கிரிக்கெட்

வெற்றியுடன் தொடங்குமா இந்திய அணி? - தென்ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல் + "||" + Will Indian team start with victory? - Conflict with South Africa today

வெற்றியுடன் தொடங்குமா இந்திய அணி? - தென்ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல்

வெற்றியுடன் தொடங்குமா இந்திய அணி? - தென்ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் உள்ள இந்திய அணி தனது முதலாவது லீக்கில் தென்ஆப்பிரிக்காவுடன் இன்று மோதுகிறது.
சவுதம்டன்,

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.


உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா தொடங்கி ஒரு வாரம் ஆன போதிலும் இன்னும் ஒரு அணி மட்டும் களம் காணாமல் உள்ளது. அது வேறு எந்த அணியும் அல்ல, நம்ம இந்தியா தான். 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாடி விட்டு தொடர்ந்து ஓய்வில் இருந்த இந்திய அணி இன்று தனது முதலாவது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை சவுதம்டனில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் சந்திக்கிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதலாவது பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்திடம் மோசமாக தோற்றாலும் வங்காளதேசத்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 359 ரன்கள் குவித்து எளிதில் வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தில் லோகேஷ் ராகுலும், டோனியும் சதம் அடித்தது நல்ல அறிகுறியாகும். இதன் மூலம் இந்திய அணியில் 4-வது வரிசையில் ஆடுவது யார்? என்ற கேள்விக்கு லோகேஷ் ராகுல் விடையளித்து விட்டார்.

இது முதல் ஆட்டம் என்பதால் வெற்றியுடன் தொடங்குவது மிகவும் முக்கியமாகும். அப்போது தான் முழு உத்வேகத்துடன் பயணிக்க முடியும். தொடக்க ஆட்டக்காரர்களான துணை கேப்டன் ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் நிலைத்து நின்று வலுவான தொடக்கம் தர வேண்டியது அவசியமாகும். மிடில் வரிசையில் தாங்கிப்பிடிக்க கேப்டன் விராட் கோலி, லோகேஷ் ராகுல், டோனி, ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்டோர் காத்திருக்கிறார்கள். இதில் கோலியின் பேட்டிங் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பொதுவாக தென்ஆப்பிரிக்க வீரர்கள் சுழற்பந்து வீச்சில் தடுமாறக்கூடியவர்கள் என்பதால் குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரை கொண்டு இந்தியா தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி மிரட்டுவார்கள். கேதர் ஜாதவ் உடல்தகுதியை எட்டாத பட்சத்தில் அவரது இடத்தில் விஜய் சங்கர் அல்லது ரவீந்திர ஜடேஜா ஆகியோரில் ஒருவர் ஆடுவார்கள்.

தென்ஆப்பிரிக்க அணி தனது முதல் ஆட்டத்தில் 104 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்திடமும், 2-வது ஆட்டத்தில் 21 ரன் வித்தியாசத்தில் வங்காளதேசத்திடமும் தோல்வி அடைந்தது. உலக கோப்பை வரலாற்றில் தென்ஆப்பிரிக்க அணி தனது முதல் 2 ஆட்டங்களில் வரிசையாக தோற்றிருப்பது இதுவே முதல் முறையாகும். இதனால் கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் தென்ஆப்பிரிக்க அணியினர் சரிவில் இருந்து மீண்டெழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் காயத்தால் உலக கோப்பை தொடரில் இருந்து விலகி விட்டார். தசைப்பிடிப்பால் அவதிப்படும் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் நிகிடியும் சில ஆட்டங்களில் விளையாட முடியாத நிலைமையில் இருக்கிறார். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இதனால் தங்களது வியூகங்களை மாற்ற வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக அந்த அணியின் கேப்டன் பிளிஸ்சிஸ் கூறியுள்ளார். ‘பவுன்சர்’ பந்து தாக்கி காயமடைந்த அம்லா அந்த பாதிப்பில் இருந்து மீண்டு விட்டதால் இன்றைய ஆட்டத்தில் ஆடுவார் என்று தெரிகிறது.

டிவில்லியர்ஸ் ஓய்வு பெற்ற பிறகு தென்ஆப்பிரிக்கா பேட்டிங்கில் வெகுவாக பலவீனமடைந்து விட்டது. கேப்டன் பிளிஸ்சிஸ், விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் ஆகியோரை தான் அந்த அணி மலைபோல் நம்பி இருக்கிறது. இவர்களை சீக்கிரம் காலி செய்து விட்டால், தென்ஆப்பிரிக்காவின் ‘அஸ்திவாரம்’ ஆட்டம் கண்டு விடும்.

சவுதம்டன் மைதானம் பேட்டிங்குக்கு சாதகமானது. இங்கு கடந்த மாதம் நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து 3 விக்கெட்டுக்கு 373 ரன்கள் குவித்ததும், அதை விரட்டிய பாகிஸ்தான் நெருங்கி வந்து 12 ரன் வித்தியாசத்தில் தோற்றதும் நினைவு கூரத்தக்கது. இந்திய அணி இங்கு 3 ஆட்டங்களில் ஆடி ஒன்றில் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது.

வானிலையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், லேசான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. இவ்வாறான சீதோஷ்ண நிலை இருந்தால் தொடக்க கட்டத்தில் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு கொஞ்சம் ஒத்துழைக்கும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல், டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் அல்லது ரவீந்திர ஜடேஜா, பும்ரா, முகமது ஷமி அல்லது புவனேஷ்வர்குமார்.

தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், அம்லா, மார்க்ராம், பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), வான்டெர் துஸ்சென், டுமினி அல்லது தப்ரைஸ் ஷம்சி, டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ் அல்லது பிரிட்டோரியஸ், பெலக்வாயோ, ரபடா, இம்ரான் தாஹிர்.

இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. தூர்தர்ஷனிலும் இந்த போட்டியை காணலாம்.

‘என்னை விமர்சித்த ரபடாவுடன் நேருக்கு நேர் விவாதிப்பேன்’- கோலி

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தோம். அந்த தோல்வியில் இருந்து நாங்கள் பாடம் கற்றுக்கொண்டு இருக்கிறோம். சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை விட இப்போது வலுவான அணியாக உள்ளோம்.

இந்த உலக கோப்பையில் சில ஆட்டங்கள் ஒரு தரப்பாக அமைந்துள்ளன. களத்தில் பொறுமையாக செயல்படுவது குறித்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். பதற்றமின்றி நிதானமாக செயல்படும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாகும்.

தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா என்னை முதிர்ச்சியற்ற வீரர் என்று விமர்சித்தது குறித்து கேள்வி கேட்கிறீர்கள். அவருக்கு நான் இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் பதில் அளிக்க விரும்பவில்லை. அவருக்கு எதிராக நான் பல ஆட்டங்களில் விளையாடி இருக்கிறேன். இந்த விஷயத்தில் அவருடன் நேருக்கு நேர் விவாதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதை தனிப்பட்ட முறையில் செய்வேன். அவர் உலகத் தரம் வாய்ந்த ஒரு பவுலர். அவருக்குரிய நாளாக அமைந்து விட்டால் எந்த பேட்டிங் வரிசையையும் சீர்குலைத்து அச்சுறுத்தலாக விளங்குவார். எனவே எந்த வகையிலும் அவர்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளமாட்டோம்.

ஸ்டெயினுக்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அவர் எனது நீண்ட கால நண்பர். அணிக்கு மீண்டும் திரும்பிய போது மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். இவ்வாறு கோலி கூறினார்.

மற்றொரு ஆட்டத்தில் வங்காளதேசம்- நியூசிலாந்து மோதல்

இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. மற்றொரு ஆட்டத்தில் மோர்தசா தலைமையிலான வங்காளதேச அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்துடன் லண்டன் ஓவலில் மோதுகிறது. வங்காளதேச அணி தனது முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்தது. நியூசிலாந்து அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை பந்தாடியது. இப்போது 2-வது வெற்றிக்காக இரு அணிகளும் வரிந்து கட்டுகின்றன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.

இவ்விரு அணிகளும் உலக கோப்பையில் இதுவரை 4 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. நான்கிலும் நியூசிலாந்தே வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.