பவுன்சர் பந்து தாக்கியதால் காயம்: கடைசி நாள் ஆட்டத்தில் இருந்து ஸ்டீவன் சுமித் விலகல்


பவுன்சர் பந்து தாக்கியதால் காயம்: கடைசி நாள் ஆட்டத்தில் இருந்து ஸ்டீவன் சுமித் விலகல்
x
தினத்தந்தி 18 Aug 2019 11:36 PM GMT (Updated: 18 Aug 2019 11:36 PM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் ‘பவுன்சர்’ பந்து தாக்கியதால் காயமடைந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் கடைசி நாள் ஆட்டத்தில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக லபுஸ்சேன் மாற்று வீரராக இறங்கி பேட்டிங் செய்தார்.

லண்டன்,

லண்டனில் நடந்த ஆஷஸ் 2-வது டெஸ்டில் 4-வது நாள் ஆட்டத்தின் போது ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித், ‘பவுன்சர்’ பந்து தாக்கி காயமடைந்தார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய ஒரு பந்து எகிறிச் சென்று அவரது கழுத்தை பயங்கரமாக பதம் பார்த்ததில் சுமித் நிலைகுலைந்து கீழே சரிந்தார். மைதானத்தை விட்டு வெளியேறிய அவர் சிறிது நேர சிகிச்சைக்கு பிறகு தைரியமாக மீண்டும் களம் இறங்கி 92 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

இந்த நிலையில் பந்து தாக்கியதன் விளைவை நேற்று தான் சுமித் முழுமையாக உணர்ந்தார். தலைவலி மற்றும் தலைசுற்றலால் அவதிப்பட்ட அவர் சோர்ந்து காணப்பட்டார். இதையடுத்து கழுத்து பகுதியில் மேற்கொண்டு ஏதாவது பாதிப்பு இருக்கிறதா என்பதை துல்லியமாக அறிய ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதனால் இந்த டெஸ்டில் கடைசி நாள் ஆட்டத்தில் இருந்து அவர் விலகினார். அவருக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் மார்னஸ் லபுஸ்சேன் மாற்று வீரராக சேர்க்கப்பட்டார். பந்து தலையில் தாக்கி நிலைகுலைந்து போகும் வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரரை சேர்க்கும் புதிய விதிமுறையை சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அமல்படுத்தியது. இத்தகைய மாற்று வீரர் பீல்டிங் மட்டுமின்றி, பேட்டிங், பவுலிங்கும் செய்யலாம். இதன்படி சுமித்தின் காயம் தொடர்பான மருத்துவ நிபுணரின் அறிக்கையை ஏற்றுக்கொண்ட ஐ.சி.சி., லபுஸ்சேனை விளையாட அனுமதி அளித்தது. மாற்று வீரர் புதிய விதிமுறைப்படி களம் கண்ட முதல் வீரர் லபுஸ்சேன் ஆவார்.

லபுஸ்சேன், 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தார். ஆனால் ஜோப்ரா ஆர்ச்சர் இவரையும் விட்டு வைக்கவில்லை. ஜோப்ரா ஆர்ச்சர் மணிக்கு 91.6 மைல் வேகத்தில் வீசிய ஷாட்பிட்ச் பந்து அவரை ஹெல்மெட்டோடு தாடையை தாக்கியது. மருத்துவ குழுவினரின் சிகிச்சைக்கு பிறகு தொடர்ந்து விளையாடினார்.

சுமித்தின் தற்போதைய நிலைமையை பார்க்கும் போது வருகிற 22-ந்தேதி லீட்சில் தொடங்கும் 3-வது டெஸ்டிலும் விளையாடுவது சந்தேகம் தான். இது குறித்து 30 வயதான சுமித் கூறுகையில், ‘4-வது நாளில் பந்து தாக்கிய பிறகு எல்லா பரிசோதனைகளும் முடிந்து இயல்பாக இருந்ததால் தான் மீண்டும் களம் திரும்பினேன். இரவில் நன்றாக தூங்கி விட்டு காலையில் விழித்த போது, சற்று தலைவலித்தது. மேலும் உடல்நிலை இயல்பான நிலையில் இல்லாததை உணர்ந்தேன். இதனால் தான் விலக நேரிட்டது. அடுத்த டெஸ்டுக்குள் உடல்தகுதியை பெற்று விடுவேன் என்று நம்புகிறேன். ஆனால் 100 சதவீதம் உடல்தகுதியை எட்டாவிட்டால் களம் இறங்கமாட்டேன்’ என்றார்.

இதற்கிடையே ‘பவுன்சர்’ பந்து தாக்கி சுமித் பெவிலியன் திரும்பிய போது சில இங்கிலாந்து ரசிகர்கள் கேலி செய்ததை கண்டு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சன் கொதிப்படைந்துள்ளார். அவர் கூறுகையில், ‘ரசிகர்களின் செயல்பாடு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. ஒட்டுமொத்த ரசிகர்களையும் குறை சொல்லவில்லை. குறிப்பிட்ட ரசிகர்கள் அவரை கிண்டல் செய்து கரவொலி எழுப்பியதை மைக்ரோபோனில் கேட்க முடிந்தது. இன்னிங்ஸ் தொடங்கிய போது நீங்கள் அவரை கிண்டல் செய்யலாம். ஆனால் பந்து தாக்கி வலியால் வெளியேறிய போதும் கேலி செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. என்னை பொறுத்தவரை அவர்கள் உண்மையான கிரிக்கெட் ரசிகர்களே கிடையாது’ என்றார்.


Next Story