‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்றது மிகப்பெரிய சாதனை’ - விராட்கோலி சொல்கிறார்


‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்றது மிகப்பெரிய சாதனை’ - விராட்கோலி சொல்கிறார்
x
தினத்தந்தி 7 Jan 2019 11:15 PM GMT (Updated: 7 Jan 2019 10:35 PM GMT)

‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனை’ என்று கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.

சிட்னி,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்த பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை வென்று இருப்பதை எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனையாக கருதுகிறேன். இந்த வெற்றி இந்திய அணிக்கு சர்வதேச அரங்கில் புதிய அடையாளத்தை கொடுத்து இருக்கிறது. 2011-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற போது நான் அணியில் மிகவும் இளையவன். அப்போது கோப்பையை வென்ற போது மற்ற சீனியர் வீரர்கள் உணர்ச்சி வசப்பட்டத்தை பார்த்து இருக்கிறேன். ஆனால் அதனை அப்போது நான் அதிகம் உணரவில்லை. ஆஸ்திரேலியாவில் எனது 3-வது பயணத்தில் கடினமான டெஸ்ட் தொடரை வென்று இருப்பதை மிகவும் உணர்ச்சிப்பூர்வமான தருணமாக உணருகிறேன். தற்போது நான் அந்தரத்தில் மிதப்பது போல் உள்ளேன். எங்களால் சாதிக்க முடியும் என்பதை இந்த வெற்றி உணர்த்தி இருக்கிறது. உண்மையிலேயே எங்களை பெருமைப்பட வைத்துள்ளது. கடந்த 12 மாத கடின உழைப்புக்கு பலன் கிடைத்து இருப்பது திருப்தி அளிக்கிறது.

4 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு நமது அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற போது அணி வீரர்களில் மாற்றம் ஏற்பட்ட காலமாகும். இந்திய அணியை வழிநடத்தி செல்வதை பெருமையாக கருதுகிறேன். இந்த வீரர்களுக்கு தலைவராக இருப்பதை மிகப்பெரிய சிறப்பாகவும், கவுரவமாகவும் நினைக்கிறேன். என்னை மிகச் சிறந்த கேப்டனாக அணி வீரர்கள் மாற்றி இருக்கிறார்கள். நிச்சயமாக மகிழ்ச்சியை அனுபவிப்பதற்கு உரிய நேரம் இதுவாகும். இந்த போட்டி தொடர் முழுவதும் புஜாரா மிகச் சிறப்பாக விளையாடினார். 3-வது டெஸ்ட் போட்டியில் மயங்க் அகர்வால் பேட்டிங் செய்த விதம் சாம்பியன் போல் இருந்தது. கடைசி டெஸ்ட் போட்டியில் ரிஷாப் பான்ட் தனக்கே உரிய தாக்குதல் ஆட்டத்தை கையாண்டு ஆதிக்கம் செலுத்தினார்.

நமது பந்து வீச்சாளர்கள் அருமையாக பந்து வீசினார்கள். இந்த தொடர் மட்டுமின்றி இதற்கு முந்தைய 2 தொடரிலும் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இதற்கு முன்பு இந்திய பந்து வீச்சாளர்கள் இதுபோல் அபாரமாக செயல்பட்டதை நான் பார்த்ததில்லை. நமது வேகப்பந்து வீச்சாளர்கள் பிட்ச்சை பற்றி அதிகம் சிந்திக்காமல் அபாரமாக செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்தனர்.

இந்த வெற்றி எங்களுக்கு ஒரு நல்ல படிக்கட்டாகும். அணியில் உள்ள வீரர்களின் சராசரி வயது மிகவும் குறைவு. எங்களது முக்கியமான பலமே நம்பிக்கை தான். இந்திய அணியை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் நாங்கள் சரியான திசையில் பணியாற்றினோம். இந்த வெற்றியை மிகச் சிறப்பாக கொண்டாட போகிறோம். இனிமேல் சிறிது காலத்துக்கு எங்களுக்கு டெஸ்ட் போட்டியில்லை. இதனால் அதிகாலையில் அலாரம் வைத்து எழுந்து இருக்க வேண்டியதில்லை. இங்குள்ள ரசிகர்கள் எங்களுக்கு அதிக ஆதரவு அளித்தனர். இதனால் வெளிநாட்டில் விளையாடுகிறோம் என்ற உணர்வு இல்லாமல் இருந்தது. ஆஸ்திரேலிய அணி எப்பொழுதும் சவாலானதாகும். அந்த அணி நீண்ட காலம் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது. எல்லா அணியிலும் வீரர்கள் மாற்றம் வரும் போது பிரச்சினை ஏற்படும். வருங்காலத்தில் நிச்சயம் அவர்கள் சிறந்த அணியாக உருவெடுப்பார்கள். இவ்வாறு விராட்கோலி கூறினார்.

தோல்வி குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் கருத்து தெரிவிக்கையில், ‘இந்திய அணியின் பந்து வீச்சு மிகவும் அருமையாக இருந்தது. அந்த அணியின் 3 வேகபந்து வீச்சாளர்களும் துல்லியமாகவும், வேகமாகவும் பந்து வீசி எங்களுக்கு கடும் நெருக்கடி அளித்தனர். எனவே எங்களுக்கு அவர்களது பந்து வீச்சை சமாளிப்பது கடினமாக இருந்தது. மார்கஸ் ஹாரிஸ், டிராவிஸ் ஹெட் மட்டுமே ஓரளவு ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் சில முக்கிய தருணங்களில் எங்களை இந்திய அணியினர் வீழ்த்தினார்கள். அதுவே நாங்கள் தொடரை இழக்க காரணம் எனலாம்.’ என்று தெரிவித்தார்.

கங்குலி சாதனையை சமன் செய்த விராட்கோலி

* வெளிநாட்டு மண்ணில் விராட்கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றுவது இது 4-வது முறையாகும். முன்னதாக இலங்கை (2-1, 2015), வெஸ்ட்இண்டீஸ் (2-0, 2016), இலங்கை (3-0, 2017) ஆகிய நாடுகளில் இந்திய அணி விராட்கோலி தலைமையில் தொடரை வென்று இருந்தது. இதன் மூலம் வெளிநாட்டில் அதிக தொடர்களை வென்று தந்த இந்திய கேப்டனான கங்குலியின் சாதனையை விராட்கோலி சமன் செய்தார்.

* விராட்கோலி ‘டாஸ்’ ஜெயித்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோற்றது கிடையாது என்ற பெருமை (18 வெற்றி, 4 டிரா) தொடருகிறது.

* இந்தியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டி தொடரில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் யாரும் சதம் அடிக்கவில்லை. தனிநபர் அதிகபட்சமாக மார்கஸ் ஹாரிஸ் 79 ரன்கள் எடுத்தார். சொந்த மண்ணில் 4 மற்றும் அதற்கு மேற்பட்ட டெஸ்ட் தொடர் ஒன்றில் ஆஸ்திரேலிய வீரர்கள் யாரும் சதம் அடிக்காதது இதுவே முதல் முறையாகும்.

* ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற 5-வது அணியாக சாதனை பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது. ஏற்கனவே இங்கு இங்கிலாந்து அணி 13 முறையும், வெஸ்ட்இண்டீஸ் 4 முறையும், நியூசிலாந்து ஒரு முறையும், தென்ஆப்பிரிக்கா 3 முறையும் தொடரை வென்றுள்ளன.




Next Story