கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: பாகிஸ்தான் அணிக்கு 381 ரன்கள் இலக்கு + "||" + Last Test against South Africa: Target 381 runs for Pakistan

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: பாகிஸ்தான் அணிக்கு 381 ரன்கள் இலக்கு

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: பாகிஸ்தான் அணிக்கு 381 ரன்கள் இலக்கு
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 381 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜோகன்னஸ்பர்க்,

ஜோகன்னஸ்பர்க்கில் நடந்து வரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்க அணி, பாகிஸ்தானுக்கு 381 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே தென்ஆப்பிரிக்கா 262 ரன்களும், பாகிஸ்தான் 185 ரன்களும் எடுத்தன. 77 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா 2-வது நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. அம்லா (42 ரன்), விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் (34 ரன்) அவுட் ஆகாமல் இருந்தனர்.


இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 80.3 ஓவர்களில் 303 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. தனது 4-வது சதத்தை அடித்த குயின்டான் டி காக் 129 ரன்களும் (138 பந்து, 18 பவுண்டரி, ஒரு சிக்சர்), அம்லா 71 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் பாகிஸ்தானுக்கு 381 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பாகிஸ்தான் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சர்ப்ராஸ் அகமது இரண்டு இன்னிங்சையும் சேர்த்து மொத்தம் 10 கேட்ச் செய்தார். இதன் மூலம் கேப்டனாக இருந்து கொண்டு விக்கெட் கீப்பிங்கில் ஒரு டெஸ்டில் அதிகம் பேரை ஆட்டம் இழக்கச் செய்த வீரர் என்ற சாதனையை சர்ப்ராஸ் அகமது படைத்தார். இதற்கு முன்பு அலெக் ஸ்டூவர்ட் (இங்கிலாந்து), கில்கிறிஸ்ட் (ஆஸ்திரேலியா), டோனி (இந்தியா) ஆகியோர் இந்த வகையில் தலா 8 பேரை அவுட் செய்ததே சாதனையாக இருந்தது. அதை சர்ப்ராஸ் அகமது முறியடித்துள்ளார்.

அடுத்து கடின இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் இமாம் உல்-ஹக் (35 ரன்), ஷான் மசூட் (37 ரன்) நல்ல தொடக்கம் அமைத்து தந்தனர். அவர்கள் இருவரையும் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் வெளியேற்றினார். அடுத்து வந்த அசார் அலி (15 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. பின்னர் இறங்கிய வீரர்கள் சரிவை சமாளித்துக் கொண்டனர்.

ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 153 ரன்கள் சேர்த்துள்ளது. ஆசாத் ஷபிக் (48 ரன்), பாபர் அசாம் (17 ரன்) களத்தில் உள்ளனர். பாகிஸ்தானின் வெற்றிக்கு இன்னும் 228 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 7 விக்கெட் உள்ளது. இன்னும் 2 நாள் ஆட்டம் மீதம் உள்ள நிலையில் இந்த போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. தற்போதைக்கு தென்ஆப்பிரிக்காவின் கையே சற்று ஓங்கி இருக்கிறது.