கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: நடப்பு சாம்பியன் மும்பை அணி வெளியேற்றம் + "||" + IPL Cricket: Ex-Champion Mumbai team exit

ஐ.பி.எல். கிரிக்கெட்: நடப்பு சாம்பியன் மும்பை அணி வெளியேற்றம்

ஐ.பி.எல். கிரிக்கெட்: நடப்பு சாம்பியன் மும்பை அணி வெளியேற்றம்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லியிடம் போராடி தோல்வி அடைந்த நடப்பு சாம்பியன் மும்பை அணி பரிதாபமாக வெளியேறியது.
புதுடெல்லி,

11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்த 55-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி, நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சை எதிர்கொண்டது. இரு அணியிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டது. மும்பை அணியில் தோள்பட்டை காயத்தால் அவதிப்படும் மெக்லெனஹானுக்கு பதிலாக முஸ்தாபிஜூர் ரகுமானும், டெல்லி அணியில் அவேஷ்கானுக்கு பதிலாக லியாம் பிளங்கெட்டும் சேர்க்கப்பட்டனர்.


‘டாஸ்’ ஜெயித்த டெல்லி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. மேக்ஸ்வெல்லும், பிரித்வி ஷாவும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கி முதல் 3 ஓவர்களில் 30 ரன்களை திரட்டினர். அதன் பிறகு பிரித்வி ஷா (12 ரன்) கவனக்குறைவால் ரன்-அவுட் ஆனார். அதாவது பந்து பீல்டர் ஹர்திக் பாண்ட்யா கைக்கு சென்ற போது, எதிர்முனையில் நின்ற பிரித்வி ஷா சில அடி தூரம் ஓடிவிட்டு சர்வ சாதாரணமாக திரும்பி வந்தார். அதற்குள் பாண்ட்யா அவரை ரன்-அவுட் ஆக்கினார். மேக்ஸ்வெல் (22 ரன்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (6 ரன்) ஆகியோர் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை.

இதன் பின்னர் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்டுவும், தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கரும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து காப்பாற்றினர். ரிஷாப் பான்ட், ஒற்றைக்கையால் இரண்டு முறை சிக்சர் விளாசி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தார். நடப்பு தொடரில் 5-வது அரைசதத்தை கடந்த ரிஷாப் பான்ட் 64 ரன்களில் (44 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டம் இழந்தார். மறுமுனையில் விஜய் சங்கர் (43 ரன், 30 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) கடைசி வரை களத்தில் நின்று அணி சவாலான ஸ்கோரை எட்டுவதற்கு உதவினார். 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் குவித்தது.

அடுத்து கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் 175 ரன்கள் இலக்கை நோக்கி மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சூர்யகுமார் யாதவும், இவின் லீசும் அடியெடுத்து வைத்தனர். சுழற்பந்து வீச்சாளர் சந்தீப் லாமிச்சன்னேவின் முதல் ஓவரிலேயே பவுண்டரி, சிக்சர், 2 ரன் என்று வரிசையாக எடுத்த சூர்யகுமார் (12 ரன்) அவசரப்பட்டு 4-வது பந்தில் கேட்ச் ஆனார். 2-வது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் வந்தார். மறுபக்கம் இவின் லீவிஸ் பவுண்டரியும், சிக்சருமாக சிதறடித்தார். பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் அந்த அணி ஒரு விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்து நல்ல நிலையில் இருந்தது.

வறண்ட இந்த ஆடுகளத்தில் பிற்பகுதியில் சுழற்பந்து வீச்சாளர்கள் அமித் மிஸ்ராவும், லாமிச்சன்னேவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினர். இஷான் கிஷன் (5 ரன்), இவின் லீவிஸ் (48 ரன், 31 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்), பொல்லார்ட் (7 ரன்), குணால் பாண்ட்யா (4 ரன்) ஆகியோர் சுழல் வலையில் அகப்பட்டு அடங்கினர். 78 ரன்னுக்குள் 5 முன்னணி விக்கெட்டுகளை (9.4 ஓவர்) பறிகொடுத்து மும்பை அணி பரிதவித்தது. எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோகித் சர்மா (13 ரன்), ஹர்திக்பாண்ட்யா (27 ரன்) ஆகியோரும் அணியை தாங்கிப்பிடிக்க தவறினர். அப்போது மும்பை அணி 7 விக்கெட்டுக்கு 122 ரன்களுடன் தத்தளித்தது.

இந்த சூழலில் பென் கட்டிங் (ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்) மும்பை அணிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பேட்டை சுழட்டினார். பிளங்கெட்டின் ஒரே ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் தெறிக்கவிட்டார். அவர் பறக்கவிட்ட ஒரு சிக்சர் நடப்பு தொடரின் 800-வது சிக்சராக அமைந்தது. 2 ரன்-அவுட், ஒரு கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிப்பிழைத்து போராடிய பென் கட்டிங் மீதே மும்பை ரசிகர்களின் பார்வை முழுமையாக பதிந்து இருந்தது. இதற்கிடையே மயங் மார்கண்டே (3 ரன்) வெளியேற்றபட்டார்.

கடைசி ஓவரில் மும்பையின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. பரபரப்பான கடைசி ஓவரை மிதவேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் வீசினார். முதல் பந்தை பென் கட்டிங் சிக்சருக்கு தூக்கியதால், டென்ஷன் அதிகமானது. ஆனால் அடுத்த பந்தில் பென் கட்டிங் (37 ரன், 20 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆக, மும்பை ரசிகர்களின் இதயம் நொறுங்கிப்போனது. 3-வது பந்தை சந்தித்த பும்ராவும் (0) கேட்ச் ஆனார்.

முடிவில் மும்பை அணி 19.3 ஓவர்களில் 163 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் டெல்லி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை ருசித்தது. 8-வது தோல்வியை தழுவிய மும்பை அணி போட்டியை விட்டு வெளியேற்றப்பட்டது. ஐ.பி.எல். வரலாற்றில் 3 முறை சாம்பியனான மும்பை அணி லீக் சுற்றுடன் நடையை கட்டுவது இது 4-வது முறையாகும். டெல்லி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் நேபாளத்தை சேர்ந்த 17 வயதான லாமிச்சன்னே மற்றும் அமித் மிஸ்ரா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அமித் மிஸ்ரா ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

ரிஷாப் பான்ட் சாதனை

* டெல்லி விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் ஒரு சதம், 5 அரைசதம் உள்பட 684 ரன்கள் (14 ஆட்டம், 68 பவுண்டரி, 37 சிக்சர்) குவித்தார். ஐ.பி.எல்.-ல் ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்த விக்கெட் கீப்பர் என்ற சிறப்பை அவர் தன்வசம் வைத்துள்ளார். இதற்கு முன்பு கொல்கத்தா வீரர் ராபின் உத்தப்பா 660 ரன்கள் (2014-ம் ஆண்டு) எடுத்ததே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.

*டெல்லி அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டாலும் கடைசி லீக் ஆட்டங்களில் முன்னாள் சாம்பியன் சென்னை, நடப்பு சாம்பியன் மும்பை ஆகிய இரு பலம் வாய்ந்த அணிகளை சொந்த மண்ணில் போட்டுத்தாக்கிய திருப்தியுடன் தங்களது பயணத்தை முடித்துள்ளது.

பீல்டிங்கில் சொதப்பலும்....பிரமிப்பும்...

இந்த ஆட்டத்தில் பொல்லார்ட், இவின் லீவிஸ், பென் கட்டிங் ஆகியோருக்கு மொத்தம் 4 கேட்சுகளை டெல்லி பீல்டர்கள் கோட்டை விட்டனர். அதே நேரத்தில் சில பிரமாதமான கேட்சுகளையும் பிடித்து வியப்பூட்டினர். பொல்லார்ட் நேராக தூக்கியடித்த பந்தை எல்லைக்கோடு அருகே மேக்ஸ்வெல் பிடித்தார். ஆனால் நிலை தடுமாறிய அவர் எல்லைக்கோட்டை தாண்டுவதற்குள் மைதானத்திற்குள் பந்தை தூக்கிப்போட்டார். அதை அங்கு நின்ற டிரென்ட பவுல்ட் கேட்ச் செய்தார். இதே மாதிரியே மும்பை கேப்டன் ரோகித் சர்மாவும், மேக்ஸ்வெல்- பவுல்ட் கூட்டணியால் ஆட்டம் இழந்தார்.

ரோகித் சர்மாவின் பரிதாபம்

மும்பை கேப்டன் ரோகித் சர்மா இந்த ஐ.பி.எல். போட்டியில் 286 ரன்கள் (14 ஆட்டம்) மட்டுமே எடுத்துள்ளார். இதில் மூன்று டக்-அவுட்டும் அடங்கும். ஒரு சீசனில் அவர் 300 ரன்களை தாண்டாதது இதுவே முதல் முறையாகும்.