“நம்மை காக்கும் 48”


“நம்மை காக்கும் 48”
x
தினத்தந்தி 26 Nov 2021 7:56 PM GMT (Updated: 26 Nov 2021 7:56 PM GMT)

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நாளில் இருந்தே, துறைகளின் பெயர்களாகட்டும், திட்டங்களின் பெயர்களாகட்டும், “தமிழ் மணம் கமழும்” வகையில் பெயர்களை சூட்டி வருகிறார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நாளில் இருந்தே, துறைகளின் பெயர்களாகட்டும், திட்டங்களின் பெயர்களாகட்டும், “தமிழ் மணம் கமழும்” வகையில் பெயர்களை சூட்டி வருகிறார். வேளாண்மை துறை அமைச்சரை, வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் என்றும், சுகாதாரத்துறை அமைச்சரை மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் என்றும் அழைக்கும் வகையில் பெயர்களை மாற்றினார்.

இதுபோல, அனைத்து திட்டங்களின் பெயர்களும் கேட்பதற்கு இனிமையாக இருக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, “மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி தடுப்பூசி, கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், இல்லம் தேடி கல்வி” என்று தண்டமிழ் தலைப்புகளில் அருந்தமிழ் பெயர்கள் திட்டங்களுக்கு சூட்டப்படுகின்றன. இப்போது, சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ கவனிப்பை அரசே மேற்கொள்ளும் வகையில், நம்மை காக்கும் 48 - அனைவருக்கும் முதல் 48 மணி நேர அவசர உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான இலவச மருத்துவ உதவி திட்டத்தை அறிவித்துள்ளார்.

சாலை பாதுகாப்பு - சாலை விபத்துகளை குறைப்பது - சாலை உயிரிழப்புகளை தடுப்பது குறித்து விரிவாக ஆலோசிப்பதற்காக முதல்-அமைச்சர் கூட்டிய கூட்டத்தில், சாலை பாதுகாப்பு மக்கள் இயக்கமாக மாற பள்ளி, கல்லூரி மாணவர்கள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி மற்றும் தன்னார்வ அமைப்புகள், விபத்தில் முதலுதவி செய்யும் பொதுமக்கள் அனைவருக்கும் பயிற்சி மற்றும் விழிப்புணர்வை உருவாக்கும் வகையில், “இன்னுயிர் காப்போம் - உதவி செய் திட்டம்” செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விபத்துகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், கடந்த 5 ஆண்டுகளாக குறைந்து வருகிறது. 2016-ம் ஆண்டில் நடந்த 71,431 விபத்துகளில் 17,218 பேரும், 2019-ம் ஆண்டில் நடந்த 57,728 விபத்துகளில் 10,525 பேரும் உயிரிழந்தனர். 2020-ம் ஆண்டில் விபத்துகளின் எண்ணிக்கை 45,489 ஆகவும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை 8,060 ஆகவும் குறைந்துள்ளது மனநிறைவு அளிக்கிறது. இருந்தாலும், சாலை விபத்து மற்றும் உயிரிழப்புகளில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் தமிழ்நாட்டில், இன்னும் அதிகமாக குறையவேண்டும்.

தமிழ்நாடு இப்போது எடுத்துவரும் முயற்சிகளால் நிச்சயமாக எதிர்காலத்தில் இது சாத்தியமாகும் என்பது வல்லுனர்களின் கருத்து. 1 லட்சம் மக்கள்தொகையில் சாலை விபத்துகளின் இறப்பு விகிதம் 23.9 என்று இருப்பது குறைக்கப்படவேண்டும், சாலை பயணங்கள் பொதுமக்களுக்கு மிகவும் பாதுகாப்பான ஒன்றாக அமைந்திடும் வகையில், சாலையில் உயிரிழப்புகளை தடுப்பதற்கும், விபத்துகளை தவிர்ப்பதற்குமான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவேண்டும் என்பது முதல்-அமைச்சரின் நோக்கம்.

விபத்தில் சிக்கியவர்களின் உயிரிழப்பை தடுக்கவேண்டும் என்றால், “கோல்டன் ஹவர்” என்று சொல்லப்படும் ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்கவேண்டும் என்பது உலகம் முழுவதும் ஏற்றுக்கொண்ட ஒரு கருத்தாகும். அந்த வகையில், சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும். அதன்பிறகு, 48 மணி நேர சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்றுக்கொள்வது மிகவும் பாராட்டுக்குரியது. சாலையோரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் என மொத்தம் 609 மருத்துவமனைகள் இதற்கு என்று கண்டறியப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

இதில் மிகவும் வரவேற்புக்குரியது, முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை இல்லாதவர்களும், பிற மாநிலத்தவர், வேற்று நாட்டவர் என யாவருக்கும் இந்த திட்டத்தின்கீழ் மருத்துவம் செய்யப்படும் என்று அறிவித்திருப்பது மு.க.ஸ்டாலின் அரசின் கருணையை காட்டுகிறது. விபத்துகளை தடுப்பதற்காக பல்துறை நிபுணர்களை உள்ளடக்கிய சாலை பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படும் என்று அறிவித்திருப்பது, விபத்துகளை குறைப்பதற்கான திசையை நோக்கி எடுத்துச் செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.

Next Story