ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சதங்கள் அடித்த இந்தியர்: தெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார், கோலி


ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சதங்கள் அடித்த இந்தியர்: தெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார், கோலி
x
தினத்தந்தி 16 Dec 2018 11:15 PM GMT (Updated: 16 Dec 2018 10:01 PM GMT)

ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சதங்கள் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில், தெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி சமன் செய்தார்.

பெர்த்,

பெர்த் டெஸ்டில் இந்திய கேப்டன் விராட் கோலி 123 ரன்கள் குவித்து சதம் கண்டதோடு, நிறைய சாதனைகளையும் படைத்தார். அதன் விவரம் வருமாறு:-

* டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் 25-வது சதம் (127 இன்னிங்ஸ்) இதுவாகும். இதன் மூலம் அதிவேகமாக 25 சதங்களை எட்டிய 2-வது வீரர் என்ற சிறப்பை கோலி பெற்றார். ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் 68 இன்னிங்சில் இந்த மைல்கல்லை எட்டியதே சாதனையாக நீடிக்கிறது. சச்சின் தெண்டுல்கர், சுனில் கவாஸ்கர் தங்களது 25-வது சதங்களை முறையே 130 மற்றும் 138 இன்னிங்ஸ்களில் எடுத்தனர்.

* ஆஸ்திரேலிய மண்ணில் விராட் கோலியின் 6-வது செஞ்சுரியாக இது பதிவானது. இதையடுத்து ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சதங்கள் விளாசிய இந்தியரான சச்சின் தெண்டுல்கரின் சாதனையை அவர் சமன் செய்தார். ஆஸ்திரேலியாவில், வெளிநாட்டு பேட்ஸ்மேன்களில் அதிக சதங்கள் எடுத்தவர்களின் பட்டியலில் இங்கிலாந்தின் ஜாக் ஹோப்ஸ் (9 ), வாலி ஹேமன்ட் (7) ஆகியோருக்கு அடுத்து தெண்டுல்கர், இங்கிலாந்தின் ஹெர்பர்ட் சுட்கிளிப் (தலா 6 சதம்) ஆகியோருடன் 3-வது இடத்தை கோலி பகிர்ந்துள்ளார்.

* 30 வயதான விராட் கோலி ஆஸ்திரேலியாவில் 10 டெஸ்டில் பங்கேற்று அதில் 19 இன்னிங்சில் பேட் செய்து 1,152 ரன்கள் (சராசரி 60.63) சேர்த்துள்ளார். அங்கு குறைந்தது 15 இன்னிங்ஸ் விளையாடிய வீரர்களில் அதிக சராசரியை பெற்றுள்ள ஆசிய நாட்டவர் கோலி தான்.


Next Story