பெங்காலுக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி தடுமாற்றம்


பெங்காலுக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி தடுமாற்றம்
x
தினத்தந்தி 28 Nov 2018 10:30 PM GMT (Updated: 28 Nov 2018 7:52 PM GMT)

பெங்காலுக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில், தமிழக அணி தடுமாறி வருகிறது.

சென்னை,

ரஞ்சி கிரிக்கெட்டில் பெங்காலுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தடுமாற்றத்தை சந்தித்துள்ள தமிழக அணி தொடக்க நாளில் 7 விக்கெட்டுக்கு 218 ரன்கள் எடுத்துள்ளது.

ரஞ்சி கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு - பெங்கால் (பி பிரிவு) அணிகள் இடையிலான லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த தமிழக அணிக்கு திருப்திகரமான தொடக்கம் அமையவில்லை. தொடக்க வீரர் அபினவ் முகுந்த் 9 ரன்னில் கேட்ச் ஆனார். இதன் பின்னர் கவுசிக் காந்தியும், பாபா அபராஜித்தும் இணைந்து பொறுமையாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஸ்கோர் 94 ரன்களை எட்டிய போது இந்த ஜோடி பிரிந்தது. அதன் பிறகு தமிழக அணி தடுமாறத்திற்கு உள்ளானது. கவுசிக் காந்தி 51 ரன்னிலும், அடுத்து வந்த கேப்டன் பாபா இந்திரஜித் ரன் ஏதுமின்றியும், விக்கெட் கீப்பர் ஜெகதீசன் 39 ரன்னிலும், அனிருத் 7 ரன்னிலும், கோசிக் ஒரு ரன்னிலும், சாய் கிஷோர் 9 ரன்னிலும் வெளியேறினர்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்துள்ளது. பாபா அபராஜித் 81 ரன்னுடனும் (231 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்), முகமது 14 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறும்.

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கும் குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் (ஏ பிரிவு) முதலில் பேட் செய்த மும்பை அணி 74 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அதன் பிறகு 7-வது வரிசையில் களம் புகுந்த ஷிவம் துபேயின் அதிரடியான சதத்தின் (120 ரன், 8 பவுண்டரி, 6 சிக்சர்) உதவியுடன் எழுச்சி பெற்று முதல்இன்னிங்சில் 297 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.

டெல்லியில் தொடங்கியுள்ள பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் (பி பிரிவு) முதலில் பேட் செய்த டெல்லி அணி 107 ரன்னில் சுருண்டது. மூத்த வீரர் கவுதம் கம்பீர் ஒரு ரன்னில் வீழ்ந்தார். அடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய பஞ்சாப் அணி ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் மன்தீப்சிங் (54 ரன்), யுவராஜ்சிங் (16 ரன்) அவுட் ஆகாமல் உள்ளனர்.


Next Story