பயங்கரவாதிகளை ஒழிக்க இதுவே தருணம்!


பயங்கரவாதிகளை ஒழிக்க இதுவே தருணம்!
x
தினத்தந்தி 12 Oct 2021 8:46 PM GMT (Updated: 12 Oct 2021 8:46 PM GMT)

‘‘பூமியின் சொர்க்கம்’’ என்று அழைக்கப்படும் காஷ்மீர், இன்று ‘‘இந்தியாவின் நரகம்’’ என்று அழைக்கப்படும் நிலையை எட்டிவிடுமோ? என்ற அச்சம் எல்லோர் மனதிலும் இருக்கிறது.

‘‘பூமியின் சொர்க்கம்’’ என்று அழைக்கப்படும் காஷ்மீர், இன்று ‘‘இந்தியாவின் நரகம்’’ என்று அழைக்கப்படும் நிலையை எட்டிவிடுமோ? என்ற அச்சம் எல்லோர் மனதிலும் இருக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலில் காஷ்மீர் சிக்கித்தவிக்கிறது. பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இயக்கங்களான லஷ்கர்-இ-தெய்பா, ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் தலிபான்களின் வேட்டைக்காடாக காஷ்மீரை ஆக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.

கடந்த வாரம் வியாழக்கிழமை ஸ்ரீநகரில் உள்ள அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் முதல்வராக பணிபுரிந்த சீக்கிய இனத்தை சேர்ந்த 44 வயது சுபிந்தர் கவூர் மற்றும் பண்டிட் இனத்தை சேர்ந்த தீபக்சந்த் என்ற ஆசிரியர் என இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக்கொன்றவர்கள் அவர்களை கொல்லும் முன்பு, எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்தி இருக்கின்றனர். அதற்கு 2 நாட்களுக்கு முன்புதான் பண்டிட் இனத்தை சேர்ந்த மருந்துக்கடை அதிபர் ஒருவர், பீகார் மாநிலத்தை சேர்ந்த சாலையோர வியாபாரி ஒருவர், அங்குள்ள டாக்சி ஸ்டேண்டின் தலைவர் ஒருவர் என வரிசையாக சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் மட்டும் 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கிடையில், ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதிகளோடு 4 இடங்களில் ராணுவத்தினர் நடத்திய மோதலில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய பயங்கரவாதிகளால் நேற்று முன்தினம் மட்டும் 5 ராணுவத்தினர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் பஞ்சாப், உத்தரபிரதேசம், கேரளாவை சேர்ந்தவர்கள்.

இந்த ஆண்டு இதுவரை பாதுகாப்பு படையை சேர்ந்த 27 பேரையும், அப்பாவி பொதுமக்கள் 28 பேரையும் பாகிஸ்தான் ஆதரவோடு இயங்கும் அமைப்பினர் சுட்டுக்கொன்றிருக்கிறார்கள். இந்த 28 பேரில் 4 பேர் உள்ளூர் இந்துக்கள். ஒருவர் சீக்கியர். 2 பேர் வெளியூரை சேர்ந்த இந்து தொழிலாளர்கள். 21 பேர் உள்ளூர் முஸ்லிம்கள். இவர்களில், ‘‘பள்ளிக்கூட முதல்வரையும், ஆசிரியரையும் துடிதுடிக்க கொலை செய்தது நாங்கள்தான்’’ என்று லஷ்கர்-இ-தெய்பாவின் துணை அமைப்பான ‘‘எதிர்ப்பு முன்னணி’’ என்ற அமைப்பு மார்தட்டிக்கொள்கிறது. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம்தான் அவர்களின் நோக்கத்தை புரியவைக்கிறது. இந்த ஆசிரியர்கள் கடந்த ஆகஸ்டு 15-ந்தேதி சுதந்திர தின நிகழ்ச்சியில், யாராவது மாணவர் கலந்துகொள்ளவில்லை என்றால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்ததாக கூறுகிறார்கள். அதற்காகத்தான் அவர்களை பயங்கரவாதிகள் தீர்த்துகட்டியிருக்கிறார்கள். மேலும், ‘‘வெளியூரிலிருந்து வந்தவர்கள், அடிவருடிகள், எந்த மதத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் விட்டுவைக்கமாட்டோம்’’ என்று அவர்கள் கொக்கரித்திருக்கிறார்கள்.

ஆக, இவர்களின் நோக்கம் இந்திய இறையாண்மைக்கு எதிரானதுதான் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. 1990-ம் ஆண்டு காஷ்மீர் பண்டிட்டுகள் மீது நடந்த கொடிய தாக்குதலால்தான் ஏராளமானவர்கள் அங்கிருந்து வெளியேறினர். 1998-ம் ஆண்டு 23 பண்டிட்டுகளும், 2000-ம் ஆண்டில் 35 சீக்கியர்களும் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். இப்போது மத்திய அரசாங்கம், வெளியேறிச்சென்ற பண்டிட்டுகள் திரும்பி வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், காஷ்மீரில் தொழில் முதலீடுகளையும், சுற்றுலா பயணிகளையும் ஈர்க்க எடுத்துக்கொண்டிருக்கும் முயற்சிகளுக்கு இடையேதான் இந்த படுகொலைகள் அரங்கேறியுள்ளன.

ஆசிரியர்களை படுகொலை செய்ய உள்ளூர் இளைஞர்களை மூளை சலவை செய்து, பணம், போதை மருந்துகளையும், கைத்துப்பாக்கிகளையும் கொடுத்து அவர்களை வைத்தே இந்த மாபாதக செயலை செய்து இருக்கிறார்கள். மத்திய அரசாங்கம் பொறுத்தது போதும், பாகிஸ்தான் ஆதரவு இயக்கங்களை கூண்டோடு ஒழிக்க முழு மூச்சில் ஈடுபடவேண்டும். அவர்களின் ஊடுருவல், ஆள் சேர்ப்பு, நிதி பின்புலம் போன்றவற்றை கண்டறியும் வகையில் உளவுப்பிரிவை வலுப்படுத்தவேண்டும். எல்லையில் பாதுகாப்பு படையை பலப்படுத்தவேண்டும். பதிலடி கொடுக்க முழுமூச்சில் ராணுவமும், போலீசாரும் இறக்கிவிடப்படவேண்டும். மொத்தத்தில், காஷ்மீரை அமைதி தவழக்கூடிய சொர்க்க பூமியாக மாற்ற அனைத்து ஏற்பாடுகளையும் எல்லா முனையில் இருந்தும் மத்திய அரசாங்கம் செய்யவேண்டும்.

Next Story