கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் நீடிப்பு இங்கிலாந்து அணி 4–வது இடத்துக்கு முன்னேற்றம் + "||" + Test cricket rankings The Indian team is the first to extend England have improved to 4th place

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் நீடிப்பு இங்கிலாந்து அணி 4–வது இடத்துக்கு முன்னேற்றம்

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் நீடிப்பு இங்கிலாந்து அணி 4–வது இடத்துக்கு முன்னேற்றம்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரை இழந்தாலும் இந்திய அணி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறது. தொடரை வென்ற இங்கிலாந்து அணி 4–வது இடத்துக்கு முன்னேறியது.

துபாய், 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரை இழந்தாலும் இந்திய அணி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறது. தொடரை வென்ற இங்கிலாந்து அணி 4–வது இடத்துக்கு முன்னேறியது.

இந்திய அணி தொடர்ந்து முதலிடம்

இந்தியா–இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடர் முடிவில் அணிகளின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரை இந்திய அணி 1–4 என்ற கணக்கில் இழந்தாலும், டெஸ்ட் அணிகள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்து தொடருக்கு முன்பு 125 புள்ளிகளுடன் இருந்த இந்திய அணி இந்த தோல்வியால் 10 புள்ளிகளை இழந்து 115 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

தென்ஆப்பிரிக்கா (106 புள்ளிகள்), ஆஸ்திரேலியா (106 புள்ளிகள்) அணிகள் முறையே 2–வது மற்றும் 3–வது இடத்தில் தொடருகின்றன. இந்தியாவுக்கு எதிரான தொடரை வென்று அசத்திய இங்கிலாந்து அணி (105 புள்ளிகள்) 8 புள்ளிகள் அதிகரித்ததுடன் 5–வது இடத்தில் இருந்து 4–வது இடத்துக்கு முன்னேறியது. நியூசிலாந்து அணி (102 புள்ளிகள்) 4–வது இடத்தில் இருந்து 5–வது இடத்துக்கு சரிந்தது. இலங்கை (97 புள்ளிகள்), பாகிஸ்தான் (88 புள்ளிகள்), வெஸ்ட்இண்டீஸ் (77 புள்ளிகள்), வங்காளதேசம் (67 புள்ளிகள்), ஜிம்பாப்வே (2 புள்ளி) அணிகள் முறையே 6 முதல் 10 இடங்களை பெற்றுள்ளன.

நம்பர் ஒன் இடத்தில் நீடிக்கிறார், கோலி

பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி (930 புள்ளிகள்) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விராட்கோலி 593 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் (929 புள்ளிகள்), நியூசிலாந்து வீரர் கனே வில்லியம்சன் (847 புள்ளிகள்) 2–வது மற்றும் 3–வது இடத்தில் மாற்றமின்றி தொடருகின்றனர். இங்கிலாந்து வீரர் ஜோரூட் (835 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி 4–வது இடத்தையும், ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் (820 புள்ளிகள்) ஒரு இடம் சறுக்கி 5–வது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்திய வீரர் புஜாரா (772 புள்ளிகள்) 6–வது இடத்திலும், இலங்கை வீரர் கருணாரத்னே (754 புள்ளிகள்) 7–வது இடத்திலும், இலங்கை வீரர் சண்டிமால் (733 புள்ளிகள்) 8–வது இடத்திலும், தென் ஆப்பிரிக்க வீரர் டீன் எல்கர் (724 புள்ளிகள்) 9–வது இடத்திலும் நீடிக்கின்றனர். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 71 ரன்னும், 2–வது இன்னிங்சில் 147 ரன்னும் சேர்த்து ஆட்டநாயகன் விருதுடன் ஓய்வு பெற்ற இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் அலஸ்டயர் குக் 11 இடங்கள் முன்னேறி 10–வது இடத்தை பிடித்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த இந்திய வீரர் லோகேஷ் ராகுல் 16 இடங்கள் ஏற்றம் கண்டு 19–வது இடத்தையும், சதம் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் 63 இடங்கள் முன்னேறி 111–வது இடத்தையும், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 12 இடங்கள் முன்னேறி 58–வது இடத்தை பிடித்துள்ளனர்.

ஆண்டர்சன் முதலிடம்

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் (899 புள்ளிகள்), தென் ஆப்பிரிக்க வீரர் ரபடா (882 புள்ளிகள்) ஆகியோர் முறையே முதல் 2 இடங்களில் நீடிக்கின்றனர். தென்ஆப்பிரிக்க வீரர் பிலாண்டர் (826 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி 3–வது இடத்தையும், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா (814 புள்ளிகள்) ஒரு இடம் சறுக்கி 4–வது இடத்தையும் பிடித்தனர். ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ் (800 புள்ளிகள்), நியூசிலாந்து வீரர் டிரென்ட் பவுல்ட் (795 புள்ளிகள்), இலங்கை வீரர் ஹெராத் (791 புள்ளிகள்), இந்திய வீரர் அஸ்வின் (769 புள்ளிகள்), நியூசிலாந்து வீரர் நீல் வாக்னர் (765 புள்ளிகள்), ஆஸ்திரேலிய வீரர் ஹேசில்வுட் (759 புள்ளிகள்) ஆகியோர் முறையே 5 முதல் 10 இடங்களில் தொடருகின்றனர்.

ஆல்–ரவுண்டர் தரவரிசையில் வங்காளதேச வீரர் ‌ஷகிப் அல்–ஹசன் (420 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா (383 புள்ளிகள்) 3–வது இடத்தில் இருந்து 2–வது இடத்துக்கு ஏற்றம் கண்டார். தென்ஆப்பிரிக்காவின் பிலாண்டர் (370 புள்ளிகள்) ஒரு இடம் சறுக்கி 3–வது இடம் பெற்றுள்ளார். வெஸ்ட்இண்டீஸ் வீரர் ஜாசன் ஹோல்டர் (355 புள்ளிகள்) 4–வது இடத்திலும், இந்திய வீரர் அஸ்வின் (343 புள்ளிகள்) 5–வது இடத்திலும் தொடருகின்றனர்.