏற்படுத்தினார் என்ற கருத்தும் அவர் மீது உண்டு.

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் பல நியமனங்களுக்கு அவர் மீது பாராட்டுரைகள் வந்தாலும், ஒரு சில நியமனங்கள் மீது விமர்சனங்கள் வந்ததையும் மறுக்கமுடியாது. எளிமையும், இனிமையும் கொண்ட பன்வாரிலால் புரோகித் இன்று பஞ்சாப் மாநில கவர்னராக பதவியேற்க செல்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘தமிழ்நாட்டில் இருந்து விடைபெற்று பஞ்சாப் மாநில கவர்னராக பொறுப்பேற்கவிருக்கும் பன்வாரிலால் புரோகித்தை அன்புடனும், மரியாதையுடனும் வழியனுப்பி வைக்கிறோம். அவரது பரந்த உள்ளம் பஞ்சாப் மக்களுக்கு நன்மை பயப்பதாக அமையட்டும். தமிழ்நாடு தங்களை வாழ்த்தி வழியனுப்புகிறது’ என்று கூறிய வாழ்த்துதான், தமிழக மக்களின் வாழ்த்தாகும்.

புதிதாக பொறுப்பேற்க இருக்கும் ஆர்.என்.ரவி, ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி. 69 வயதான அவர், பீகாரில் பிறந்தவர். ஆரம்பத்தில் சிறிதுகாலம் பத்திரிகையாளராக இருந்த ஆர்.என்.ரவி, ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்வுபெற்று, கேரளாவில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியபிறகு, மத்திய அரசாங்க உளவுப்பிரிவில் சிறப்பு இயக்குனராக பணியாற்றினார். தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக பணியாற்றி இருக்கிறார். பிரதமர் அலுவலகத்தில் இணை உளவுப்பிரிவு கமிட்டியின் தலைவராக பணியாற்றியிருக்கிறார். காவல்துறையில் குறிப்பாக உளவுப்பிரிவில் நீண்டநெடிய அனுபவமிக்கவர். நாகலாந்து கவர்னராக இருந்தபோது, தங்களுக்கு தனிக்கொடி வேண்டும், தனி அரசியல்சட்டம் வேண்டும் என்று கிளர்ச்சி செய்த தீவிரவாத இயக்கங்களை அடக்கிஒடுக்கி நாகலாந்து உடன்படிக்கையில் கையெழுத்திட வைத்தவர். மிகவும் திறமையான, அதேநேரம் கடுமையான கவர்னர் என்ற பெயர்பெற்ற ஆர்.என்.ரவி, தமிழகத்துக்கு வருகிறார்.

ஆர்.என்.ரவியை வரவேற்க முதல்-அமைச்சர் கூறிய, ‘தங்களது வருகை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், வளத்துக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கட்டும். தங்களை தமிழ்நாடு வரவேற்கிறது’ என்பதுதான் ஆர்.என்.ரவிக்கு தமிழக மக்கள் விடுக்கும் வரவேற்பு செய்தியாகும்.

Next Story