வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடும் பிரம்மஸ்தானம்
வீடு மற்றும் மனைகளுக்கு 4 பிரதான திசைகள மற்றும் 4 கோண திசைகள் ஆகியவை ஒன்றிணைந்த 8 திசைகள் பற்றி அனைவரும் அறிவோம். அவற்றில் 9-வது திசையாக உள்ள பிரம்மஸ்தானம் பற்றி வாஸ்து சாஸ்திரத்தில் உயர்வாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு மனையின் மையப்பகுதியான பிரம்மஸ்தானத்தில் தேவர்கள் வசிப்பதாக வாஸ்து சொல்கிறது. அதனால், பழைய காலங்களில் வானம் பார்த்த வகையில் பிரம்மஸ்தானத்தை திறந்த வெளியாக விடப்பட்ட வீடுகள் அமைக்கப்பட்டன. அத்தகைய பெரிய வீடுகள் இன்றும் கிராமப்புறங்களில் இருப்பதை பலரும் கவனிக்கலாம். அவை தொட்டிக்கட்டு வீடுகள் என்று அழைக்கப்படுகின்றன.
அந்த வீடுகளின் அமைப்புப்படி நல்ல காற்றோட்டமும், வெளிச்சமும் எளிதாக கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மனையின் பிரம்மஸ்தானத்தை கண்டறிய மூன்று விதமான வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. அவை பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.
முதலாவது முறை
ஒரு மனையின் கட்டிடப் பரப்பு அமைய உள்ள மனைப்பகுதியை 64 சம அளவுகள் கொண்ட பாகங்களாகப் பிரிக்கவேண்டும். அதன் வடக்கு மற்றும் தெற்கு ஆகிய திசைகளில் 3 பாகங்களும், கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய திசைகளில் 3 பாகங்களும் தவிர்த்து, மையத்தில் எஞ்சியுள்ள பகுதி பிரம்மஸ்தானம் ஆகும். இது கட்டிடம் அமைய உள்ள பரப்பில் 16-க்கு ஒரு பங்கு என்ற அளவாக அமையும்.
இரண்டாவது முறை
இந்த முறையின்படி வீடு அமைய உள்ள கட்டிடப் பரப்பை 16 சம பாகங்களாகப் பிரிக்க வேண்டும். அதில் மையத்தில் உள்ள 4 பாகங்கள் பிரம்மஸ்தானம் ஆகும். இதன்படி கட்டிடம் அமைய உள்ள மொத்தப் பரப்பில் நான்கில் ஒரு பாகம் ஆகும். அதைச் சுற்றிலும் உள்ள நான்கில் மூன்று பாகம் பங்கில் அறைகள் அமைத்து, பிரம்மஸ்தானத்தைத் திறந்த வெளியாக விடலாம்.
மூன்றாவது முறை
இதன்படி பிரம்ம ஸ்தானத்தை எளிதாக நிர்ணயம் செய்யலாம். கட்டிடம் அமைய உள்ள நிலப்பரப்பை 9 சம பாகங்களாகப் பிரிக்கும் நிலையில், மையத்தில் உள்ள ஒரு பங்கு பிரம்மஸ்தானம் ஆகும். இம்முறையின்படி பிரம்மஸ்தானம் மொத்தக் கட்டடப் பரப்பில் ஒன்பதில் ஒரு பங்கு ஆகும்.
அறை அமைப்புகள்
வீட்டின் மையமான பிரம்ம ஸ்தானத்தில் திறந்தவெளி விட்டு வீடு கட்ட முடியவில்லை எனும் நிலையில், ஹால், டிராயிங் ரூம் அல்லது லிவிங் ரூம் ஆகியவற்றை அந்தப் பகுதியில் அமைத்துக்கொள்ளலாம். பிரம்மஸ்தானப் பகுதியில் சமையலறை, கழிவறை, குளியலறை, லிப்ட், மின்சார அமைப்புகள், கிணறு, தரையடி தண்ணீர்த் தொட்டி, பேஸ்மெண்டு மற்றும் கழிவு நீர் தொட்டி ஆகியவை அப்பகுதியில் அமைப்பது கூடாது. ஹால் அமைக்கும்போது பெரிய அளவில் ஜன்னல்கள் வைத்து, காற்றும், வெளிச்சமும் நன்றாக வீட்டிற்குள் நுழையுமாறு செய்வது சிறப்பானது.
மேற்கூரை பிரம்மஸ்தான அமைப்பு
தனி வீடுகள் அல்லது மற்ற கட்டமைப்புகளுக்கான பிரம்மஸ்தானப் பகுதி திறந்த வெளியாக விடப்பட்டால் கூரையின் இப்பகுதியை குறைந்தபட்சம் 2 அடி உயரத்தில் நான்கு புறமும் சுவர் அமைத்து, மேற்கூரையை அமைக்கவேண்டும். அந்த நான்கு சுவர்களில் காற்றும், வெளிச்சமும் எளிதாக உள்ளே வர போதுமான இடைவெளி விடவேண்டும். பல மாடிகள் கொண்ட கட்டமைப்பிலும் உச்சியில் உள்ள மாடியின் கூரை இந்த அமைப்பில் இருக்கவேண்டும். மழை நீர் கட்டிடத்துக்குள் வராமல் தடுக்க தக்க ‘பீடிங்’ அமைத்து கண்ணாடிகளை பொருத்திக்கொள்ளலாம்.
கூம்பு வடிவம்
இன்றைய காலகட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் வெளிச்சம் உள்நுழைய அமைக்கப் படும் Li-ght Sh-aft பிரம்மஸ்தானத்தில் அமைக்கப்படுவது சிறந்தது. பிரம்மஸ்தானம் அமைக்கப்பட்ட கூரை கூம்பு வடிவில் அதாவது பிரமிடு வடிவத்தில் இருப்பதை வாஸ்து வல்லுனர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். வீடுகளில் பிரம்மஸ்தானப் பகுதியில் செயற்கை நீரூற்று அமைப்பது நல்ல பலன்களை அளிக்கும் என்ற வாஸ்து ரீதியான நம்பிக்கை பரவலாக உள்ளது.
Related Tags :
Next Story