அதிர்ச்சியூட்டும் மருந்து விலை உயர்வு!


அதிர்ச்சியூட்டும் மருந்து விலை உயர்வு!
x
தினத்தந்தி 5 April 2022 7:55 PM GMT (Updated: 2022-04-06T01:25:32+05:30)

கடந்த சில நாட்களாகவே குடும்ப பட்ஜெட்டில் பெரிய துண்டு விழுந்து கொண்டிருக்கிறது.

கடந்த சில நாட்களாகவே குடும்ப பட்ஜெட்டில் பெரிய துண்டு விழுந்து கொண்டிருக்கிறது. அன்றாடம் பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்து கொண்டே போகிறது. ‘இது எங்களுக்கு அத்தியாவசியம். ஆனால், இவ்வளவு விலை உயர்வை தாங்கிக்கொண்டு, எங்களுடைய மொபட்டில், ஸ்கூட்டரில் பெட்ரோல் போட்டு பயன்படுத்த முடியாது’ என்ற நோக்கில், பலர் வீட்டில் வைத்திருந்த சைக்கிளை துடைத்து, ரிப்பேர் செய்து பயன்படுத்த தொடங்கிவிட்டனர். மேலும் சிலர் மோட்டார் வாகன பயன்பாட்டை குறைத்துக்கொண்டனர். விவசாயிகள் டிராக்டரை பயன்படுத்தித்தான் ஆக வேண்டும். ஆனால், இந்த டீசல் விலை உயர்வை எங்களால் தாங்க முடியவில்லை என்று மனம் நொந்து கூறுகிறார்கள்.

இது மட்டுமல்லாமல், மற்ற பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. விலைவாசி உயர்வுக்கு பெட்ரோல்-டீசல் விலை உயர்வும் எரிகிற தீயில் எண்ணெய் விடுவதுபோல் காரணமாகிவிட்டது. ஆனால், விலைவாசி உயர்வுக்கு ஏற்ற வகையில், மக்களின் வருமானம் உயரவில்லை. குறிப்பிட்ட நிலையான வருமானத்தை வைத்துக்கொண்டு, பெருகிவரும் விலைவாசி உயர்வை சமாளிக்க முடியாமல், குடும்ப பட்ஜெட்டில் துண்டு விழுவது அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. மற்ற பொருட்கள் விலை உயர்ந்தால், ஒரு பொருளுக்கு பதிலாக மாற்றுப்பொருளை பயன்படுத்த முடியும் அல்லது பயன்பாட்டை குறைத்துக்கொள்ள முடியும். ஆனால், மருந்து விலை அப்படி அல்ல. நோய்வாய்ப்பட்டவர்கள் தொடர்ந்து உயிர்வாழ வேண்டும் என்றால், நாள்தோறும் உட்கொள்ளும் மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். போடவேண்டிய ஊசியை போட்டுத்தான் ஆகவேண்டும். அதற்கு ஒரேயொரு எடுத்துக்காட்டு, நீரிழிவு நோய்க்காக சாப்பிடும் மாத்திரைகள், போட்டுக்கொள்ளும் இன்சுலின் மருந்து.

இந்த நிலையில், இப்போது அத்தியாவசிய மருந்துகளின் விலையையெல்லாம் 10.70 சதவீதம் உயர்த்திக்கொள்ள இந்திய மருந்து விலை நிர்ணய ஆணையம் அனுமதித்துள்ளது. அட்டவணையில் உள்ள 872 மருந்துகள், தேசிய அத்தியாவசிய மருந்து பட்டியலில் இருக்கிறது. அந்த மருந்துகள் எல்லாம் விலை உயரப்போகின்றன. இதுவரையில் இல்லாத விலை உயர்வாக இந்த மருந்து விலை உயர்வு இருக்கிறது. சாதாரண வலிநிவாரணி மருந்துகள், ஆன்டிபயாடிக்குகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள், குறிப்பாக பாரசிட்டமால், அசித்ரோமைசின் போன்ற ஆன்டிபயாடிக்குகள், அனீமியா எதிர்ப்பு மருந்துகள், வைட்டமின்கள், காய்ச்சல், சரும நோய்கள், இதயநோய்கள், ரத்த அழுத்தம், ஏன், கொரோனா சிகிச்சைக்குப் பயன்படும் மருந்துகள்கூட விலை உயருகிறது.

ஆண்டுதோறுமே இவ்வாறு விலை உயர்ந்தாலும், கொரோனா பாதிப்பால் மக்கள் தங்கள் வருவாயில் பெரும் பாதிப்பை அடைந்துள்ள நிலையில், இந்த மருந்து விலை உயர்வை நிச்சயமாக தாங்க முடியாது. இந்த வலியை தாங்க வேண்டுமென்றால், விலை குறைவான ஜெனரிக் மருந்துகளை மக்கள் பயன்படுத்த தொடங்கலாம். ஜெனரிக் மருந்து என்பது, தயாரிக்கும் கம்பெனி பெயர் குறிப்பிடாமல், ஊசி மற்றும் மருந்து, மாத்திரைகளை அதன் ரசாயன கூறு அடிப்படையிலான பெயரில் விற்கும் மருந்துகளாகும்.

எடுத்துக்காட்டாக, மெட்டாசின், டோலோ-650 என்ற பெயரில் இல்லாமல், பாரசிட்டமால் என்ற பெயரில் இந்த மாத்திரைகள் இருக்கும். மத்திய அரசாங்கத்தின் மலிவுவிலை மருந்து கடைகளில் இந்த ஜெனரிக் மருந்துகளே விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், ஜெனரிக் மருந்துகளில் தரமிருக்காது என்ற பயம் மக்களிடம் இருக்கிறது. அந்தப் பயத்தை நீக்க மத்திய அரசாங்கம் முயற்சி செய்ய வேண்டும்.

இங்கிலாந்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 16 வயதுக்கு குறைந்தவர்களுக்கும் மருந்து கடைகளில் இலவசமாக மருந்துகள் வழங்கப்படுகின்றன. அதுபோன்ற சலுகைகளை வழங்க மத்திய அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும்.

இப்போதைய சூழ்நிலையில், அத்தியாவசிய மருந்துகளை தயாரிக்கும் மருந்து கம்பெனிகளுக்கு அரசு வேறு ஏதாவது மானியம், சலுகைகள் கொடுத்து, மருந்து விலை உயராமல் தடுக்க முடியுமா என்பது மருந்தில்லாமல் உயிர் வாழ முடியாத மக்களின் மன்றாட்டு கோரிக்கையாக இருக்கிறது.

Next Story