7 ஆயிரம் விக்கெட்டுகள் வீழ்த்திய 85 வயது வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வீரர் ஓய்வு பெறுகிறார்


7 ஆயிரம் விக்கெட்டுகள் வீழ்த்திய 85 வயது வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வீரர் ஓய்வு பெறுகிறார்
x
தினத்தந்தி 28 Aug 2019 11:14 PM GMT (Updated: 28 Aug 2019 11:14 PM GMT)

7 ஆயிரம் விக்கெட்டுகள் வீழ்த்திய 85 வயது வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வீரர் ஓய்வு பெற உள்ளார்.

லண்டன்,

வெஸ்ட்இண்டீசில் பிறந்த வேகப்பந்து வீச்சாளரான செசில் ரைட் 1959-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தார். ஒரே ஒரு முதல் தர போட்டியில் விளையாடி இருக்கும் செசில் ரைட் 60 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளூர் போட்டிகளில் விளையாடி விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார். ஆர்வமும், அர்ப்பணிப்பும் இருந்தால் வயது வெறும் ‘நம்பர் தான்’ என்பதை நிரூபிக்கும் வகையில் களத்தில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வரும் செசில் ரைட் தனது நீண்ட நெடிய கிரிக்கெட் பயணத்தை அடுத்த வாரம் முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளார். 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கும் 85 வயதான செசில் ரைட் தற்போது உபெர்மில் அணிக்காக விளையாடி வருகிறார். பென்னி லீக் போட்டியில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி நடைபெறும் ஸ்பிரிங்ஹெட் அணிக்கு எதிரான ஆட்டத்துடன் ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்து இருக்கிறார்.

அதிக காலம் கிரிக்கெட் ஆடிய வீரர் என்ற பெருமைக்குரிய செசில் ரைட் ஒரு காலகட்டத்தில், வெஸ்ட்இண்டீஸ் பிரபலங்களான விவியன் ரிச்சர்ட்ஸ், கேரி சோபர்ஸ், பிராங்க் வோரெல் ஆகியோருடன் இணைந்து ஆடிய அனுபவம் கொண்டவர் ஆவார். ஓய்வு குறித்து செசில் ரைட் கூறுகையில், ‘நீண்ட நாட்கள் நான் விளையாட முடிந்ததற்கு காயம் அடையாமல் உடல் தகுதியை பேணியது தான் காரணம். பயிற்சி செய்யாமல் நான் ஒருபோதும் இருந்தது கிடையாது. வீட்டில் அமர்ந்து கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதை விரும்பமாட்டேன். தொடர்ந்து வேகப்பந்து வீச உடல் ஒத்துழைக்காது என்பதால் ஓய்வு முடிவை எடுத்தேன்’ என்றார்.

Next Story