கிரிக்கெட்

ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வெல்வது யார்? இந்தியா-ஆஸ்திரேலியா கடைசி ஆட்டத்தில் இன்று மோதல் + "||" + Who will win one day cricket series? Today's match in India-Australia last match

ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வெல்வது யார்? இந்தியா-ஆஸ்திரேலியா கடைசி ஆட்டத்தில் இன்று மோதல்

ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வெல்வது யார்? இந்தியா-ஆஸ்திரேலியா கடைசி ஆட்டத்தில் இன்று மோதல்
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று நடக்கிறது.
புதுடெல்லி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஐதராபாத், நாக்பூரில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் இந்தியாவும், ராஞ்சி, மொகாலியில் நடந்த அடுத்த இரு ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. இதனால் இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலை வகிக்கிறது.


இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

தொடக்க இரு ஆட்டங்களில் வெற்றி பெற்ற நிலையில், அடுத்த இரு ஆட்டங்களில் இந்தியா சறுக்கி விட்டது. குறிப்பாக மொகாலியில் நடந்த முந்தைய ஆட்டத்தில் இந்திய அணி 358 ரன்கள் குவித்த போதிலும் மோசமான பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கால் தோல்வியை சந்திக்க நேரிட்டது. இதே போல் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்டும் சில வாய்ப்புகளை வீணடித்தார். முதலில் பேட் செய்து இந்தியா 350 ரன்களுக்கு மேல் எடுத்தும் தோற்றது அது தான் முதல் தடவையாகும். பனிப்பொழிவால் பவுலர்களுக்கு பந்து வீசுவதற்கு சரியான ‘கிரிப்’ கிடைக்கவில்லை என்று கேப்டன் கோலி காரணம் சொல்லி நழுவினார். தற்போது, தவறுக்கு பரிகாரம் தேட வேண்டிய நேரமாகும்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக இந்திய அணி களம் இறங்கும் கடைசி சர்வதேச போட்டி இதுவாகும். உலக கோப்பைக்கு நம்பிக்கையான மனநிலையுடன் புறப்படுவதற்கு இந்த தொடரை வெல்வது அவசியமாகும்.

கடந்த ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் முதல் விக்கெட்டுக்கு 193 ரன்கள் சேர்த்து வலுவான அஸ்திவாரம் அமைத்து தந்தனர். அதே போன்று இன்றைய ஆட்டத்திலும் விளையாடினால், மறுபடியும் பெரிய ஸ்கோரை எட்ட முடியும். இது, கேப்டன் விராட் கோலியின் சொந்த ஊர் ஆகும். இந்த தொடரில் ஏற்கனவே 2 செஞ்சுரி அடித்துள்ள கோலி சொந்த ஊரிலும் அசத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

டெல்லி ஆடுகளம் எப்போதும் வேகமின்றி (ஸ்லோ) காணப்படும். அதனால் இந்த ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சின் தாக்கம் முக்கிய பங்கு வகிக்கும். இதையொட்டி இந்திய பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் அளித்த பேட்டியில், ‘4-வது ஒரு நாள் போட்டியில் ஆஷ்டன் டர்னருக்கு எதிராக நாங்கள் திட்டமிட்டபடி துல்லியமாக பந்து வீசவில்லை. ஆனால் மீண்டும் அதே போன்ற சூழ்நிலை எழுந்தால், நிச்சயம் சிறப்பாக செயல்படுவோம். பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் மூன்று துறைகளிலும் சில பகுதிகளில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமாகும்’ என்றார்.

‘இந்த ஆஸ்திரேலிய தொடரில் பயன்படுத்திய இந்திய ஆடும் லெவன் அணியை அப்படியே உலக கோப்பை போட்டியிலும் தொடர வேண்டிய அவசியம் கிடையாது. உலக கோப்பை தொடரில் எந்த மாதிரியான கலவையில் வீரர்களை இடம் பெறச்செய்வோம் என்பது ஏறக்குறைய தெரிந்து விட்டது. ஆனாலும் அதற்கு முன்பாக எல்லாவிதமான பரிசோதனை முயற்சிகளையும் செய்து பார்க்க விரும்புகிறோம்’ என்றும் பரத் அருண் குறிப்பிட்டார்.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை சரிவில் இருந்து எழுச்சி பெற்று அடுத்தடுத்து கிடைத்த வெற்றியால் புது தெம்பு அடைந்துள்ளது. உஸ்மான் கவாஜாவின் நிலையான ஆட்டம் அந்த அணியின் பேட்டிங்குக்கு வலு சேர்க்கிறது. முந்தைய ஆட்டத்தில் இமாலய இலக்கை எட்ட வைத்த பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் (117 ரன்), ஆஷ்டன் டர்னர் (43 பந்தில் 84 ரன்) ஆகியோரும் இன்றைய ஆட்டத்தில் கவனிக்கத்தக்க வீரர்களாக இருப்பார்கள். 2009-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக இந்திய மண்ணில் தொடரை வெல்லும் முனைப்புடன் ஆஸ்திரேலிய அணியினர் வியூகங்களை வகுத்துள்ளனர்.

ஆஸ்திரேலிய துணை கேப்டனும், விக்கெட் கீப்பருமான அலெக்ஸ் காரி அளித்த பேட்டியில், ‘நாங்கள் சில இந்திய உள்ளூர் பவுலர்களை கொண்டு வலை பயிற்சியில் ஈடுபட்டோம். இது உண்மையிலேயே நல்ல அனுபவமாக இருந்தது. அது மட்டுமின்றி கடந்த 12-18 மாதங்களாக சுழற்பந்து வீச்சை திறம்பட சமாளிப்பதில் கடினமாக உழைத்து வருகிறோம். அதற்குரிய பலனையும் பார்த்துள்ளோம். மீண்டும் இந்திய சுழற்பந்து வீச்சை அடித்து நொறுக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எங்களது வீரர்கள் நாளைய (இன்று) போட்டியில் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதில் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறார்கள். இது தொடரை முடிவு செய்யும் ஆட்டம் என்பதால் சுவாரஸ்யமாக இருக்கும்’ என்றார். ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கி அதன் பிறகு தொடரை வென்றதாக வரலாறு கிடையாது. அந்த பெருமையை இந்தியா தக்க வைத்துக் கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

டெல்லி மைதானத்தில் இந்திய அணி இதுவரை 19 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி அதில் 12-ல் வெற்றியும், 6-ல் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை. ஆஸ்திரேலிய அணி இங்கு 5 ஆட்டங்களில் ஆடி 2-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. இவற்றில் இந்தியாவை எதிர்கொண்ட 4 ஆட்டங்களில் 3-ல் தோல்வி கண்டிருக்கிறது.

2011-ம் ஆண்டு நெதர்லாந்துக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி 330 ரன்கள் குவித்தது, இங்கு ஒரு அணியின் சிறந்த ஸ்கோராகும். 1987-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 289 ரன்கள் எடுத்தது இந்தியாவின் அதிகபட்சமாகும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல் அல்லது அம்பத்தி ராயுடு, ரிஷாப் பான்ட், கேதர் ஜாதவ், விஜய் சங்கர், புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா.

ஆஸ்திரேலியா: உஸ்மான் கவாஜா, ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஷான் மார்ஷ், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், மேக்ஸ்வெல், ஆஷ்டன் டர்னர், அலெக்ஸ் காரி, கம்மின்ஸ், நாதன் லயன், ஜெயே ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா.

பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

ரிஷாப் பான்டை டோனியுடன் ஒப்பிடுவது நியாயமற்றது - பரத் அருண்

மொகாலியில் நடந்த 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் முக்கியமான கட்டத்தில் ஸ்டம்பிங்கை கோட்டை விட்டார். அது தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அதைத் தொடர்ந்து டோனியுடன் ஒப்பிட்டு ரிஷாப் பான்டை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். இது குறித்து இந்திய பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருணிடம் நேற்று கேட்ட போது ‘ரிஷாப் பான்டை டோனியுடன் ஒப்பிட்டு பேசுவது நியாயமற்றது. டோனி ஒரு ஜாம்பவான். விக்கெட் கீப்பிங் செய்வதில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறார். மேலும் கேப்டன் விராட் கோலிக்கு தேவையான நேரத்தில் ஆலோசனைகளை வழங்குகிறார்’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ‘ஆல்-ரவுண்டர் விஜய் சங்கருக்கு இப்போது பேட்டிங்கில் நம்பிக்கை அதிகரித்துள்ளது. 4, 6 மற்றும் 7 என்று பல வரிசைகளிலும் பேட்டிங்கில் அற்புதமாக செயல்பட்டுள்ளார். அது மட்டுமின்றி மணிக்கு 130 கிலோமீட்டர் வேகம் வரை பந்து வீசுகிறார். இது அணிக்கு மிகப்பெரிய சாதகமான அம்சமாகும்’ என்றார்.