‘ரெப்போ விகிதம்’ மாற்றத்தால் வீட்டுக் கடன் வட்டி குறைய வாய்ப்பு


‘ரெப்போ    விகிதம்’    மாற்றத்தால்    வீட்டுக்    கடன்    வட்டி    குறைய    வாய்ப்பு
x
தினத்தந்தி 13 April 2019 4:30 AM IST (Updated: 12 April 2019 4:36 PM IST)
t-max-icont-min-icon

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் தலைமையில் இந்த மாதம் நடந்த நிதிக் கொள்கை குழு கூட்டத்தில் ‘ரெப்போ ரேட்’ மற்றும் ‘ரிவர்ஸ் ரெப்போ ரேட்’ ஆகியவற்றை 0.25 சதவிகிதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டது.

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் தலைமையில் இந்த மாதம் நடந்த  நிதிக் கொள்கை குழு கூட்டத்தில் ‘ரெப்போ ரேட்’ மற்றும் ‘ரிவர்ஸ் ரெப்போ ரேட்’ ஆகியவற்றை 0.25 சதவிகிதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் பெறும் கடன்களுக்கான வட்டி (ரெப்போ ரேட்) 6.25 என்ற அளவிலிருந்து 6 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் வர்த்தக வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான வட்டி (ரிவர்ஸ் ரெப்போ ரேட்) 6 என்ற அளவிலிருந்து 5.75 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கு நிர்ணயிக்கும் வட்டி விகிதம், ‘ரெப்போ ரேட்’ என்றழைக்கப்படுகிறது. இதுபோலவே வர்த்தக வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான அடிப்படை வட்டி விகிதம், ‘ரிவர்ஸ் ரெப்போ’ என அழைக்கப்படுகிறது. பணவீக்க விகிதத்தைக் கருத்தில் கொண்டு இந்த வட்டி விகிதம் அவ்வப்போது மாற்றியமைக்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த பிப்ரவரி–2019 மாதம், ரெப்போ விகிதம் மாற்றி அமைக்கப்பட்டிருந்தது. 

அதாவது, 6.50 என்ற அளவிலிருந்து 0.25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் அதில் 0.25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ரெப்போ விகிதம் 6 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் ரிசர்வ் வங்கி ‘ரெப்போ ரேட்’ வட்டியைக் குறைத்துக் கொண்ட போதிலும், வங்கிகள் 0.05 முதல் 0.10 சதவிகிதம் வரையிலான வட்டிக் குறைப்பை மட்டுமே அளித்ததாக நிதி ஆலோசகர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

தற்போதைய, ரெப்போ விகிதப்படி ரூ.30 லட்சம் வீட்டுக் கடனுக்கு, 15 வருட தவணைக்கால அளவில் 8.75 சதவிகிதம் வட்டி விகிதப்படி மாதாந்திர தவணையாக ரூ.29,983 செலுத்த வேண்டிவரும். தற்போதைய நிலவரப்படி வங்கிகள் 0.25 என்ற அளவுக்கு வட்டி விகிதத்தைக் குறைத்து 8.50 சதவிகிதமாக அறிவித்தால் மாதாந்திர தவணை ரூ.29,542–ஆக குறையும். அதனால், திருப்பிச் செலுத்தப்படும் கடன் தொகையில் ரூ.79,380 குறையும் என்பது கவனிக்கத்தக்கது.

Next Story