ஆசிய கோப்பை கிரிக்கெட்: ‘இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் முக்கியமானது’ பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது பேட்டி


ஆசிய கோப்பை கிரிக்கெட்: ‘இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் முக்கியமானது’ பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது பேட்டி
x
தினத்தந்தி 11 Sep 2018 9:30 PM GMT (Updated: 11 Sep 2018 6:48 PM GMT)

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் முக்கியமானது என்று பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது கூறினார்.

லாகூர், 

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் முக்கியமானது என்று பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது கூறினார்.

சர்ப்ராஸ் பேட்டி

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் உள்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 15–ந்தேதி முதல் 28–ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. பாகிஸ்தான் அணி தனது முதலாவது லீக்கில் ஹாங்காங்கையும் (16–ந்தேதி), 2–வது லீக்கில் இந்தியாவையும் (19–ந்தேதி) சந்திக்கிறது. அனைத்து ஆட்டங்களும் இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஆசிய போட்டியையொட்டி பாகிஸ்தான் கேப்டன் 31 வயதான சர்ப்ராஸ் அகமது அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:–

இந்தியாவுக்கு எதிரான ஒவ்வொரு ஆட்டமும் எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். அது மட்டுமின்றி உத்வேகமும் முக்கியமானது. அதனால் முதல் ஆட்டத்திலேயே வெற்றி வேட்கைக்குரிய உத்வேகத்தை உருவாக்க முயற்சிப்போம். அதே வேகத்தில் இந்தியாவை எதிர்கொள்வோம். இதற்காக முழு அளவில் தயாராகி உள்ளோம். கடைசியாக இந்தியாவை சந்தித்த சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற்றோம். ஆனால் அது நடந்து முடிந்து கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஆகி விட்டன. எனவே அந்த ஆட்டம் பற்றி அதிகமாக சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டியது இல்லை. எல்லா தொழில்முறை அணிகளும், கடந்த கால போட்டிகளை மறந்து ஒதுக்கிவிட்டு, அடுத்து வரும் போட்டிகள் மீது தான் கவனம் செலுத்தும். நாங்களும் அப்படித்தான். ஆசிய போட்டிக்கான அனைத்து அணிகளுமே வலுவாகத் தான் தோன்றுகிறது. எந்த ஒரு அணியையும் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் களத்தில் முழு திறமையை வெளிப்படுத்தியாக வேண்டும்.

சீதோஷ்ண நிலை

வானிலையை பொறுத்தவரை துபாய், அபுதாபியில் தற்போது வெயில் அதிகமாக உள்ளது. அனலின் தாக்கம் காரணமாக மின்னொளியின் கீழ் பேட் செய்வது கடினமாக இருக்கும். ஏனெனில் இது போன்ற சூழலில் வேகப்பந்து வீச்சாளர்களால் ஓரளவு ஸ்விங்கும் செய்ய முடியும்.

அங்கு நிலவும் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப எங்களை மாற்றிக்கொள்ள முயற்சிப்போம். இங்கு மின்னொளியின் கீழ் விளையாடிய அனுபவம் எங்களுக்கு உண்டு. ஆனாலும் இத்தகைய சூழலில் ஒவ்வொரு அணியும் முதலில் பேட் செய்வதையே விரும்பும் என்று நினைக்கிறேன்.

சுழற்பந்து வீச்சு

இங்குள்ள ஆடுகளங்கள் வேகம் குறைந்தவை. அதனால் சுழற்பந்து வீச்சாளர்களும் முக்கிய பங்கு வகிப்பார்கள். எங்களது பந்து வீச்சாளர்களும், பேட்ஸ்மேன்களும் நல்ல பார்மில் உள்ளனர். முதலில் பேட் செய்ய வாய்ப்பு கிடைத்தால், 300 ரன்களுக்கு மேல் குவிப்பதில் முனைப்பு காட்டுவோம். 300 ரன்களுக்கு மேல் எடுத்து விட்டால், பந்து வீச்சாளர்களால் எதிரணியை நிச்சயம் மடக்க முடியும். பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் மூன்று துறைகளிலும் கவனம் செலுத்தி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்.

இவ்வாறு சர்ப்ராஸ் அகமது கூறினார்.


Next Story