கிரிக்கெட்

தகுதி சுற்றில் ஐதராபாத்தை வீழ்த்தியது: ‘பிளிஸ்சிஸ் பேட்டிங் அற்புதமாக இருந்தது’ சென்னை கேப்டன் டோனி பாராட்டு + "||" + Defeat Hyderabad in the qualifying round: 'Blisssy Batting was wonderful'

தகுதி சுற்றில் ஐதராபாத்தை வீழ்த்தியது: ‘பிளிஸ்சிஸ் பேட்டிங் அற்புதமாக இருந்தது’ சென்னை கேப்டன் டோனி பாராட்டு

தகுதி சுற்றில் ஐதராபாத்தை வீழ்த்தியது: ‘பிளிஸ்சிஸ் பேட்டிங் அற்புதமாக இருந்தது’ சென்னை கேப்டன் டோனி பாராட்டு
ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல். தகுதி சுற்றில் வெற்றியை தேடித்தந்த பிளிஸ்சிஸ்சின் பேட்டிங் அற்புதமாக இருந்தது என்று சென்னை கேப்டன் டோனி கூறியுள்ளார்.

மும்பை, 

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல். தகுதி சுற்றில் வெற்றியை தேடித்தந்த பிளிஸ்சிஸ்சின் பேட்டிங் அற்புதமாக இருந்தது என்று சென்னை கேப்டன் டோனி கூறியுள்ளார்.

சென்னை அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன்ரைசர்சை வீழ்த்தியது. பந்துவீச்சுக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய சென்னை அணியும் திணறியது. ஒரு கட்டத்தில் 7 விக்கெட்டுக்கு 92 ரன்களுடன் பரிதவித்த போது, சென்னை அணி கரைசேருமா? என்றே நினைக்கத் தோன்றியது.

ஆனால் ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் தொடக்க ஆட்டக்காரர் பாப் டு பிளிஸ்சிஸ் மட்டும் நங்கூரம் போல் நிலைத்து நின்று போராடினார். கடினமான ஆடுகளத்தில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிளிஸ்சிஸ் சென்னை அணியை ஒரு வழியாக மீட்டெடுத்தார். கடைசி ஓவரில் 6 ரன் தேவைப்பட்ட போது முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அசத்தினார். சென்னை அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்து 7–வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பாப் டு பிளிஸ்சிஸ் 67 ரன்களுடன் (42 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) களத்தில் இருந்தார். அவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் ஓய்வறையில் சென்னை வீரர்கள் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். வெய்ன்பிராவோ நடனம் ஆடி கலகலப்பூட்டினார்.

டோனி பேட்டி

முன்னதாக வெற்றிக்கு பிறகு சென்னை கேப்டன் டோனியிடம் ஐ.பி.எல். வரலாற்றில் 8 முறை இறுதிசுற்றை (7 முறை சென்னை அணி, ஒரு முறை புனே சூப்பர் ஜெயன்ட் அணி) எட்டிய ஒரே வீரர் என்பதை எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்ட போது, ‘வெற்றி பெறும் போது எப்போதும் மகிழ்ச்சி அடைகிறேன். புள்ளி பட்டியலில் முதல் இரு இடங்களை பிடிக்கும் போது நமக்கு மேலும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. ஒரு வேளை இந்த ஆட்டத்தில் தோற்று இருந்தாலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்திருக்கும்’ என்று பதில் அளித்தார்.

டோனி மேலும் கூறியதாவது:–

ஐதராபாத் பவுலர்கள் உண்மையிலேயே நன்றாக பந்து வீசினர். தொடக்கத்தில் ஆடுகளத்தில் பந்து கொஞ்சம் ஸ்விங்கும் ஆனது. புவனேஷ்வர்குமார் சிறப்பாக பவுலிங் செய்தார். அவருக்கு சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் பக்கபலமாக இருந்தார். மிடில் வரிசையில் 3–4 விக்கெட்டுகளை இழந்ததால் நாங்கள் கடும் நெருக்கடிக்குள்ளானோம். அதுமட்டுமின்றி அவர்களிடம் தந்திரமாக பந்து வீசக்கூடியவரும் (ரஷித்கான்) இருக்கிறார். இப்படிப்பட்ட நிலைமையில் வெற்றி கண்டிருப்பது சிறப்பு வாய்ந்ததாக உணர்கிறேன். அதைவிட முக்கியம் இந்த ஆட்டத்தில் இருந்து எப்படி ஆட்டத்திறனை மேம்படுத்துவது என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். இந்த தொடரின் தொடக்கத்தில் இருந்தே சூழ்நிலைக்கு தகுந்தபடி பந்து வீச்சாளர்களை மாற்றி மாற்றி பயன்படுத்தி சோதித்தோம். இப்போது தான் சரியான கூட்டணியை அடையாளம் கண்டு இருக்கிறோம்.

பிளிஸ்சிஸ்சுக்கு பாராட்டு

நிறைய போட்டிகளில் விளையாடாமல் வாய்ப்பு வழங்கும் போது உடனடியாக சிறப்பாக ஆடுவது என்பது எளிதான காரியம் அல்ல. அதற்கு உடலையும், மனதையும் நன்கு பக்குவப்படுத்த வேண்டியது அவசியம். இதற்கு அனுபவம் கைகொடுக்கிறது. பாப் டு பிளிஸ்சிஸ் பேட்டிங்கே அதற்கு சான்று. அவரது ஆட்டம் அற்புதமாக இருந்தது. இறுதிப்போட்டியிலும் அவர் இதே போன்று ஆடுவார் என்று நம்புகிறேன்.

கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் மிகச்சிறந்த அணியாக திகழ்கிறோம். அது தான் களத்திலும் எதிரொலிக்கிறது. இதே போல் வீரர்களுக்கான ஓய்வறையிலும் அருமையான சூழல் நிலவுகிறது. ஓய்வறையில் மகிழ்ச்சிகரமான சூழலை உருவாக்காவிட்டால் நிச்சயம் சாதிக்க முடியாது. எங்களது வீரர்கள் சரியான பாதையில் பயணிக்கும் வகையில் பார்த்துக் கொள்கிறோம்.

இவ்வாறு டோனி கூறினார்.

வில்லியம்சன் கருத்து

ஐதராபாத் கேப்டன் வில்லியம்சன் கூறுகையில், ‘நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால், இது 140 ரன்களுக்குரிய ஆடுகளம் அல்ல. ஆடுகளம் ஓரளவு நன்றாகவே இருந்தது. நாங்கள் இன்னும் 20 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்க வேண்டும்’ என்றார்.