அறநிலையத்துறை கல்லூரிகளில் இந்துக்களுக்கு பணி!


அறநிலையத்துறை கல்லூரிகளில் இந்துக்களுக்கு பணி!
x
தினத்தந்தி 24 Oct 2021 8:59 PM GMT (Updated: 24 Oct 2021 8:59 PM GMT)

தமிழ்நாடு எண்ணற்ற புகழ் வாய்ந்த கோவில்களின் இருப்பிடமாகத் திகழ்கிறது. “கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம்” என்ற முதுமொழி தமிழ்நாட்டில்தான் உண்டு.

ஒவ்வொரு ஊரிலும் பல இந்துக் கோவில்கள் இருக்கின்றன. என்றாலும், தமிழக அரசுக்கு சொந்தமான இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டில், 36 ஆயிரத்து 627 திருக்கோவில்களும், 1,721 குறிப்பிட்ட அறக்கட்டளைகளும், 189 அறக்கட்டளைகளும் உள்ளன. திருக்கோவில்கள் வெறுமனே வழிபாடு செய்யும் தலங்களாக மட்டுமல்லாமல், அன்னதானம் வழங்குவது போன்ற பல அறப்பணிகளையும் செய்துவருகிறது.

திருக்கோவில்கள் சார்பில், பொதுக் கல்வியோடு ஆன்மிக நெறிகளையும், பண்பாடு மற்றும் சமய கோட்பாடுகளையும், இளமையில் இருந்தே பயிற்றுவிக்கும் நோக்கோடு, 5 கலை-பண்பாடு மற்றும் அறிவியல் கல்லூரிகள், ஒரு பாலிடெக்னிக் கல்லூரி உள்பட பல பள்ளிக்கூடங்களை சேர்த்து 53 கல்வி நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மிகவும் பாராட்டத்தக்க அம்சமாக காது கேளாதோர்-பேச இயலாதோர் பள்ளிக்கூடமும், பழனியிலுள்ள தண்டாயுதபாணி திருக்கோவில் சார்பில் நடத்தப்படுகிறது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பி.கே.சேகர்பாபுவும், ஆணையராக குமரகுருபரனும் பொறுப்பேற்றார்கள். இந்த இருவர் அணி செய்யும் சிறப்பான சேவையால், ஏராளமான ஆக்கிரமிப்பு கோவில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. தினமும் ஒரு கோவிலுக்காவது சென்று வசதிகளை மேம்படுத்தி வருகிறார்கள்.

இந்த ஆண்டு, இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில், 10 இடங்களில், அருகிலுள்ள திருக்கோவில்கள் சார்பில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக, சென்னை மயிலாப்பூரிலுள்ள கபாலீசுவரர் கோவில் பெயரில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொளத்தூரில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுவிட்டது. இந்த புதிய கல்லூரிக்காக உதவி பேராசிரியர்கள், உடற்பயிற்சி இயக்குனர், நூலகர் மற்றும் ஆசிரியர் அல்லாத அலுவலக பணிக்காக உதவியாளர், இளநிலை உதவியாளர், காவலர், துப்புரவாளர் பணிகளுக்கு தகுதியானவர் தேர்வு நடந்துவருகிறது.

இந்தத்தேர்வில் இந்துக்கள் மட்டுமே கலந்துகொள்ளவேண்டும் என்று தெரிவித்திருப்பது, அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்பட பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். “ஏற்கனவே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்திவரும் கல்வி நிறுவனங்களில், இந்துக்கள் மட்டுமல்லாது, எல்லா மதத்தினரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்துக்கள் மட்டுமே தேர்வுக்கு வரவேண்டும் என்று சொன்னது இதுதான் முதல்முறை” என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் இதுகுறித்து கருத்து தெரிவிக்கும்போது, “1959-ம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை சட்டம் பிரிவு 10-ல், இந்த சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக அமர்த்தப்பட்ட ஆணையர், கூடுதல் ஆணையர், இணை அல்லது துணை அல்லது உதவி ஆணையர் ஒவ்வொருவரும் மற்றும் வேறு அலுவலர் அல்லது பணியாளர் ஒவ்வொருவரும், எவரால் அமர்த்தப்பட்டிருந்தாலும் இந்து சமயத்தை வெளிப்படையாக ஏற்றுக்கொண்ட ஒருவராக இருக்கவேண்டும். மற்றும் அந்த சமயத்தை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டிருப்பதை விட்டுவிடும்போது அவ்வாறு பதவி வகிப்பதையும் விட்டுவிடுதல்வேண்டும் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதுபோல, கோவில்களின் கொடைகளை இந்து சமய கல்விக்கு வகைசெய்யப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களை நிறுவி பேணலாம் என்றும், பிரிவு 6 (5) -ன்படி பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்ற அறப்பணிகளுக்காகவும் செலவழிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது” என்று தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

ஆக, இந்து சமய மற்றும் அறநிலையத்துறை சட்டத்தின் அடிப்படையில்தான் கல்லூரிகள் தொடங்கப்படுகிறது, இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்படுகிறது என்பது அவர்களின் கூற்று. இதுவரை அப்படி நடக்கவில்லையே என்று கூறினாலும், இப்போது நடப்பது சட்டத்தின்படிதானே என்பது, இந்த நியமனங்களை ஆதரிப்போரின் கருத்தாக இருக்கிறது.


Next Story