‘பத்திரப் பதிவு கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்..’ -துணை முதல்வர் தகவல்


‘பத்திரப் பதிவு கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்..’ -துணை முதல்வர் தகவல்
x
தினத்தந்தி 28 Sep 2019 5:27 AM GMT (Updated: 28 Sep 2019 5:27 AM GMT)

தமிழகத்தில் பத்திரப்பதிவு கட்டணத்தை குறைக்க தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று இரண்டு வாரங்களுக்கு முன்னர் திருவேற்காட்டில் நடந்த தனியார் கட்டுமான நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு கடந்த 2017-ம் ஆண்டு பத்திரப்பதிவுக்கான கட்டணத்தை உயர்த்தி அறிவித்ததை தொடர்ந்து ரியல் எஸ்டேட் வர்த்தக நிலவரம் சற்றே மந்த நிலையை அடைந்ததாக பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து. ஜி.எஸ்.டி வரி, டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தனை, விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதில் கொண்டு வரப்பட்ட சீர்திருத்தங்கள் ஆகிய திட்டங்கள் காரணமாக ரியல் எஸ்டேட் துறை மேலும் மந்த நிலையை அடைந்ததாகவும் ரியல் எஸ்டேட் வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், தமிழகத்தில் சொத்து வழிகாட்டி மதிப்பை தமிழக அரசு உயர்த்தியதால், நிலம், வீடு வாங்குவோர் பத்திரப்பதிவுக்காக அதிக தொகை செலுத்த வேண்டிய சூழல் உருவானது. அதனால், பத்திரப்பதிவு குறைந்து விட்டதாகவும் பலர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் பத்திரப்பதிவுக் கட்டணத்தை குறைத்து, மாற்றியமைப்பது தொடர்பாக முதல்வரிடம் கலந்துபேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், கட்டுமானத் துறையில் ஒற்றைச் சாளர முறையில் வீடுகள் கட்டுவதற்கான அனுமதி அளிப்பதற்கான நடவடிக்கையும் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார். மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் இதுவரை வீட்டு வசதி வாரியம் மூலம் 13 லட்சம் வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதில் 6 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story