கிரிக்கெட்

பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் 206 ரன்களை ‘சேசிங்’ செய்துசென்னை அணி அசத்தல் வெற்றி + "||" + Chennai Super Kings won by 5 wkts

பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் 206 ரன்களை ‘சேசிங்’ செய்துசென்னை அணி அசத்தல் வெற்றி

பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் 206 ரன்களை ‘சேசிங்’ செய்துசென்னை அணி அசத்தல் வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 24-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தல் வெற்றி பெற்றது. #IPL
பெங்களூரு, 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 206 ரன்கள் இலக்கை ‘சேசிங்’ செய்து அசத்தல் வெற்றியை பெற்றது.

ஐ.பி.எல். கிரிக்கெட்

11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த 24-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மல்லுகட்டின. சென்னை அணியில் கரண் ஷர்மா, பிளிஸ்சிஸ் நீக்கப்பட்டு சுழற்பந்து வீச்சாளர்கள் ஹர்பஜன்சிங், இம்ரான் தாஹிர் களம் திரும்பினர். பெங்களூரு அணியில் மனன்வோரா, கிறிஸ் வோக்ஸ் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக பவான் நெகி, காலின் டி கிரான்ட்ஹோம் இடம் பிடித்தனர்.

‘டாஸ்’ ஜெயித்த சென்னை கேப்டன் டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி கேப்டன் விராட் கோலியும், குயின்டான் டி காக்கும் பெங்களூரு அணியின் இன்னிங்சை தொடங்கினர். கோலி (18 ரன், 15 பந்து, 3 பவுண்டரி) தன்னை சுதாரித்து நிலை நிறுத்திக்கொள்வதற்குள் ஷர்துல் தாகூரின் பந்து வீச்சில் கேட்ச் ஆகிப் போனார். அடுத்து டிவில்லியர்ஸ் வந்தார். சூறாவளியாய் சுழன்றடித்த டிவில்லியர்ஸ், ஹர்பஜன்சிங்கின் சுழலில் 2 சிக்சரும், ஒரு பவுண்டரியும் சாத்தினார். இன்னொரு சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிரின் ஓவரில் 2 சிக்சர் ஓடின. இதில் ஒரு சிக்சர் ஸ்டேடியத்திற்கு வெளியே போய் விழுந்தது. மறுமுனையில் டி காக்கும் தொய்வில்லாமல் ரன்களை திரட்டியதால் ஸ்கோர் மளமளவென எகிறியது. 10.4 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை தொட்டது.

டி காக், டிவில்லியர்ஸ் அரைசதம்

சிக்சருடன் டி காக் 50 ரன்களை எட்டினார். தொடர்ந்து ஷர்துல் தாகூரின் பந்து வீச்சில் டிவில்லியர்ஸ் ‘ஹாட்ரிக்’ சிக்சர் பறக்கவிட்டு உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்ததுடன் தனது 25-வது ஐ.பி.எல். அரைசதத்தையும் பூர்த்தி செய்தார். 13 ஓவர்களில் பெங்களூரு அணி ஒரு விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்திருந்ததை பார்த்த போது, அந்த அணி 220 ரன்களை தாண்டும் போலவே கணிக்கப்பட்டது.

ஆனால் இந்த கூட்டணி உடைந்ததும் ரன்வேகம் சற்று தணிந்தது. சென்னையின் பந்துவீச்சை பதம் பார்த்த டி காக் 53 ரன்களிலும் (37 பந்து, ஒரு பவுண்டரி, 4 சிக்சர்), டிவில்லியர்ஸ் 68 ரன்களிலும் (30 பந்து, 2 பவுண்டரி, 8 சிக்சர்) கேட்ச் ஆனார்கள். அடுத்து வந்த கோரி ஆண்டர்சன் (2 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை.

அதே சமயம் மன்தீப்சிங் அதிரடி காட்டி அணி சவாலான ஸ்கோரை அடைவதற்கு வழிவகுத்தார். அவர் தனது பங்குக்கு 32 ரன்கள் (17 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். கடைசி ஓவரில் அந்த அணி இரண்டு ரன்-அவுட் உள்பட 3 விக்கெட்டுகளை இழந்த போதிலும் வாஷிங்டன் சுந்தர் (13 ரன்) சிக்சரும், பவுண்டரியும், விளாசி தங்கள் அணி 200 ரன்களை கடக்க வைத்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. சென்னை தரப்பில் ஷர்துல் தாகூர், வெய்ன் பிராவோ, இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

சரிந்து மீண்டது

பின்னர் 206 ரன்கள் இலக்கை நோக்கி சென்னை அணி ஆடியது. முதல் ஓவரிலேயே வாட்சன் (7 ரன்) கேட்ச் ஆகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா (11 ரன்), சாம் பில்லிங்ஸ் (9 ரன்), ரவீந்திர ஜடேஜா (3 ரன்) ஆகியோரும் நிலைக்கவில்லை.

74 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை (8 ஓவர்) பறிகொடுத்து சென்னை அணி சிக்கலில் தவித்த நிலையில் அம்பத்தி ராயுடுவும், கேப்டன் டோனியும் இணைந்து அணியை சரிவில் இருந்து படிப்படியாக மீட்டனர். இருவரும் தங்களது அரைசதங்களையும் கடந்து அசத்தினர். கடைசி 3 ஓவர்களில் சென்னை அணியின் வெற்றிக்கு 45 ரன்கள் தேவைப்பட்டது.

இதில் 18-வது ஓவரில் சென்னை அணி அம்பத்தி ராயுடுவின் (82 ரன், 53 பந்து, 3 பவுண்டரி, 8 சிக்சர்) விக்கெட்டை இழந்து 15 ரன்களும், 19-வது ஓவரில் 14 ரன்களும் சேர்த்தது. இதனால் கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 16 ரன் தேவைப்பட்டது. அப்போது டோனியும், வெய்ன் பிராவோவும் களத்தில் இருந்தனர்.

சென்னை திரில் வெற்றி

பரபரப்பான 20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் கோரி ஆண்டர்சன் வீசினார். முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய பிராவோ, அடுத்த பந்தை சிக்சராக்கி பெங்களூரு ரசிகர்களை மிரள வைத்தார். அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்தார். இதன் பின்னர் 4-வது பந்தை எதிர்கொண்ட டோனி அதை சிக்சருக்கு தூக்கியடித்து பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

சென்னை அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் 5-வது வெற்றியை ருசித்தது. டோனி 70 ரன்களுடனும் (34 பந்து, ஒரு பவுண்டரி, 7 சிக்சர்), பிராவோ 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். டோனி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

நாளை நடைபெறும் ஐபிஎல் போட்டியின் 25-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை ஐதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் எதிர்கொள்கிறது.