ஊக்க மருந்து பயன்படுத்தியதால் இந்திய இளம் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவுக்கு 8 மாதம் தடை


ஊக்க மருந்து பயன்படுத்தியதால்  இந்திய இளம் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவுக்கு 8 மாதம் தடை
x
தினத்தந்தி 30 July 2019 10:15 PM GMT (Updated: 30 July 2019 8:26 PM GMT)

ஊக்கமருந்து பயன்படுத்திய இந்திய இளம் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவுக்கு 8 மாதம் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

ஊக்கமருந்து பயன்படுத்திய இந்திய இளம் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவுக்கு 8 மாதம் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்வி ஷா

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான பிரித்வி ஷா கடந்த ஆண்டு (2018) அக்டோபரில் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்த (134 ரன்) இந்திய இளம் வீரர் என்ற சாதனையை படைத்த பிரித்வி ஷா இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அதன் பிறகு அணியில் இடம் பெறவில்லை.

மராட்டியத்தை சேர்ந்த 19 வயதான பிரித்வி ஷாவுக்கு, கடந்த பிப்ரவரி மாதம் சையது முஸ்தாக் அலி 20 ஓவர் போட்டியின் போது அவரது சிறுநீர் மாதிரி சேகரிக்கப்பட்டு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. இதில் அவர் தடை செய்யப்பட்ட ‘டெர்புடாலின்’ என்ற ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது. இருமலுக்கு மருந்து எடுத்துக் கொண்ட போது கவனக்குறைவு காரணமாக இந்த தவறு நடந்து விட்டதாக பிரித்வி ஷா அளித்த விளக்கத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொண்டதால் அவர் பெரிய தண்டனையில் இருந்து தப்பினார்.

8 மாதம் தடை

பிரித்வி ஷா அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாட 8 மாதம் தடை விதித்து இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவரது இடைநீக்கம் காலம் கடந்த மார்ச் 16-ந் தேதி தொடங்கி நவம்பர் 15-ந் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கு அவர் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை.

பிரித்வி ஷா கூறுகையில், ‘இந்த தண்டனையை ஏற்றுக்கொள்கிறேன். அதே சமயம் காயத்தில் இருந்து இன்னும் மீளாத நிலையில் 8 மாத தடை என்னை உண்மையிலேயே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. ஒரு விளையாட்டு வீரராக எந்த ஒரு மருந்தை உட்கொண்டாலும் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்துள்ளேன். மற்ற விளையாட்டு பிரபலங்களும் எனது தவறை ஒரு பாடமாக எடுத்துக் கொள்வார்கள் என்ற நம்புகிறேன். கிரிக்கெட் தான் எனது வாழ்க்கை. இந்திய அணிக்காகவும், முதல்தர கிரிக்கெட்டில் மும்பை அணிக்காகவும் விளையாடுவதை தவிர வேறு எதுவும் எனக்கு பெருமை கிடையாது. தடை முடிந்து வலுவான வீரராக மீண்டு வருவேன்’ என்று குறிப்பிட்டார்.

மேலும் 2 பேர்

பிரித்வி ஷாவை தவிர முதல்தர கிரிக்கெட் வீரர்கள் அக்‌ஷய் துலர்வார் (விதர்பா), திவ்யா காஜ்ராஜ் (ராஜஸ்தான்) ஆகியோரும் ஊக்கமருந்து விதிமுறையை மீறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் அவர்களுக்கு முறையே 8 மாதம் மற்றும் 6 மாதம் தடை விதிக்கப்பட்டது.


Next Story