இந்தியா-தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி: தர்மசாலாவில் இன்று நடக்கிறது


இந்தியா-தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி: தர்மசாலாவில் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 14 Sep 2019 11:29 PM GMT (Updated: 14 Sep 2019 11:29 PM GMT)

இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் இன்று நடக்கிறது.

தர்மசாலா,

இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது.

இதன்படி இந்தியா - தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடக்கிறது.

அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு சரியான வீரர்களை அடையாளம் காண்பதற்கு இந்த தொடர் உதவிகரமாக இருக்கும். அதை மனதில் கொண்டே இந்திய லெவன் அணியின் தேர்வு இருக்கும். கடந்த மாதம் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்த வீரர்களே பெரும்பாலும் இந்த தொடரிலும் நீடிக்கிறார்கள்.

சுழற்பந்து வீச்சாளர்களில் ரவீந்திர ஜடேஜா, குருணல் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர் ஆகியோரில் 3 பேருக்கு வாய்ப்பு கிடைக்கும். முழங்கையை அதிகம் பயன்படுத்தி சுழற்பந்து வீசும் யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் ஏற்கனவே கழற்றி விடப்பட்டு விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



 

மிடில் வரிசையில் மனிஷ் பாண்டே அல்லது ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரில் ஒருவருக்கு இடம் கிட்டும். டோனி ஒதுங்கி இருப்பதால் ரிஷாப் பண்டின் விக்கெட் கீப்பிங் இடத்திற்கு ஆபத்து இல்லை. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இரண்டிலும் வலுவாக உள்ள இந்திய அணி வெற்றியுடன் தொடரை தொடங்க ஆர்வம் காட்டுகிறது.

இந்திய கேப்டன் கோலி கூறுகையில், ‘உள்ளூரோ அல்லது வெளியூரோ எந்த வடிவிலான கிரிக்கெட்டிலும் ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெறவே நாங்கள் விரும்புகிறோம். இந்த தொடரிலும் அதில் மாற்றம் இல்லை. குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் நீக்கம் குறித்து கேட்கிறீர்கள். நாம் எப்போதும் ஒரே மாதிரியான அணி கலவையுடன் இறங்க முடியாது. உலகின் மற்ற அணிகளை பார்த்தால் 9, 10-வது வரிசை வீரர்களும் பேட்டிங் செய்கிறார்கள். நாமும் ஏன் அவ்வாறு செய்யக்கூடாது. நாங்கள் எந்த முடிவு எடுத்தாலும் அது அணியின் எதிர்கால நலன் கருதியே இருக்கும்’ என்றார்.

தென்ஆப்பிரிக்க அணி புதிய கேப்டன் குயின்டான் டி காக் தலைமையில் அடியெடுத்து வைக்கிறது. அனுபவ வீரர்கள் அம்லா, டுமினி, இம்ரான் தாஹிர் ஆகியோர் ஓய்வு பெற்று விட்டதாலும், பாப் டு பிளிஸ்சிஸ்சுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாலும் இப்போது டி காக், டேவிட் மில்லர், வான்டெர் துஸ்சென் ஆகியோரைத் தான் அந்த அணி மலை போல் நம்பி இருக்கிறது.

பந்து வீச்சில் காஜிசோ ரபடா, பெலக்வாயோ ஆகியோர் அச்சுறுத்தக்கூடியவர்கள். தொடர்ச்சியாக நான்கு 20 ஓவர் தொடர்களை கைப்பற்றியுள்ள தென்ஆப்பிரிக்க அணி அந்த வெற்றிப்பயணத்தை தொடர்வதில் முனைப்பு காட்டி வருகிறது.



 

தென்ஆப்பிரிக்க வீரர் மில்லர் கூறுகையில், ‘குயின்டான் டி காக் பல ஆண்டுகளாக தென்ஆப்பிரிக்க அணிக்காக விளையாடி வருகிறார். அவரது கிரிக்கெட் அறிவு வியப்புக்குரியது. அவருடன் இணைந்து ஆடுவது சிறப்பான விஷயம். புதிய கேப்டன், புதிய வீரர்கள் மற்றும் நிறைய இளம் வீரர்கள் நினைத்தாலே பரவசமூட்டுகிறது. கேப்டனுக்கு நான் எல்லா வகையிலும் உறுதுணையாக இருப்பேன். அவர் என்னிடம் இருந்து எந்த மாதிரியான பங்களிப்பை விரும்புகிறாரோ அதை செய்வேன்.

நான் ஏற்கனவே சொன்னது போல் இது இளம் வீரர்களை கொண்ட அணி. வீரர்கள் சவாலை சந்திக்க தயாராக உள்ளனர். எங்கள் அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் தென்ஆப்பிரிக்க ‘ஏ’ அணிக்காக ஆடி இருக்கிறார்கள். அந்த அனுபவம் இந்தியாவில் விளையாடுவதற்கு போதுமானது. அது மட்டுமின்றி ஒரு வாரமாக இங்கு தான் இருக்கிறோம். நன்றாக தயாராகி உள்ளோம்’ என்றார்.

இந்திய அணியில் அங்கம் வகிக்கும் வேகப்பந்து வீச்சாளர்கள் (நவ்தீப் சைனி, கலீல் அகமது, தீபக் சாஹர்) அனுபவம் இல்லாதவர்கள். இதை நாங்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்வோம் என்று தென்ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் உதவி பயிற்சியாளர் குளுஸ்னர் தெரிவித்துள்ளார்.

மொத்தத்தில் இரு அணிகளும் நீயா-நானா? என்று வரிந்து கட்டுவதால் போட்டியில் பரபரப்புக்கு குறைவிருக்காது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான் அல்லது லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), மனிஷ் பாண்டே அல்லது ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா அல்லது ராகுல் சாஹர், வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், நவ்தீப் சைனி.

தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக் (கேப்டன்), ரீஜா ஹென்ரிக்ஸ், பவுமா, வான்டெர் துஸ்சென், டேவிட் மில்லர், பெலக்வாயோ, வெய்ன் பிரிட்டோரியஸ், ஜோர்ன் போர்ச்சுன் அல்லது அன்ரிச் நார்ஜே, காஜிசோ ரபடா, ஜூனியர் தலா, தப்ரைஸ் ஷம்சி.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, 2 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

மழை மிரட்டல்

குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவும் தர்மசாலாவில் அடிக்கடி மழை பெய்கிறது. நேற்று பிற்பகலில் மழை காரணமாக ஆடுகளம் தார்ப்பாயால் மூடப்பட்டிருந்தது. இன்றும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் இந்த ஆடுகளத் தன்மை எப்படி இருக்கும் என்பதை கணிப்பது கடினமாகும்.

இதுவரை...

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 20 ஓவர் தொடர் தர்மசாலா (செப்.15), மொகாலி (செப்.18), பெங்களூரு (செப்.22) ஆகிய இடங்களில் நடக்கிறது. அனைத்து ஆட்டங்களும் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை 20 ஓவர் கிரிக்கெட்டில் 13 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 8-ல் இந்தியாவும், 5-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி கண்டுள்ளன.

முதலாவது ஆட்டம் நடக்கும் தர்மசாலா ஸ்டேடியத்தில் எட்டு 20 ஓவர் போட்டிகள் நடந்துள்ளது. இதில் இந்தியா ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டும் ஆடியிருக்கிறது. 2015-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான அந்த ஆட்டத்தில் இந்திய அணி ரோகித் சர்மாவின் சதத்தின் உதவியுடன் 199 ரன்கள் குவித்த போதிலும் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.


Next Story