சமையல் ருசிக்க தக்காளி விலை குறைய வேண்டும்!


சமையல் ருசிக்க தக்காளி விலை குறைய வேண்டும்!
x
தினத்தந்தி 25 Nov 2021 8:07 PM GMT (Updated: 25 Nov 2021 8:07 PM GMT)

இல்லத்தரசிகள் தினமும் சமைக்கும் குழம்பு, கூட்டு, பொரியல் போன்றவற்றுக்கு தக்காளி, வெங்காயம் அத்தியாவசிய தேவையாகும்.

இல்லத்தரசிகள் தினமும் சமைக்கும் குழம்பு, கூட்டு, பொரியல் போன்றவற்றுக்கு தக்காளி, வெங்காயம் அத்தியாவசிய தேவையாகும். தினசரி சமையல் பட்ஜெட்டிலும் இந்த இரண்டும் கண்டிப்பாக இடம்பெறும். மாதாந்திர பட்ஜெட்டிலும் தக்காளி, வெங்காயத்தின் விலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில், கடந்த சில நாட்களாக தக்காளி விலை கிலோ ரூ.150-க்கு மேல் சென்று பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஒரு கிலோ வாங்கியவர்கள் அரை கிலோ வாங்கினார்களே தவிர, தக்காளியை வாங்காமல் இருக்க முடியவில்லை. ஆப்பிள்தான் ஏழைகளுக்கு எட்டாக்கனி என்பார்கள். ஆனால், இப்போது ஆப்பிள் விலைக்கு சரிசமமாக தக்காளி விலையும் இருக்கிறது. ஒரு முட்டை விலையைவிட ஒரு தக்காளி விலை கூடுதலாக உள்ளது. ஆக, தக்காளியும் இப்போது ஏழைகளுக்கு எட்டாக்கனியாகிவிட்டது.

வெளிச்சந்தையைவிட குறைவான விலையில் பொதுமக்களுக்கு தக்காளியை கிடைக்கச் செய்ய, தமிழகம் முழுவதும் 65 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளிலும், நகர்ப்புறம் மற்றும் அதை சுற்றியுள்ள குறிப்பிட்ட நியாயவிலை கடைகளிலும் ரூ.85 முதல் ரூ.100 வரை ஒரு கிலோ தக்காளியை விற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், சென்னையில் தோட்டக்கலை துறை சார்பில் தக்காளி கிலோ ரூ.75-க்கு விற்கப்படுகிறது.

இந்த நடவடிக்கைகள் எல்லாம் சென்னை நகர மக்களுக்கு, அதுவும் இந்த கடைகளுக்கு செல்ல வாய்ப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே பயன்தருகிறதே தவிர, புறநகர் பகுதி மக்களுக்கும், கிராமப்புற மக்களுக்கும் இந்த விலை என்பது, இன்னமும் அவர்களுக்கு கைக்கு எட்டிய தூரத்தில் இல்லை. தக்காளி, செடி இனத்தை சேர்ந்த தாவரம். மழை காலம் வந்தாலே தக்காளிக்கு அலர்ஜி. செடியிலேயே அழுகிவிடுகிறது. பிப்ரவரி-மார்ச், ஜூன்-ஜூலை போன்ற மாதங்கள்தான் தக்காளிக்கு ஏற்ற சாகுபடி பருவம். ஆனால், நவீன தொழில்நுட்பம் மூலம் நிழல் வலை குடில்கள் அமைத்து, தக்காளியை கொடிபோல எந்த காலத்திலும் சாகுபடி செய்ய முடியும். தமிழ்நாட்டில் இந்த தொழில்நுட்பம் பெரிய அளவில் இல்லை, தக்காளியை சேமித்து வைக்கும் குளிர்பதன கிடங்குகளும் போதிய அளவில் இல்லை.

தமிழ்நாட்டில் தக்காளி சாகுபடி தேவையான அளவு இல்லாததால், கர்நாடகம், ஆந்திரா, மராட்டியம் போன்ற மாநிலங்களிலிருந்து லாரிகளில் கொண்டுவரப்பட்டு, தேவை பூர்த்திசெய்யப்படுகிறது. இப்போது, ஆந்திரா, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் பெரும்மழை பெய்து கொண்டிருப்பதால், செடியிலேயே தக்காளி பழங்கள் அழுகிவிட்டன. வடகிழக்கு பருவமழை காலம் ஜனவரி வரை நீடிப்பதால், அதுவரை இந்தநிலை தொடராமல் பார்த்துக்கொள்ள, தற்போது மழையில்லாத மராட்டியம் போன்ற மாநிலங்களில் இருந்து தக்காளியை கொண்டுவர ஏற்பாடு செய்யவேண்டும்.

சென்னை ஐகோர்ட்டில், தந்தை பெரியார் மொத்த தக்காளி வியாபாரிகள் சங்கம் ஒரு வழக்கை தொடர்ந்துள்ளது. அதில், “கொரோனா காலத்தில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மூடப்பட்ட 86 சென்ட் தக்காளி மைதானத்தை உடனடியாக திறக்கவேண்டும். வெளிமாநிலங்களில் இருந்து தக்காளியை ஏற்றிக்கொண்டுவரும் ஏராளமான லாரிகளுக்கு, இங்குதான் தக்காளியை இறக்க வசதியாக இருக்கும். இதை திறந்துவிட்டால் கிலோ ரூ.40 முதல் ரூ.50-க்குள் விற்க முடியும்” என்று முறையிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை இன்று நடக்கிறது.

அரசும் உடனடியாக தோட்டக்கலைத்துறை மூலம், தமிழ்நாட்டில் தக்காளி சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவும், பிரமாண்டமான குளிர்பதன சேமிப்பு கிடங்குகளை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்க இருக்கும் மாடி தோட்ட திட்டத்தில் தக்காளியை பயிரிட்டு குடும்ப தேவையை ஓரளவுக்கு பூர்த்திசெய்ய பொதுமக்கள் முயற்சிக்க வேண்டும். எதிர்காலத்தில் எந்த பருவ காலத்திலும், தக்காளி, வெங்காயம் மட்டுமல்லாமல், எந்த காய்கறியையும் விலை உயராமலும், தட்டுப்பாடு ஏற்படாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும்.

Next Story