வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாருக்கு புகழ்!


வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாருக்கு புகழ்!
x
தினத்தந்தி 10 Oct 2021 8:25 PM GMT (Updated: 2021-10-11T01:55:13+05:30)

இன்றைக்கும் பல பள்ளிக்கூடங்களில் காலையிலும், மாலையிலும் நடக்கும் பிரார்த்தனை கூட்டங்களில் எல்லா மதங்களுக்கும் பொதுவான ஒரு பாடல் பாடப்படுகிறது. “ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவுவேண்டும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமைவேண்டும்” என்ற பாடல்தான் அது.

ஆனால், இதை பாடியது யார்? என்று பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. 5-10-1823-ம் ஆண்டு கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து 16 கி.மீ. தூரத்திலுள்ள மருதூர் என்ற சிற்றூரில் பிறந்த அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்பட்ட ராமலிங்க அடிகளார் பாடிய பாடல்தான். இந்தப்பாடலை அவர் சென்னை கந்தக்கோட்டத்தில் 9 வயதில் பாடியதாக வரலாறு இருக்கிறது.

“வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன். பசியால் இளைத்தே வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன். நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் நேர்உறக் கண்டுளம் துடித்தேன். ஈடில் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு இளைத்தவர் தமைக் கண்டே இளைத்தேன்” என்று பசியால் வாடுபவர்கள் கண்டு மனம் பதைபதைத்து வள்ளலார் பாடிய 6 ஆயிரம் பாடல்களின் திரட்டான திருவருட்பாவில் மனமுருக பாடியிருப்பது அவரது அருட்பெருங்கருணை உள்ளத்தை பறைசாற்றுகிறது.

உடலை வருத்தும் பசிபிணி போக்க வாடிய வள்ளலார், “சாதி, மத பேதங்களை போக்க சாதியும், மதமும், சமயமும் தவிர்த்தேன். சாத்திர குப்பையும் தவிர்த்தேன்” என்று பாடி சாதி, மத, பேதமற்ற சன்மார்க்கர்களாய் மக்கள் வாழ ஆசைப்பட்டார். அதற்காக கடலூரை அடுத்த வடலூரில் பசியால் வாடும் மக்களுக்கு உணவளிக்க 1867-ம் ஆண்டிலேயே சத்ய தர்ம சாலை கட்டி அவர் ஏற்றிவைத்த அடுப்பு இன்றளவும் எரிந்துகொண்டே இருக்கிறது. 1872-ம் ஆண்டு சத்யஞான சபையை கட்டினார். அதற்கு முன்பாக சமரச சன்மார்க்க சங்கத்தை தோற்றுவித்தார். “கடவுள் ஒருவரே. அவரை ஜோதி வடிவில் உண்மையான அன்பால் வழிபடவேண்டும்” என்பதுதான் வள்ளலாரின் கொள்கை. அதற்காகத்தான் வடலூரில் அவர் ஏற்றிவைத்த அருட்பெருஞ் ஜோதி தீபம் அணையா விளக்காக இன்றும் எரிந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் பசி தீர்க்கும் தலையாயப்பணி, மற்றொரு பக்கம் சாதி, மதம் கடந்த ஆன்மிகப்பணி மட்டுமல்லாமல், சாதி ஒழிப்பு, பெண்கள் விடுதலை போன்ற புரட்சிகரமான கொள்கைகளை கொண்ட அவர், ஒரு சமூக சீர்திருத்தவாதியாக தந்தை பெரியார் உள்பட பலரால் பாராட்டப்பட்டவர்.

இவ்வளவு சீரிய புகழைக்கொண்ட வள்ளலாருக்கு தமிழ்நாட்டில் சரியான கவுரவம் அளிக்கப்படவில்லையே என்றிருந்த பெரிய மனக்குறையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போக்கிவிட்டார். இந்த ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்போது வெளியிடப்பட்ட அறிவிப்பில், திருவருட்பிரகாச வள்ளலாரின் புகழைப் போற்றும் வகையில், “வள்ளலார் சர்வதேச மையம்” வடலூரில் அமைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வள்ளலாரின் பிறந்தநாளான அக்டோபர் 5-ந்தேதி இனி தனிப்பெருங்கருணை நாளாக கடைப்பிடிக்கப்படும். இந்த நாளில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து இறைச்சி கடைகளும் மூடப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

பசிப்பிணி நீக்கும் மருத்துவராக வாழ்ந்து காட்டிய வள்ளலாரின் “அருட்பெருஞ் ஜோதி!! தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி” என்ற ஆன்மநேய ஒருமைப்பாட்டு ஒளி இன்றும் அறியாமையை நீக்கி அன்பை ஊட்டிவருகிறது. இப்போது வடலூரில் 72 ஏக்கர் நிலப்பரப்பில் “வள்ளலார் சர்வதேச மையம்” அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை தமிழக அரசு தொடங்கிவிட்டது. அடுத்த ஆண்டு வள்ளலாரின் 200-வது ஆண்டு தொடங்கப்போகிறது. அவருக்கு பெருமை சேர்க்கும்விதமாக புதியதோர் யுகம் படைக்கும் முயற்சியாக இன்னும் பல திட்டங்களை அரசு நிறைவேற்றவேண்டும். அவர் எழுதிய திருவருட்பா, மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகியவற்றுள் கூறப்பட்டுள்ள முக்கிய கருத்துகள் பள்ளிக்கூடம், கல்லூரிகளில் பாடமாக கொண்டுவரவேண்டும். இன்றைய சமுதாயத்துக்கு வள்ளலார் பற்றி முழுமையாக தெரியவேண்டும்.


Next Story