வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா? - கடைசி ஆட்டம் இன்று நடக்கிறது


வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா? - கடைசி ஆட்டம் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 13 Aug 2019 11:49 PM GMT (Updated: 13 Aug 2019 11:49 PM GMT)

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் உள்ள இந்திய அணி இன்று கடைசி ஒரு நாள் போட்டியில் களம் இறங்குகிறது.

போர்ட் ஆப் ஸ்பெயின்,

வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வசப்படுத்தியது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. இதில் முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் ரத்தானது. 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று நடக்கிறது.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஆதிக்கத்தை நிலைநாட்டி தொடரை கைப்பற்றுவதில் இந்தியா தீவிர முனைப்பு காட்டி வருகிறது. கடந்த ஆட்டத்தில் விராட் கோலியின் (120 ரன்) சதமும், 5-வது வரிசையில் ஆடிய ஸ்ரேயாஸ் அய்யரின் அரைசதமும் (71 ரன்) வெற்றிக்கு உறுதுணையாக இருந்தன. இந்திய அணிக்கு 4-வது பேட்டிங் வரிசை தான் தீராத தலைவலியாக இருக்கிறது. அந்த இடத்திற்கு ஸ்ரேயாஸ் அய்யரை இறக்க வேண்டும், அதற்கு அவர் பொருத்தமானவராக இருப்பார் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். ஆனால் அணி நிர்வாகம் இப்போதைக்கு ரிஷாப் பண்ட்டை தொடர்ந்து 4-வது வரிசைக்கு பயன்படுத்தும் என்று தெரிகிறது.

தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானின் ஆட்டம் கவலையளிக்கும் வகையில் உள்ளது. இந்த வெஸ்ட் இண்டீஸ் பயணத்தில் தவான் முறையே 1, 23, 3, 2 ரன் எடுத்து சொதப்பி உள்ளார். உலக கோப்பை கிரிக்கெட்டில் அசத்திய தவான், காயத்தில் இருந்து குணமடைந்து இந்த தொடருக்கு தான் திரும்பினார். இந்த தொடரில் எதிர்பார்த்த அளவுக்கு அவரது ஆட்டம் அமையவில்லை.

அடுத்து வரும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் இடம் பெறவில்லை. இதனால் இந்த பயணத்தில் தனது கடைசி ஆட்டத்தில் முத்திரை பதிக்க ஆர்வமாக உள்ளார்.

ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை சமன் செய்ய கடுமையாக போராடும். அந்த அணியில் திறமையான வீரர்களுக்கு குறைவில்லை. இவர்கள் ஒரு சேர ஜொலித்தால் இந்தியாவுக்கு சிக்கல் தான்.

39 வயதான கிறிஸ் கெய்ல், சொந்த மண்ணில் நடக்கும் இந்திய தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவேன் என்று கடந்த ஜூன் மாதம் கூறியிருந்தார். இதன்படி பார்த்தால் இதுவே அவருக்கு கடைசி சர்வதேச போட்டியாக இருக்கலாம். முந்தைய ஆட்டத்தில் அரைசதம் அடித்த தொடக்க ஆட்டக்காரர் இவின் லீவிஸ் பின்னங்கால் காயத்தால் அவதிப்படுவதால் இந்த ஆட்டத்தில் ஆடுவதில் சந்தேகம் நிலவுகிறது.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான நேரடி ஒரு நாள் தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக 8 தொடர்களை வென்று இருக்கிறது. அந்த வீறுநடைக்கு வெஸ்ட் இண்டீஸ் முட்டுக்கட்டை போடுமா? அல்லது மறுபடியும் அடிபணியுமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, ரிஷாப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர், கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர்குமார், முகமது ஷமி, கலீல் அகமது, குல்தீப் யாதவ்.

வெஸ்ட் இண்டீஸ்: கிறிஸ் கெய்ல், இவின் லீவிஸ் அல்லது ஜான் கேம்ப்பெல், ஷாய் ஹோப், ஹெட்மயர், நிகோலஸ் பூரன், ரோஸ்டன் சேஸ், ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), கார்லஸ் பிராத்வெய்ட், கெமார் ரோச், ஷெல்டன் காட்ரெல், ஒஷானே தாமஸ்.

இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி டென்1, சோனி டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

இன்றைய ஆட்டம் முழுவதும் அவ்வப்போது மழை குறுக்கிடலாம் என்று அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆட்டத்தில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும்.


Next Story