20 ஓவர் கிரிக்கெட்டில் 18 பந்துகளில் அரைசதம் விளாசி இந்திய வீராங்கனை மந்தனா சாதனை


20 ஓவர் கிரிக்கெட்டில் 18 பந்துகளில் அரைசதம் விளாசி இந்திய வீராங்கனை மந்தனா சாதனை
x
தினத்தந்தி 29 July 2018 10:37 PM GMT (Updated: 29 July 2018 10:37 PM GMT)

இங்கிலாந்தில் ஐ.பி.எல். பாணியில் 20 ஓவர் பெண்கள் கிரிக்கெட் சூப்பர் லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் வெஸ்டர்ன் ஸ்டோம் அணியும், லாபோரோ லைட்னிங் அணியும் மோதின. மழையின் காரணமாக 6 ஓவர் கொண்ட ஆட்டமாக மாற்றப்பட்டது.

டவுன்டான்,

முதலில் பேட் செய்த வெஸ்டர்ன் ஸ்டோம் அணியில் களம் இறங்கிய ஸ்மிருதிமந்தனா, தொடக்கம் முதலே பேட்டை சுழற்றி ருத்ரதாண்டவம் ஆடினார். அதிரடி காட்டிய அவர் 18 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். இதன் மூலம் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் அடித்த நியூசிலாந்தின் சோபி டேவின் சாதனையை சமன் செய்தார்.

மந்தனாவின் சரவெடியால் வெஸ்டர்ன் ஸ்டோம் அணி 6 ஓவர்களில் 85 ரன்கள் சேகரித்தது. இறுதி வரை களத்தில் நின்ற மந்தனா 19 பந்துகளில் 52 ரன்கள் நொறுக்கி இருந்தார். இதில் 4 சிக்சர்களும், 5 பவுண்டரிகளும் அடங்கும். தொடர்ந்து ஆடிய லாபோரா லைட்னிங் அணி 6 ஓவர்களில் 65 ரன்களே எடுத்து தோல்வி அடைந்தது.

22 வயதான மந்தனா இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை ஆவார். இந்த போட்டியில் பங்கேற்ற ஒரே இந்திய வீராங்கனையும் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story