பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோல்வி


பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோல்வி
x
தினத்தந்தி 1 Feb 2019 11:15 PM GMT (Updated: 1 Feb 2019 11:14 PM GMT)

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி தோல்வி அடைந்தது.

ஹாமில்டன்,

இந்தியா - நியூசிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 44 ஓவர்களில் 149 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக தீப்தி ஷர்மா 52 ரன்களும், ஹர்மன்பிரீத் கவுர் 24 ரன்களும் எடுத்தனர். நட்சத்திர வீராங்கனைகள் மந்தனா ஒரு ரன்னிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 12 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள். தனது 200-வது ஒரு நாள் போட்டியில் ஆடிய கேப்டன் மிதாலி ராஜ் 28 பந்துகளில் 9 ரன் எடுத்து ஏமாற்றம் அளித்தார். நியூசிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் அன்னா பீட்டர்சன் 4 விக்கெட்டும், அமெலியா கெர் 2 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் லியா தாஹூ 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்து களம் இறங்கிய நியூசிலாந்து அணி 29.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சுசி பேட்ஸ் (57 ரன்), கேப்டன் சட்டர்த்வெயிட் (66 ரன்) அரைசதம் அடித்தனர்.

நியூசிலாந்து அணிக்கு இது ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது. ஏனெனில் முதல் 2 ஆட்டத்தில் வென்று இருந்த இந்திய பெண்கள் அணி ஒரு நாள் போட்டித் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் 3 ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை உறுதி செய்த இந்திய ஆண்கள் அணி ஹாமில்டனில் நடந்த அடுத்த ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அதேபோல் இந்திய பெண்கள் அணியும் தொடரை வென்ற பிறகு ஹாமில்டனில் நடந்த இந்த ஆட்டத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.

அடுத்து இந்தியா-நியூசிலாந்து பெண்கள் அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டித் தொடர் நடைபெறுகிறது. இதன் முதலாவது ஆட்டம் 6-ந்தேதி வெலிங்டனில் நடக்கிறது.

200 ஆட்டங்களில் பங்கேற்று மிதாலி சாதனை

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்திய பெண்கள் அணியின் கேப்டன் மிதாலி ராஜூக்கு 200-வது ஒருநாள் போட்டியாகும். இதன் மூலம் 200 ஒருநாள் போட்டியில் ஆடிய முதல் வீராங்கனை என்ற பெருமையை மிதாலி ராஜ் பெற்றார். 36 வயதான மிதாலி ராஜ் 1999-ம் ஆண்டு, ஒரு நாள் போட்டி அணியில் அடியெடுத்து வைத்தார். அது முதல் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்திய பெண்கள் அணி இதுவரை 263 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கிறது. இதில் 200 ஆட்டத்தில் மிதாலி ராஜ் இடம் பிடித்துள்ளார்.

“ஆரம்பத்தில் இந்திய அணிக்காக ஆடுவது மட்டுமே எனது ஒரே இலக்காக இருந்தது. ஆனால் இவ்வளவு காலம் நீடிப்பேன் என்று ஒரு போதும் நினைத்ததில்லை’ என்று மிதாலி குறிப்பிட்டார். என்னை பொறுத்தவரை 200 என்பது வெறும் நம்பர் மட்டுமே என்றும் கூறினார்.

Next Story