எதுபோன்று ஜன்னல்களை வீட்டிற்கு தேர்ந்தெடுக்கலாம்?
ஒவ்வொரு வீட்டிற்கும் ஜன்னல்கள் மிகவும் இன்றியமையாத ஒன்றாகவே இருந்து வருகின்றது.வீடுகளில் வைக்கப்படும் ஜன்னல்கள் இயற்கை ஒளி மற்றும் காற்றோட்டத்தை வீட்டிற்கு வழங்குவதில் முதன்மையாக செயல்படுகின்றன.
*நம் வீட்டிற்கு ஏற்ற சரியான ஜன்னல்களை தேர்ந்தெடுத்து அமைக்கும் பொழுது அவை வீட்டில் கட்டமைப்பிற்கு மேலும் அழகைக் கொடுக்கிறது.
*சரியான அளவு மற்றும் வண்ணத்துடன் அமைக்கப்படும் ஜன்னல்கள் வீட்டிற்கு கூடுதல் பொலிவைத் தரும்.
*ஜன்னல்களுக்கு ஏற்ற ஃபிரேம்களை அலுமினியம், மரம், வினைல்,ஃபைபர் கிளாஸ் போன்றவற்றில் எதைத் தேர்ந்தெடுத்து செய்தால் அவை நீண்ட நாள் உழைப்பவை, குறைந்த பராமரிப்பு தேவைப்படுபவை என்பதையெல்லாம் கருத்தில் கொண்டு அவற்றின் தரத்திற்கு முக்கியத்துவம் அளித்து சிறந்தவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும்.
*சரியான அளவிலான கண்ணாடிகளால் ஜன்னல்கள் அமைக்கப் படும்பொழுது அவை வீட்டிற்கு அருமையான தோற்றத்தைத் தரும்..
நம் நாட்டில் பரவலாக வீடுகளில் நான்கு வகையான ஜன்னல்களை அமைக்கிறார்கள்.. அவை மரத்தினால் செய்யப்படும் ஜன்னல்கள், ஜிஐ ஜன்னல்கள், அலுமினிய ஜன்னல்கள் மற்றும் யுபிவிசி ஜன்னல்கள்..இன்றைய காலகட்டத்தில் நவீனமாக ஜன்னல்களை அமைப்பது பெருகி வருகின்றது.
*பே ஜன்னல்: யுபிவிசி பே ஜன்னல்கள் என்பது மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஜன்னல்களை ஒன்றாக இணைத்து அமைக்கப்படும் ஜன்னல்கள் ஆகும்.. இவை வீட்டிற்கு அப்பால் வெளிப்படுவதோடு உங்கள் அறைக்குள் கூடுதல் இடத்தை வழங்கவும், அதிக வெளிச்சத்தை வழங்கவும் செய்கின்றது.இதன் காரணமாக இவை மிகவும் நேர்த்தியான மற்றும் புது பாணியான ஜன்னல் வடிவமைப்புகளில் ஒன்றாக இருக்கின்றது.
*கேஸ்மென்ட் ஜன்னல்:மிகவும் பொதுவான மற்றும் பிரபலமான ஜன்னல் அமைப்புகளில் ஒன்று என்று இதனைச் சொல்லலாம்.ஒற்றை அல்லது அதற்கு மேற்பட்ட பிரிவுகளுடன் இவற்றை அமைக்கலாம். இந்த ஜன்னல்களை அகலமாக திறந்து அறைக்குள் அதிகபட்சமாக காற்றை அனுமதிக்க முடியும்..
*டில்ட் டர்ன் ஜன்னல்:அலுவலகக் கட்டிடங்கள், ஆஸ்பத்திரிகள் மற்றும் பெரிய வணிக வளாகங்களை மட்டுமே அலங்கரித்த இவ்வகை ஜன்னல்களை இப்பொழுது வீடுகளிலும் அமைக்க மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர்.சாய்ந்த நிலையில் வைப்பது மற்றும் திருப்புவது என இரட்டை செயல்பாடு கொண்ட இவ்வகை ஜன்னல்கள் நவீன உட்புறங்களுடன் தடையின்றி ஒன்றிணைகின்றன. இதன் உள்நோக்கி திறக்கப்படும் செயல்பாடு கைப்பிடியின் எளிய திருப்பத்துடன் செயல்படுகிறது.. இவை அனைத்துஅறைக்கும் நேர்த்தியான மற்றும் சமகால தோற்றத்தை கொடுப்பதாக இருக்கின்றன..இது பாதுகாப்பான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட காற்றோட்டத்தை செயல்படுத்தும் அதே வேளையில் உங்கள் அறைக்கு அதிக வெளிச்சத்தை கொடுக்கும் பல்துறை சாளரமாக விளங்குகின்றது.
*ஸ்லைடிங் ஜன்னல்: இதன் வடிவமைப்பு மிகவும் பல்துறை மற்றும் எளிதான ஜன்னல் பாணிகளில் ஒன்றாகும்.. மென்மையான உந்துதல் மூலம் கீழே உள்ள உருளைகள் எளிதாக அசைந்து இந்த ஜன்னல்கள் திறப்பதற்கு உதவி செய்கின்றன.பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்புகளில் இவ்வகை ஜன்னல்கள் அமைப்பதைப் பார்க்க முடியும்..வீட்டிற்கு புதிய மேம்படுத்தப்பட்ட மற்றும் இனிமையான தோற்றத்தை இவை வழங்குகின்றன..
*லூவர்டு ஜன்னல்: பார்ப்பதற்கும்,காற்றோட்டம் வழங்குவதற்கும் கவர்ச்சிகரமான மற்றும் நடைமுறைக்கு ஏற்ற பாணியை நிரூபிக்கும் இவ்வகை ஜன்னல்கள் முழுமையாக திறந்திருக்கும் போது அதிகபட்ச இயற்கை காற்றோட்டத்தை அறைக்குள் அனுமதிக்கின்றன. கண்ணாடி, மரம் மற்றும் அலுமினியத்தால் செய்யப்பட்ட பிளேடுகளை தேர்ந்தெடுத்து இந்த ஜன்னல்களில் பொருத்திக் கொள்வது நம்முடைய விருப்பமாகும்.. சாய்ந்து சரிசெய்யக்கூடிய இவ்வகை பிளேடுகள் எல்லா பருவங்களிலும் வசதியான வெப்பநிலையை வீட்டிற்குள் பராமரிக்க உதவுகின்றன.
* வில்லா ஜன்னல்: பெரிய அறைகள் இருக்கும் வீடுகளுக்கு பொருத்தமான ஜன்னல்கள் என்று இவற்றைச் சொல்லலாம். அரை வட்ட வடிவில் இருக்கும் இவ்வகை ஜன்னல்கள் பெரிய பரப்பளவில் அமைக்கப்படும் பொழுது அவை வீட்டிற்கு பிரம்மாண்ட தோற்றத்தைத் தருகின்றன. வீட்டின் எல்லா அறைக்கும் பொருத்தமான ஜன்னலாக இவை இருக்கும். பூச்சிகள் மற்றும் தேவையற்ற கூறுகளைத் தடுக்க இந்த ஜன்னலில் வலை மற்றும் கிரில்லானது கொடுக்கப்பட்டு அதிகபட்ச காற்றோட்டத்தை வீட்டிற்குள் அனுமதிப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
*க்ளாஸ் டு க்ளாஸ் ஜன்னல்: இவ்வகை ஜன்னல்கள் அறைக்கு கூடுதல் இயற்கை ஒளியை சேர்ப்பதற்கு ஏற்றது..இதன் மூலம் எந்த தடையும் இல்லாமல் அற்புதமான பரந்த காட்சிகளை வீட்டின் உள்ளிருந்து பார்க்கும் பொழுது அது ஒரு அற்புதமான உணர்வைத் தரும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.வீட்டின் இரண்டு மூலைகளையும் இணைக்கும் விதத்தில் அமைக்கப்படும் இவ்வகை ஜன்னல்கள் வீட்டின் உட்புற அலங்காரத்தை பிரகாசமாக்குகின்றன..இந்த அதி நவீனமான ஜன்னல்கள் இப்பொழுது பரவலாக பல வீடுகளில் இருப்பதைப் பார்க்க முடிகின்றது.
* நிலையான ஜன்னல்: இவற்றை பிச்சர் அல்லது பட ஜன்னல்கள் என்றும் அழைக்கிறார்கள்.. இந்த ஜன்னல்கள் திறக்க முடியாதவாறு நிலையாகப் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் வெளியே இருக்கும் காட்சிகளை உள்ளிருந்து அழகாக ரசிக்க முடியும் அதே நேரத்தில் இவை அதிக வெளிச்சத்தை வழங்குகின்றன.... இந்த எளிய மற்றும் புது பாணியான ஜன்னல் வெளிப்புறத்தில் இருக்கும் தடையற்ற காட்சியை உங்களுக்கு வழங்குவதோடு வீட்டின் உட்புறத்தை மேம்படுத்துவதற்கு ஏற்றதாகும்.
எத்தனையோ விதமான ஜன்னல்கள் இருந்தாலும் நம் வீட்டிற்கு பொருத்தமான மற்றும் நம் பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு இருக்கும் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது நம்முடைய விருப்பமே.
Related Tags :
Next Story