வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் 381 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோல்வி


வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் 381 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோல்வி
x
தினத்தந்தி 27 Jan 2019 10:00 PM GMT (Updated: 27 Jan 2019 6:19 PM GMT)

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 381 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்

பிரிட்ஜ்டவுன், 

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 381 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

டெஸ்ட் கிரிக்கெட்

இலங்கை, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களை வென்ற தெம்போடு இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 23–ந்தேதி பிரிட்ஜ்டவுனில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே வெஸ்ட் இண்டீஸ் 289 ரன்களும், இங்கிலாந்து 77 ரன்களும் எடுத்தன. 212 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 415 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. 8–வது வரிசையில் ஆடிய கேப்டன் ஜாசன் ஹோல்டர் இரட்டை சதம் (202 ரன்) விளாசி சாதனை படைத்தார்.

வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 628 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மலைப்பான இலக்கை நோக்கி 2–வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி, ரோஸ்டன் சேசின் சுழல் வலையில் சிக்கி சிதறியது. 4–வது நாளான நேற்று முன்தினம் 80.4 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் 381 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி கடைசி 31 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை தாரைவார்த்தது கவனிக்கத்தக்கது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸ் 84 ரன்கள் எடுத்தார். சுழற்பந்து வீச்சாளர் ரோஸ்டன் சேஸ் 21.4 ஓவர்களில் 60 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை அள்ளினார். அவரது சிறந்த பந்து வீச்சு இதுவாகும். சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீசின் மிகப்பெரிய வெற்றியாக இது பதிவானது.

போதிய அனுபவம் இல்லாத வெஸ்ட் இண்டீசை எளிதில் வீழ்த்தி விடலாம் என்று கணக்கு போட்ட இங்கிலாந்துக்கு, ஹோல்டர் படையினர் ‘தண்ணி’ காட்டி விட்டனர். டெஸ்ட் தரவரிசையில் இங்கிலாந்து 3–வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 8–வது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஹோல்டர் கருத்து

ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் கூறுகையில், ‘தனிப்பட்ட முறையில் எனக்கு இது மிகச்சிறந்த ஆட்டமாக அமைந்தது. கடந்த இரண்டு மாதங்களாக கடினமாக உழைத்தோம். அதற்குரிய பலனை பெற்று இருக்கிறோம். தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது முக்கியம். அடுத்த டெஸ்டிலும் அதே போன்று செயல்பட வேண்டியது அவசியமாகும்’ என்றார்.

3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2–வது டெஸ்ட் போட்டி வருகிற 31–ந்தேதி ஆன்டிகுவாவில் தொடங்குகிறது.

ஹோல்டர் ‘நம்பர் ஒன்’

ஐ.சி.சி. நேற்று வெளியிட்ட டெஸ்ட் கிரிக்கெட் ஆல்–ரவுண்டர்களின் தரவரிசை பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் 2 இடம் முன்னேறி ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஒருவர் டெஸ்ட் ஆல்–ரவுண்டரில் ‘நம்பர் ஒன்’ ஆவது 1974–ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். இதில் வங்காளதேச வீரர் ‌ஷகிப் அல்–ஹசன் 2–வது இடத்திலும், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 3–வது இடத்திலும் உள்ளனர்.


Next Story