இப்படி உயர்ந்து கொண்டே போனால், எப்படி தாங்குவது?


இப்படி உயர்ந்து கொண்டே போனால், எப்படி தாங்குவது?
x
தினத்தந்தி 6 April 2022 11:06 PM GMT (Updated: 6 April 2022 11:06 PM GMT)

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு என்பது மிகக்குறைந்த எண்ணிக்கையிலுள்ள செல்வந்தர்களை மட்டும் பாதிப்பதில்லை.

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு என்பது மிகக்குறைந்த எண்ணிக்கையிலுள்ள செல்வந்தர்களை மட்டும் பாதிப்பதில்லை. பெரும்பாலான நடுத்தர, ஏழை மக்கள் குறிப்பாக விவசாயிகளை நேரடியாக பாதிக்கிறது. விவசாயிகளுக்கு முக்கியத்தேவையாக விளங்கும் ஆயில் மோட்டார் பம்பு செட்டுகள், டிராக்டர்களுக்கு டீசல்தான் அத்தியாவசிய தேவையாகும். இருசக்கர வாகனம், கார், ஆட்டோ-ரிக்‌ஷா, லாரி, டாக்சி வைத்திருப்பவர்கள் எல்லோருமே இந்த விலை உயர்வால் நேரடியாக பாதிக்கப்படுகிறார்கள். இதன் தாக்கம் மறைமுகமாக விலைவாசி உயர்வுக்கு ஒரு காரணமாக அமைந்துவிடும்.

எடுத்துக்காட்டாக, சரக்கு லாரிகள் கூடுதல் விலை கொடுத்து டீசல் வாங்கினால், அதற்கு வாடகை கொடுப்பதை காரணமாக வைத்து மற்ற பொருட்களின் விலையும் உயர்ந்துவிடும். அதனால்தான் பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று தினமும் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. கண்டன அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், ‘பெட்ரோல்-டீசல் விலை மீது விதிக்கும் கலால்வரியை தங்க சுரங்கமாக மத்திய அரசாங்கம் கண்டுபிடித்திருக்கிறது. தங்கத்துக்காக சுரங்கத்தை தோண்டவேண்டிய முயற்சியில் ஈடுபட வேண்டாம். கலால்வரியை உயர்த்தினால் பெட்ரோல்-டீசலை வாங்குபவர்களே தங்கத்தை தோண்டியெடுத்து அரசாங்கத்தின் கையில் கொடுப்பதுபோல, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் அரசாங்கத்துக்கு வழங்கிவருகிறார்கள்’ என்று கூறினார். 2014-ம் ஆண்டு மே மாதம் பெட்ரோல் மீதான கலால்வரி 9 ரூபாய் 20 காசாகவும், டீசல் மீதான கலால்வரி 3 ரூபாய் 46 காசாகவும் இருந்தது. ஆனால் தற்போது பெட்ரோலுக்கு 26 ரூபாய் 90 காசும், டீசலுக்கு 21 ரூபாய் 80 காசும் மத்திய அரசாங்கம் கலால்வரியாக விதித்துவருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கச்சா எண்ணெய் இந்தியாவில் பெரும்பாலும் கிடைப்பதில்லை. நமக்கு தேவையான கச்சா எண்ணெயில் 85 சதவீதம் வெளிநாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்கிறோம். ஈராக், சவுதிஅரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், நைஜீரியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறோம். மொத்த இறக்குமதியில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகத்தான் ரஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் ஒரு பீப்பாய்க்கு 108 அமெரிக்க டாலராக இருந்தது. அப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.71.41 ஆகவும், டீசல் விலை ரூ.55.49 ஆகவும் இருந்தது. ஆனால் நேற்று கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 107.2 அமெரிக்க டாலராக இருந்தது. இது 2014-ல் விற்ற விலைக்கும் குறைவு. அதேநேரத்தில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசாகவும், டீசல் 100 ரூபாய் 94 காசாகவும் சதம் அடித்து எல்லோரையும் சஞ்சலப்படுத்துகிறது. ‘2014, 2015-ல் பெட்ரோல், டீசல் மீதான கலால்வரி மூலம் ரூ.1 லட்சத்து 72 ஆயிரத்து 65 கோடி வசூலிக்கப்பட்ட நிலையில், கடந்த 2021-2022-ல் ரூ.4 லட்சத்து 16 ஆயிரத்து 794 கோடி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது’ என்று ப.சிதம்பரம் கூறுகிறார்.

இப்போது சரக்கு சேவைவரி மூலம் அரசாங்கத்துக்கு அபரிமிதமான வருமானம் கிடைத்து வருகிறது. மார்ச் மாதத்தில் மட்டும் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 95 கோடி வருமானம் கிடைத்து, பெரிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே சரக்கு சேவைவரி மூலம் இவ்வளவு வருமானம் கிடைக்கும் நிலையில், பெட்ரோல்-டீசல் மீதான வரியில் சீர்திருத்தம் செய்ய வேண்டிய சரியான நேரம் இதுதான். ஒன்று கலால் வரியை குறைக்க வேண்டும் அல்லது சரக்குசேவைவரி வளையத்துக்குள் பெட்ரோல்-டீசல் விலையை கொண்டுவர வேண்டும். 137 நாட்களாக 5 மாநில தேர்தல் இருந்த காரணத்தால், பெட்ரோல்-டீசல் விலை உயராமல் இருந்த நிலையில், கடந்த மாதம் 22-ந்தேதி முதல் நேற்று வரையில், இடையில் 2 நாட்களை தவிர, தொடர்ந்து விலை உயர்ந்துகொண்டே வருவதை பார்த்து, இப்படி விலை உயர்ந்துகொண்டே போனால் நாங்கள் எப்படி தாங்குவது? என்பதுதான் மக்களின் கேள்வியாக இருக்கிறது.

Next Story