இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தொடர் எப்போது நடக்கும்? கங்குலி பதில்


இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தொடர் எப்போது நடக்கும்? கங்குலி பதில்
x
தினத்தந்தி 17 Oct 2019 10:27 PM GMT (Updated: 17 Oct 2019 10:27 PM GMT)

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே கடைசியாக 2012-ம் ஆண்டில் நேரடி போட்டி தொடர் நடைபெற்றது. பயங்கரவாத பிரச்சினை காரணமாக அதன் பிறகு இரு நாட்டு அணிகளும் நேரடி போட்டி தொடரில் விளையாடவில்லை.

கொல்கத்தா,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் உலக கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை உள்ளிட்ட பெரிய போட்டிகளில் மட்டும் இரு அணிகளும் மோதுகின்றன. இங்கிலாந்தில் இந்த ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானுடன் மோதுவதை தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து அடங்கியது நினைவிருக்கலாம்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக வருகிற 23-ந் தேதி பொறுப்பேற்க இருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கொல்கத்தாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே கிரிக்கெட் போட்டி எப்போது தொடங்கும் என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் பதில் அளிக்கையில், ‘இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது எனது கையில் இல்லை. இந்த கேள்வியை நீங்கள் நமது பிரதமர் மோடியிடமும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிடமும் தான் கேட்க வேண்டும். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க மத்திய அரசின் அனுமதி பெற வேண்டியது அவசியமானதாகும். எனவே இந்த கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை’ என்று கூறினார்.

Next Story