ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நோ-பாலை கண்காணிக்க கூடுதல் நடுவர் - நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு


ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நோ-பாலை கண்காணிக்க கூடுதல் நடுவர் - நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு
x

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நோ-பாலை கண்காணிக்க கூடுதல் நடுவரை நியமிப்பது என்று நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மும்பை,

கடந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ‘நோ- பால்’ சர்ச்சை அடிக்கடி எழுந்தது. மும்பை இந்தியன்சுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஆடிய போது கடைசி பந்தில் வெற்றிக்கு 7 ரன் தேவைப்பட்டது. மும்பை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா புல்டாசாக வீசிய கடைசி பந்தை எதிர்கொண்ட பெங்களூரு வீரர் ஷிவம் துபே ரன் எடுக்கவில்லை. டி.வி. ரீப்ளேயில் மலிங்கா, காலை கிரீசுக்கு வெளியே வைத்து நோ-பாலாக வீசியது தெரியவந்தது. ஆனால் நடுவர் இதை கவனிக்காமல் விட்டு விட்டார். இதனால் நடுவரிடம் பெங்களூரு கேப்டன் விராட் கோலி கடும் வாக்குவாதம் செய்தார். நோ-பால் வழங்கியிருந்தால் எக்ஸ்டிரா வகையில் கூடுதலாக ஒரு ரன் கிடைத்திருக்கும். மேலும் அந்த பந்தில் ஓடி ஒரு ரன் எடுக்கவும் வாய்ப்பு இருந்தது. அதன் தொடர்ச்சியாக ‘பிரீஹிட்’ வீசப்பட்டிருக்கும். அந்த பந்தை அனேகமாக எதிர்முனையில் நின்ற ‘அதிரடி புயல்’ டிவில்லியர்ஸ் தான் சந்தித்து இருப்பார். அதனால் ஆட்டத்தின் முடிவு வேறு மாதிரி அமைந்திருக்கலாம். நடுவர்கள் விழிப்போடு பார்க்க வேண்டும். இது உயரிய ஐ.பி.எல். கிரிக்கெட், கிளப் கிரிக்கெட் அல்ல என்று கோலி சாடினார்.

இதே போல் ஜெய்ப்பூரில் நடந்த ராஜஸ்தான் ராயல்சுக்கு எதிரான ஆட்டத்தின் போது கடைசி ஓவரில் இடுப்பு உயரத்துக்கு மேலாக வீசப்பட்ட புல்டாஸ் பந்துக்கு நோ-பால் வழங்கப்படாததை கண்டித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, மைதானத்திற்குள் வந்து நடுவர்களிடம் காரசாரமாக மல்லுகட்டியதும், அதனால் அவர் அபராத நடவடிக்கைக்கு உள்ளானதையும் மறந்து விட முடியாது.

அடுத்து வரும் ஐ.பி.எல். போட்டிகளில் இத்தகைய தவறுகளுக்கு இடம் கொடுக்காத வகையில் ஒவ்வொரு ஆட்டத்திற்கும் கூடுதலாக ஒரு டி.வி. நடுவரை நியமிப்பது என்று மும்பையில் நேற்று நடந்த புதிய தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தலைமையில் நடந்த ஐ.பி.எல். நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டது.

இந்த பிரத்யேக நடுவரின் ஒரே வேலை, தொழில்நுட்ப உதவியுடன் ஒவ்வொரு பந்தையும் உன்னிப்பாக கண்காணித்து அது நோ-பாலாக இருந்தால் உடனடியாக அதை கள நடுவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வது தான். மற்றபடி 3-வது அல்லது 4-வது நடுவர் போல் செயல்படமாட்டார். உள்நாட்டில் வருகிற 8-ந்தேதி தொடங்கும் சையத் முஸ்தாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலோ அல்லது ரஞ்சி கிரிக்கெட் தொடரிலோ கூடுதல் நடுவர் திட்டம் சோதித்து பார்க்கப்படும் என்று தெரிகிறது. அது வெற்றிகரமாக அமைந்தால் அடுத்த ஆண்டு நடக்கும் 13-வது ஐ.பி.எல்.-ல் ‘கூடுதல் டி.வி. நடுவர்’ புதுமையை பார்க்கலாம்.

ஐ.பி.எல். போட்டியில் சுவாரஸ்யத்தை அதிகரிக்கச் செய்வதற்காக ஆட்டத்தின் போது ஏதாவது ஒரு கட்டத்தில் மாற்று ஆட்டக்காரராக பேட்ஸ்மேனையோ அல்லது பவுலரையோ பயன்படுத்தும் ‘பவர் பிளேயர்’ யோசனை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த வித்தியாசமான முறையை பரீட்சார்த்தமாக நடைமுறைப்படுத்த போதிய காலஅவகாசம் இல்லாததால் இப்போதைக்கு இந்த திட்டத்தை கைவிடுவது என்று முடிவு எடுக்கப்பட்டது.

13-வது ஐ.பி.எல். தொடருக்கான வீரர்களின் ஏலத்தை அடுத்த மாதம் (டிசம்பர்) 19-ந்தேதி கொல்கத்தாவில் நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. வழக்கமாக வீரர்களின் ஏலம் பெங்களூருவில் நடைபெறும். முதல்முறையாக கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் சவுரவ் கங்குலியின் சொந்த ஊராகும்.

ஏலம் ஒரு நாள் மட்டுமே நடக்கும். ஏலத்திற்கு ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக ரூ.85 கோடி செலவு செய்யலாம். இது முந்தைய ஆண்டை விட ரூ.3 கோடி அதிகமாகும். இவற்றில் தக்க வைத்துள்ள வீரர்களின் ஊதியத்தை கழித்து மீதமுள்ள தொகையைத் தான் ஏலத்தில் பயன்படுத்த முடியும். இந்த வகையில் பார்த்தால் சென்னை சூப்பர் கிங்சின் கைவசம் ரூ.3.2 கோடி மட்டுமே இருப்பு உள்ளது. அதிகபட்சமாக டெல்லி கேப்பிட்டல்ஸ் ரூ.8.2 கோடி வைத்திருக்கிறது.


Next Story