கடைசி 20 ஓவர் போட்டியில் இந்தியா திரில் வெற்றி தொடரையும் கைப்பற்றியது


கடைசி 20 ஓவர் போட்டியில் இந்தியா திரில் வெற்றி தொடரையும் கைப்பற்றியது
x
தினத்தந்தி 24 Feb 2018 11:30 PM GMT (Updated: 24 Feb 2018 11:51 PM GMT)

இந்திய அணி வெற்றி பெற்றதுடன் தொடரையும் 2-1 என்ற கணக்கில் வசப்படுத்தியது.

கேப்டவுன்,

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதுடன் தொடரையும் 2-1 என்ற கணக்கில் வசப்படுத்தியது.


இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நேற்றிரவு நடந்தது. கேப்டன் விராட் கோலி லேசான முதுகுவலியால் அவதிப்படுவதால், கடைசி நேரத்தில் அவர் விலகினார். இதனால் ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றார். கோலிக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார். இதே போல் யுஸ்வேந்திர சாஹல், ஜெய்தேவ் உனட்கட் நீக்கப்பட்டு அக்‌ஷர் பட்டேல், பும்ரா இடம் பிடித்தனர். தென்ஆப்பிரிக்க அணியில் இரு மாற்றமாக ஜான் ஸ்மட்ஸ், பேட்டர்சன் கழற்றிவிடப்பட்டு அவர்களுக்கு பதிலாக புதுமுக வீரர் கிறிஸ்டியான் ஜோங்கெர், பாங்கிசோ இடம்பெற்றனர்.

‘டாஸ்’ ஜெயித்த தென்ஆப்பிரிக்க கேப்டன் டுமினி, முதலில் இந்தியாவை பேட் செய்ய கேட்டுக் கொண்டார். இதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் நுழைந்தனர். முதல் ஓவரில் 2 பவுண்டரி ஓடவிட்ட ரோகித் சர்மா (11 ரன்), வேகப்பந்து வீச்சாளர் ஜூனியர் டாலாவின் அடுத்த ஓவரில் எல்.பி.டபிள்யூ. ஆனார். இந்த தொடரில் மூன்று ஆட்டங்களிலும் அவரது பந்து வீச்சுக்கே ரோகித் சர்மா இரையாகியிருக்கிறார்.

அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா சந்தித்த முதல் பந்தையே சிக்சருக்கு அனுப்பி குதூகலப்படுத்தினார். அவர் வேகமாக ஆடிய போதிலும், ஷிகர் தவான் தென்ஆப்பிரிக்க பந்து வீச்சை எதிர்கொள்வதில் தடுமாறினார். இதனால் வேறு வழியின்றி ஒன்று, இரண்டு ரன்கள் வீதமே எடுத்துக் கொண்டிருந்தார். 9 ரன்னில் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பி பிழைத்த தவான், 29-வது பந்தில் தான் முதல் பவுண்டரியே அடித்தார்.

மறுமுனையில் சுரேஷ் ரெய்னா (43 ரன், 27 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஷம்சியின் சுழலில் பந்தை சிக்சருக்கு தூக்குவதற்கு முயற்சித்து எல்லைக்கோடு அருகே கேட்ச் ஆகிப்போனார். அடுத்து வந்த மனிஷ் பாண்டே (ஒரு சிக்சருடன் 13 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. இதற்கிடையே 34 ரன்னில் இருந்த போது மறுபடியும் கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பிய ஷிகர் தவான் (47 ரன், 40 பந்து, 3 பவுண்டரி) கடைசியில் ரன்-அவுட் ஆனார்.

இறுதிகட்டத்தில் ரன்ரேட் பெரிய அளவில் எகிறவில்லை. டோனி 12 ரன்னும் (11 பந்து, ஒரு பவுண்டரி), ஹர்திக் பாண்ட்யா 21 ரன்னும் (17 பந்து, ஒரு சிக்சர்), தினேஷ் கார்த்திக் 13 ரன்னும் (6 பந்து, 3 பவுண்டரி) எடுத்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் சேர்த்தது. தென்ஆப்பிரிக்க தரப்பில் ஜூனியர் டாலா 3 விக்கெட்டுகளும், கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் 173 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்காவுக்கு, இந்திய பவுலர்கள் கடுமையான நெருக்கடி கொடுத்தனர். ஆமை வேகத்தில் ஆடிய தென்ஆப்பிரிக்க வீரர்கள் முதல் 8 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 38 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர். ஹென்ரிச் கிளாசென் (7 ரன்) இந்த முறை அவர்களுக்கு கைகொடுக்கவில்லை. ஆனால் கேப்டன் டுமினி அரைசதம் (55 ரன், 41 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி அந்த அணிக்கு கொஞ்சம் நம்பிக்கையூட்டினார். கடைசி கட்டத்தில் புதுமுக வீரர் ஜோங்கெர் அச்சுறுத்தியதால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. உச்சக்கட்ட டென்ஷனுக்கு மத்தியில் 20-வது ஓவரை வீசிய புவனேஷ்வர்குமார் 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்ததுடன், ஜோங்கெரின் (49 ரன், 5 பவுண்டரி, 2 சிக்சர்) விக்கெட்டையும் வீழ்த்தி இந்தியாவின் வெற்றியை உறுதிப்படுத்தினார். 20 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டுக்கு 165 ரன்களே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்ததுடன், தொடரையும் 2-1 என்ற கணக்கில் சொந்தமாக்கியது.

Next Story