3 நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட்: தொடக்க லீக் ஆட்டத்தில் இந்தியா-இலங்கை


3 நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட்: தொடக்க லீக் ஆட்டத்தில் இந்தியா-இலங்கை
x
தினத்தந்தி 5 March 2018 11:30 PM GMT (Updated: 5 March 2018 9:35 PM GMT)

3 நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட்: தொடக்க லீக் ஆட்டத்தில் இந்தியா-இலங்கை இன்று மோதல்.

கொழும்பு,

3 நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இலங்கையில் இன்று தொடங்குகிறது. இதன் தொடக்க லீக் ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன.

இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி 3 நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 18-ந் தேதி வரை நடக்கிறது.

இதில் போட்டியை நடத்தும் இலங்கையுடன், இந்தியா, வங்காளதேசம் ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

போட்டியின் தொடக்க நாளான இன்று நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. கேப்டன் விராட்கோலி, டோனி, புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகிய 6 முன்னணி வீரர்களுக்கு இந்த போட்டி தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ரோகித் சர்மா தலைமையில் இரண்டாம் தர இந்திய அணி இதில் பங்கேற்கிறது. வாஷிங்டன் சுந்தர், தீபக் ஹூடா, ஷர்துல் தாகூர், விஜய் சுந்தர், ரிஷாப் பான்ட் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை அவர்கள் சரியாக பயன்படுத்தி கொண்டால் அணியில் தங்களது இடத்தை நிரந்தமாக்கி கொள்ள வழிபிறக்கக்கூடும். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி தொடரில் அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வெற்றி கண்ட நம்பிக்கையுடன் இந்திய அணி இந்த போட்டியில் களம் காணும்.

சமீபத்தில் வங்காளதேசத்தில் நடந்த 3 நாடுகள் இடையிலான ஒருநாள் போட்டியில் சன்டிமால் தலைமையிலான இலங்கை அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அந்த உத்வேகத்துடன் இலங்கை அணி இந்த போட்டி தொடரை எதிர்கொள்ளும். காயம் காரணமாக மேத்யூஸ் அணியில் இடம் பெறவில்லை. கடந்த ஆண்டில் நடந்த இலங்கை பயணத்தில் இந்திய அணி எல்லா ஆட்டங்களிலும் (5 ஒருநாள், 3 டெஸ்ட், ஒரே ஒரு 20 ஓவர்) எளிதில் வெற்றி வாகை சூடியது. ஆனால் இந்த முறை இந்திய அணி முன்பு போல் எளிதில் வெற்றியை சுவைக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. 20 ஓவர் போட்டியில் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்.

இந்தியா-இலங்கை அணிகள் இதுவரை சர்வதேச 20 ஓவர் போட்டியில் 14 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் இந்திய அணி 10 முறையும், இலங்கை அணி 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இன்று 15-வது தடவையாக இரு அணிகளும் மோதுகின்றன. வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை டி ஸ்போர்ட் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான் (துணைகேப்டன்), லோகேஷ் ராகுல், சுரேஷ் ரெய்னா, மனிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், அக்‌ஷர் பட்டேல், விஜய் சங்கர், ஷர்துல் தாகூர், ஜெய்தேவ் உனட்கட், முகமது சிராஜ், ரிஷாப் பான்ட்.

இலங்கை: சன்டிமால் (கேப்டன்), சுரங்கா லக்மல் (துணைகேப்டன்), உபுல் தரங்கா, குணதிலகா, குசல் மென்டிஸ், தசுன் ஷனகா, குசல் பெரேரா, திசரா பெரேரா, ஜீவன் மென்டிஸ், இஸ்ரு உதனா, அகிலா தனஞ்ஜெயா, அமிலா அபோன்சா, பிரதீப், சமீரா, தனஞ்ஜெயா டி சில்வா.

இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா நேற்று அளித்த பேட்டியில், ‘இலங்கை போட்டி தொடரில் வெற்றி வாய்ப்பு எங்களுக்கு அதிகமா?, இல்லையா? என்பது குறித்து நான் சிந்திக்கவில்லை. 20 ஓவர் போட்டியில் குறிப்பிட்ட நாளில் சிறப்பாக செயல்படும் எந்த அணியும் வெற்றி பெறலாம். ஒரு ஓவரில் கூட ஆட்டத்தின் போக்கு மாறலாம். இந்த போட்டியில் குறிப்பிட்ட நாளில் எந்த அணியும், மற்றொரு அணியை வீழ்த்த முடியும். இங்கிலீஷ் பிரிமியர் லீக் போட்டி போல் 20 ஓவர் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்று சொல்ல முடியாது. அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். தற்போதைய போட்டி அட்டவணையை பொறுத்தவரையில் வீரர்களுக்கு போதிய ஓய்வு அளிக்கப்பட வேண்டியது அவசியமானதாகும். அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் வெளியில் இருக்கும் வீரர்களின் பலத்தை பரிசோதிக்க இந்த போட்டி தொடர் நல்ல வாய்ப்பாகும்’ என்று தெரிவித்தார்.







Next Story