தொடரை வெற்றியுடன் முடிப்பது யார்? கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை


தொடரை வெற்றியுடன் முடிப்பது யார்? கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை
x
தினத்தந்தி 2 Feb 2019 11:30 PM GMT (Updated: 2 Feb 2019 11:19 PM GMT)

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

வெலிங்டன்,

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 ஆட்டங்களில் முறையே 8 விக்கெட், 90 ரன், 7 விக்கெட் வித்தியாசங்களில் எளிதில் வெற்றி பெற்ற இந்திய அணி 4-வது ஆட்டத்தில் படுதோல்வி அடைந்தது. ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்ட இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் இன்று நடக்கிறது.

முதல் மூன்று ஆட்டங்களில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அசத்திய இந்திய அணி ஹாமில்டனில் நடந்த முந்தைய ஆட்டத்தில் வெறும் 92 ரன்னில் சுருண்டது. டிரென்ட் பவுல்ட்டும், காலின் கிரான்ட்ஹோமும் ‘ஸ்விங்’ தாக்குதலில் மிரள வைத்தனர். கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் மோசமான பேட்டிங்காக இது அமைந்தது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நெருங்கி வரும் வேளையில், இந்திய அணி போராட்டம் இன்றி ‘சரண்’ அடைந்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. கேப்டன் விராட் கோலி, விக்கெட் கீப்பர் டோனி இல்லாததன் பாதிப்பை உணர முடிந்தது.

கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு விட்ட நிலையில், தசைப்பிடிப்பால் கடந்த 2 ஆட்டங்களில் விளையாடாத டோனி உடல்தகுதியை எட்டிவிட்டதாக இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது, கடந்த ஆட்டத்தில் மிடில் வரிசை சொதப்பினாலும், பல தருணங்களில் மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் அபாரமாக விளையாடி வெற்றி தேடித்தந்திருப்பதை சுட்டிக்காட்டினார். டோனி களம் இறங்குவது, மிடில்வரிசையை வலுப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. அதே போல் அவரது ஆலோசனைகளும் வியூகங்கள் வகுக்க உதவிகரமாக இருக்கும்.

தொடக்க ஆட்டக்காரர்களான பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் கடந்த ஆட்டத்தில் தடுமாறி விட்டனர். அவர்கள் நிலைத்து நின்று ஆட வேண்டியது முக்கியம். அவர்கள் நல்ல தொடக்கம் தந்தால் தான் சவாலான ஸ்கோரை எட்ட முடியும்.

அதே சமயம் முந்தைய ஆட்டத்தில் கிடைத்த வெற்றியால் உற்சாகமடைந்துள்ள நியூசிலாந்து அணி தொடரை 2-3 என்ற கணக்கில் முடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. முதுகுவலியால் அவதிப்படும் மார்ட்டின் கப்தில் இன்றைய ஆட்டத்தில் ஆடமாட்டார் என்று தெரிகிறது. அவர் ஆட முடியாமல் போனால் அவருக்கு பதிலாக காலின் முன்ரோ சேர்க்கப்படுவார். மற்றபடி அந்த அணியில் மாற்றம் இருக்காது.

மொத்தத்தில் தொடரை வெற்றியுடன் நிறைவு செய்ய இரு அணிகளும் வரிந்து கட்டும் என்பதால் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது.

போட்டி நடக்கும் வெலிங்டனில், நியூசிலாந்து அணி இதுவரை 28 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி அதில் 16-ல் வெற்றியும், 10-ல் தோல்வியும் கண்டுள்ளது. 2 ஆட்டத்தில் முடிவில்லை. இந்திய அணி இங்கு 3 ஆட்டத்தில் ஆடி ஒன்றில் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் கண்டது. ஒரு ஆட்டத்தில் முடிவு இல்லை. 2015-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 393 ரன்கள் குவித்தது இங்கு ஒரு அணியின் அதிகபட்சமாகும். 2002-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து 89 ரன்னில் சுருண்டது குறைந்தபட்சமாகும். இங்கு காற்றின் தாக்கம் இருக்கும் என்பதால், பவுலர்கள் ஸ்விங் செய்ய வாய்ப்புள்ளது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், சுப்மான் கில், அம்பத்தி ராயுடு, டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், கலீல் அகமது அல்லது முகமது சிராஜ்.

நியூசிலாந்து: ஹென்றி நிகோல்ஸ், காலின் முன்ரோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் லாதம், காலின் டி கிரான்ட்ஹோம், ஜேம்ஸ் நீஷம், டக் பிரேஸ்வெல் அல்லது மிட்செல் சான்ட்னெர், டாட் ஆஸ்ட்லே, மேட் ஹென்றி அல்லது டிம் சவுதி, டிரென்ட் பவுல்ட்.

இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

களத்தில் டோனி நின்றால்...

“டோனி ஒரு அற்புதமான வீரர். அவர் எப்படிப்பட்ட வீரர் என்பதை அவரது சாதனைகளே பறைசாற்றும். உலக கோப்பை அணியில் அவர் இடம் பெற வேண்டுமா, வேண்டாமா? என்பது குறித்து சில இந்திய ஊடகங்கள் விவாதித்து வருகின்றன. என்னை பொறுத்தவரை, டோனி மிடில் வரிசையில் மிக முக்கியமான வீரர் ஆவார். அவருக்கு பந்து வீசும் போது, அவரை அவுட் செய்யாத வரை நம்மால் வெற்றி பெற முடியாது என்பதை நாங்கள் அறிவோம்” என்று நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் கூறினார்.


Next Story