ஜூனியர் உலக கோப்பை கால்இறுதி: ஆஸ்திரேலியாவிடம் சுருண்டது இங்கிலாந்து


ஜூனியர் உலக கோப்பை கால்இறுதி: ஆஸ்திரேலியாவிடம் சுருண்டது இங்கிலாந்து
x
தினத்தந்தி 23 Jan 2018 10:30 PM GMT (Updated: 23 Jan 2018 8:15 PM GMT)

ஜூனியர் (19 வயதுக்கு உட்பட்டோர்) உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த முதலாவது கால்இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் கோதாவில் இறங்கின.

குயின்ஸ்டவுன்,

 ‘டாஸ்’ ஜெயித்த முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 33.3 ஓவர்களில் 127 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக கேப்டன் ஜாசன் சாங்ஹா 58 ரன்கள் சேர்த்தார். பின்னர் எளிய இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கண்டது.

8-வது ஓவரை 18 வயதான சுழற்பந்து வீச்சாளர் லாய்ட் போப் வீச வந்ததும் ஆட்டத்தின் போக்கு தலைகீழானது. அந்த ஓவரில் 3-வது மற்றும் 4-வது பந்தில் முறையே லிம் பேங்ஸ் (3 ரன்), கேப்டன் ஹாரி புரூக் (0) விக்கெட்டை லாய்ட் போப் வீழ்த்தினார். அதன் பின்னர் இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள் அவரது சுழலில் சிக்கி கொத்து கொத்தாக சரிந்தன. 23.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இங்கிலாந்து 96 ரன்னில் சுருண்டது.

தொடக்க ஆட்டக்காரர் டாம் பான்டான் (58 ரன், 7 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசியும் பலன் இல்லை. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது.

சுழற்பந்து வீச்சாளர் லாய்ட் போப் 35 ரன்கள் விட்டுக் கொடுத்து 8 விக்கெட்டுகளை அள்ளினார். ஜூனியர் உலக கோப்பை வரலாற்றில் ஒரு வீரரின் சிறந்த பந்து வீச்சாகும்.

இன்று நடக்கும் 2-வது கால்இறுதியில் பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

Next Story