நில உரிமையாளர்களுக்கு நலம் தரும் கூட்டு கட்டுமான திட்டம்
முதலில், நிலம் அல்லது மனை உரிமையாளர், கட்டுனருக்கு பொது அதிகார ஆவணம் எழுதிக் கொடுக்க வேண்டும்.
நிலம் அல்லது மனை உரிமையாளருக்கு சொந்தம், அதில் கட்டியுள்ள குடியிருப்பு கட்டுனருக்கு சொந்தம் என்ற அடிப்படையில் இருவருக்கிடையில் ‘ஜாயிண்ட் வென்ஜர்’ என்ற கூட்டுக் கட்டுமானத் திட்டம் (JOINT VENTURE) செயல்படுத்தப்படுகிறது. அதில், மனை உரிமையாளரது பங்காக அளிக்கப்பட்ட வீடுகள் தவிர, மற்ற வீடுகளை விற்பனை செய்து, கிடைத்த லாபத்தில் மனை உரிமையாளருக்கும், கட்டுனருக்கும் சம பங்கு என்பது இந்த திட்டத்தின் அடிப்படையாகும். ‘ஜாயிண்டு வென்ஜர்’ திட்டத்திற்கான கூட்டு கட்டுமான திட்ட ஆவணத்தை (JOINT VENTURE AGREEMENT) பதிவு செய்து கொள்வது முக்கியம். பதிவுக்கு முன்னர் கவனிக்க வேண்டிய விஷயங்களை இங்கே காணலாம்.
முதலில், நிலம் அல்லது மனை உரிமையாளர், கட்டுனருக்கு பொது அதிகார ஆவணம் எழுதிக் கொடுக்க வேண்டும். அதில், பிளான், அப்ரூவல், கார்ப்பரேஷன் மற்றும் பெருநகர வளர்ச்சி குழுமம் போன்ற அலுவலகங்களில் மனை உரிமையாளர் பேரில் அனுமதி பெறவும், கட்டிடம் கட்ட, மின் இணைப்பு பெற மற்றும் கட்டி முடித்த அவரது பகுதிகளை மட்டும் விற்பனை செய்வது ஆகிய விவரங்களை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
* பொது அதிகார ஆவணத்தில், மனை உரிமையாளர் மற்றும் கட்டுனர் பற்றிய விவரங்கள் தெளிவாக இருக்க வேண்டும். நிலத்தின் உரிமையாளருக்கு சொத்து எந்த கையில் கிடைத்தது என்ற விவரமும் அவசியமானது. மனை உரிமையாளர், சம்பந்தப்பட்ட இடத்தில் எவ்விதமான வில்லங்க, விவகாரமும் இல்லை என்ற ஷரத்தை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
* மனை உரிமையாளருக்கு, கட்டுனர் ஏதேனும் முன் பணம் கொடுத்திருந்தால் அது பற்றியும், அந்த பணத்தை திரும்பவும் கட்டுனருக்கு தரப்பட வேண்டுமா என்பதையும் குறிப்பிட வேண்டும்
* மனை உரிமையாளர் மற்றும் கட்டுனர் இருவருக்கிடையில் நிலம் மற்றும் கட்டுமானம் ஆகியவற்றில் எந்த விகிதத்தில் பங்கு அளிக்கப்பட்டுள்ளது என்ற விஷயத்தையும் தெரிவிக்க வேண்டும்.
* ஒப்பந்தத்தின்படி கட்டுனர் எவ்வளவு நாட்களுக்குள் கட்டுமான பணிகளை முடிக்க இயலும் என்ற கால அவகாசத்தை தீர்மானம் செய்து, அதற்கான ஷரத்தையும் தெளிவாக குறிப்பிட வேண்டும்.
* கட்டுனரால் கட்டி முடித்து, அளிக்கப்பட்ட பகுதிக்கு ஈடாக மனை உரிமையாளர் வழங்கும் பிரிக்கப்படாத நிலத்தின் பாகம் குறித்து (UDS) தகுந்த ஆவணங்களை அளிப்பது பற்றிய தகவல்களும் ஒப்பந்தத்தில் சொல்லப்பட வேண்டும்.
* நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள், கட்டிட பணிகளை முடித்து, ஒப்படைக்க இயலாத நிலையில், நில உரிமையாளருக்கு கட்டுனர் அளிக்க வேண்டிய மாத வாடகை பற்றிய ஷரத்து பற்றியும் குறிப்பிட வேண்டும். அதனால், கால தாமதம் காரணமாக ஏற்படும் மனச் சங்கடங்கள் தவிர்க்கப்படும்.
* மனை உரிமையாளருக்கு சேர வேண்டிய நிலம் மற்றும் கட்டிட அளவுகள் மற்றும் கட்டுனருக்குச் சேர வேண்டிய நிலம் மற்றும் கட்டிட அளவுகள் ஆகியவை குறித்த தகவல்கள் தெளிவாக இருக்க வேண்டும்.
* கட்டுமானப் பணிகள் முடிந்த பின்னர், மனை உரிமையாளரிடம் சம்பந்தப்பட்ட கட்டிடம் மற்றும் குறிப்பிட்ட பகுதிக்கான நில உரிமை ஆகியவற்றை கட்டுனர் அளிக்க வேண்டும். பணி நிறைவு சான்றிதழ் மற்றும் சுவாதீன ஒப்படைப்பு கடிதம் (Possession Handover Certificate) ஆகியவற்றை கட்டுனரிடமிருந்து, மனை உரிமையாளர் பெற்றுக் கொள்வது நல்லது.
Related Tags :
Next Story