வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி மீண்டும் வெற்றி - தொடரை முழுமையாக கைப்பற்றியது


வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி மீண்டும் வெற்றி - தொடரை முழுமையாக கைப்பற்றியது
x
தினத்தந்தி 11 March 2019 11:00 PM GMT (Updated: 11 March 2019 10:13 PM GMT)

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது.

பாஸ்செட்டரே,

இங்கிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் உள்ள பாஸ்செட்டரேவில் நேற்று நடந்தது.

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. ரன் கணக்கை தொடங்கும் முன்பே அந்த அணி முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. இங்கிலாந்து வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறிய வெஸ்ட்இண்டீஸ் அணி 13 ஓவர்களில் 71 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக கேம்ப்பெல், கேப்டன் ஜாசன் ஹோல்டர், நிகோலஸ் பூரன் தலா 11 ரன்னும், ஒபெட் மெக்கோய் 10 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னை தாண்டவில்லை. முந்தைய ஆட்டத்தில் உலக சாம்பியன் வெஸ்ட்இண்டீஸ் அணி 45 ரன்னில் சுருண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணி தரப்பில் டேவிட் வில்லி 4 விக்கெட்டும், மார்க்வுட் 3 விக்கெட்டும், அடில் ரஷித் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 72 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அலெக்ஸ் ஹாலெஸ் 20 ரன்னிலும் (13 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன்), பேர்ஸ்டோ 37 ரன்னிலும் (31 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன்) அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இங்கிலாந்து அணி 10.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜோரூட் 4 ரன்னுடனும், கேப்டன் இயான் மோர்கன் 10 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து வீரர்கள் டேவிட் வில்லி ஆட்டநாயகன் விருதும், கிறிஸ் ஜோர்டான் தொடர்நாயகன் விருதும் பெற்றனர்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 137 ரன்கள் வித்தியாசத்திலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இருந்தது.


Next Story