பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: கடைசி ஆட்டத்திலும் இங்கிலாந்து வெற்றி


பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: கடைசி ஆட்டத்திலும் இங்கிலாந்து வெற்றி
x
தினத்தந்தி 19 May 2019 11:31 PM GMT (Updated: 19 May 2019 11:31 PM GMT)

பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், கடைசி ஆட்டத்திலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.

ஹெட்டிங்லே,

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹெட்டிங்லேயில் நேற்று நடந்தது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் (84 ரன், 9 பவுண்டரி), கேப்டன் மோர்கன் (76 ரன், 4 பவுண்டரி, 5 சிக்சர்) அரைசதம் விளாசினர். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 400 ரன்களை தாண்டுவது போல் பயணித்தது. மிடில் வரிசையில் விக்கெட் சரிவால் ரன்வேகம் கொஞ்சம் தளர்ந்து போனது. பாகிஸ்தான் தரப்பில் ஷகீன் ஷா அப்ரிடி 4 விக்கெட்டுகளும், இமாத் வாசிம் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

அடுத்து களம் புகுந்த பாகிஸ்தான் அணி 6 ரன்னுக்குள் பஹார் ஜமான் (0), அபித் அலி (5 ரன்), முகமது ஹபீஸ் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இந்த 3 விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் கபளகரம் செய்தார். அதன் பிறகு பாபர் அசாம் (80 ரன்), கேப்டன் சர்ப்ராஸ் அகமது (97 ரன்) இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். துரதிர்ஷ்டவசமாக இருவரும் ரன்-அவுட் ஆக, மீண்டும் அந்த அணி தடம் புரண்டது. முடிவில் பாகிஸ்தான் அணி 46.5 ஓவர்களில் 297 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட இந்த ஒரு நாள் தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் ரத்தானது குறிப்பிடத்தக்கது.


Next Story