இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ரோஸ்டன் சேசின் அபார ஆட்டத்தால் சரிவை சமாளித்தது வெஸ்ட் இண்டீஸ்


இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ரோஸ்டன் சேசின் அபார ஆட்டத்தால் சரிவை சமாளித்தது வெஸ்ட் இண்டீஸ்
x
தினத்தந்தி 12 Oct 2018 11:30 PM GMT (Updated: 12 Oct 2018 8:17 PM GMT)

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரோஸ்டன் சேசின் அபாரமான ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி சரிவை சமாளித்தது.

ஐதராபாத்,

ஐதராபாத்தில் தொடங்கியுள்ள இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரோஸ்டன் சேசின் அபாரமான ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி சரிவை சமாளித்தது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக முகமது ஷமிக்கு பதிலாக ஷர்துல் தாகூர் அறிமுக வீரராக இடம் பெற்றார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் கணுக்கால் காயத்தில் இருந்து குணமடைந்து விட்ட கேப்டன் ஜாசன் ஹோல்டர் திரும்பினார். இதே போல் சுழற்பந்து வீச்சாளர் ஜோமெல் வாரிகனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. கீமோ பால், ஷெர்மான் லீவிஸ் நீக்கப்பட்டனர். ஆச்சரியம் அளிக்கும் வகையில் மூத்த வேகப்பந்து வீச்சாளர் கெமார் ரோச் சேர்க்கப்படவில்லை.

‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதன்படி கீரன் பவெலும், கிரேக் பிராத்வெயிட்டும் வெஸ்ட் இண்டீசின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். பவுண்டரியுடன் ரன் கணக்கை தொடங்கிய பிராத்வெய்ட், உமேஷ் யாதவின் முதல் ஓவரிலேயே 2 பவுண்டரி ஓட விட்டார். ஷர்துல் தாகூரின் ஓவரில் கீரன் பவெல் 2 பவுண்டரி விரட்டினார். ஓரளவு நல்ல தொடக்கம் கண்ட இந்த ஜோடியை சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பிரித்தார். அவரது பந்து வீச்சில் கிரீசை விட்டு சற்று வெளியே வந்து பந்தை அடித்த பவெல் (22 ரன், 4 பவுண்டரி) ‘கவர்’ திசையில் நின்ற ஜடேஜாவிடம் கேட்ச் ஆனார்.

அதன் பிறகு சீரான இடைவெளியில் வெஸ்ட் இண்டீசுக்கு விக்கெட் சரிந்தன. சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், அடுத்தடுத்து ‘செக்’ வைத்தார். இதனால் நிலைகுலைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 113 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை (38.5 ஓவர்) பறிகொடுத்து பரிதவித்தது.

இந்த சூழலில் 6-வது விக்கெட்டுக்கு ஆல்-ரவுண்டர் ரோஸ்டன் சேசும், விக்கெட் கீப்பர் ஷேன் டாவ்ரிச்சும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து நிமிர வைத்தனர். துரிதமாக ரன் எடுப்பதில் கவனம் செலுத்திய ரோஸ்டன் சேஸ், சுழற்பந்து வீச்சை துல்லியமாக கணித்து செயல்பட்டார்.

அணியின் ஸ்கோர் 182 ரன்களை எட்டிய போது, டாவ்ரிச் (30 ரன், 63 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) உமேஷ் யாதவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். முதலில் நடுவர் அவுட் கொடுக்க மறுத்தார். பின்னர் டி.ஆர்.எஸ். முறைப்படி இந்திய தரப்பில் அப்பீல் செய்யப்பட்டது. ரீப்ளேயில் பந்து லெக்ஸ்டம்பை உரசுவது தெரியவந்ததால், நடுவர் தீர்ப்பை மாற்றினார்.

அதைத் தொடர்ந்து கேப்டன் ஜாசன் ஹோல்டர் நுழைந்தார். ரோஸ்டன் சேசும், ஹோல்டரும் இந்திய சுழல் தாக்குதலை சிறப்பான முறையில் கையாண்டனர். வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர், இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் ஆரம்பத்திலேயே வெளியேறி விட்டார். ஒரு பவுலர் குறைந்ததால், அது இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவாகிப்போனது.

ஹோல்டர் 16 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த போது குல்தீப் யாதவின் சுழலில் டி.ஆர்.எஸ். முறைப்படி எல்.பி.டபிள்யூ. கேட்டு இந்திய வீரர்கள் முறையிட்டனர். அதற்கு பலன் கிடைக்கவில்லை. அணியின் ஸ்கோருக்கு வலுவூட்டிய ஹோல்டர் தனது 8-வது அரைசதத்தை நிறைவு செய்தார். மறுமுனையில் ரோஸ்டன் சேஸ் 4-வது சதத்தை நோக்கி பயணித்தார்.

ஆட்ட நேரம் நெருங்கிய சமயத்தில் ஹோல்டர் 52 ரன்களில் (92 பந்து, 6 பவுண்டரி), உமேஷ் யாதவ் லெக்சைடில் வீசிய பந்தை அடிக்க முற்பட்டு விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்டிடம் கேட்ச் ஆனார்.

ரோஸ்டன் - ஹோல்டர் ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் (183 பந்து) திரட்டியது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் டாப்-8 பேட்ஸ்மேன்களும் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஒருசேர இரட்டை இலக்கத்தை கடந்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 95 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் சேர்த்துள்ளது. ரோஸ்டன் சேஸ் 98 ரன்களுடனும் (174 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்), தேவேந்திர பிஷூ 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

கோலிக்கு முத்தமிட முயன்ற ரசிகர்

ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்டில், இந்திய கேப்டன் விராட் கோலி பேட் செய்து கொண்டிருந்த போது, இரண்டு ரசிகர்கள் திடீரென மைதானத்திற்குள் நுழைந்து அவருடன் ‘செல்பி’ எடுத்தனர். பிறகு பாதுகாப்பு ஊழியர்களால் அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் ஐதராபாத்தில் நேற்று தொடங்கிய 2-வது டெஸ்டின் போதும் ஒரு ரசிகர் (15-வது ஓவரில்) அத்துமீறி மைதானத்திற்குள் ஓடி வந்து விட்டார். பீல்டிங் செய்து கொண்டிருந்த விராட் கோலியை நெருங்கிய அந்த ரசிகர் அவரை கட்டித்தழுவி, கன்னத்தில் முத்தமிட முயற்சித்தார். அதை விரும்பாத கோலி அவரை விலக்கி விட்டார். பிறகு அந்த ரசிகர் கோலியுடன் ‘செல்பி’ எடுத்து தனது ஆசையை தணித்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து பாதுகாப்பு ஊழியர்கள் ரசிகரை வெளியேற்றினர். 2-வது முறையாக நிகழ்ந்துள்ள பாதுகாப்பு குளறுபடியால் கோலி அதிருப்திக்குள்ளானார்.

புதுமுக பவுலர் ஷர்துல் தாகூர் காயம்

இந்த டெஸ்டுக்கான இந்திய அணியில் மராட்டியத்தை சேர்ந்த 26 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் அறிமுக வீரராக இடம் பிடித்தார். அவர் இந்திய அணியின் 294-வது டெஸ்ட் வீரர் ஆவார். இந்த ஆண்டில் இந்திய தரப்பில் டெஸ்டில் அடியெடுத்து வைத்த 5-வது புதுமுக வீரர் ஆவார்.

ஆனால் முதல் போட்டியே அவருக்கு ஏமாற்றத்தில் முடிந்தது. 10 பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக வலியால் அவதிப்பட்டார். அத்துடன் வெளியேறிய அவர் அதன் பிறகு பீல்டிங் செய்ய வரவில்லை. ‘ஸ்கேன்’ பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது. 2-வது நாளில் அவர் பந்து வீசுவாரா? என்பது சந்தேகம் தான்.


Next Story