கிரிக்கெட்

வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய அணி 493 ரன்கள் குவிப்பு - மயங்க் அகர்வால் இரட்டை சதம் விளாசினார் + "||" + First Test against Bangladesh: The Indian team amassed 493 runs - Mayank Agarwal double century

வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய அணி 493 ரன்கள் குவிப்பு - மயங்க் அகர்வால் இரட்டை சதம் விளாசினார்

வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய அணி 493 ரன்கள் குவிப்பு - மயங்க் அகர்வால் இரட்டை சதம் விளாசினார்
இந்தூரில் நடந்து வரும் வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் பேட்டிங்கில் முழுமையாக கோலோச்சிய இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 493 ரன்கள் குவித்துள்ளது. மயங்க் அகர்வால் இரட்டை சதம் விளாசி அசத்தினார்.
இந்தூர்,

இந்தியா - வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த வங்காளதேச அணி இந்திய பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 150 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்திருந்தது. மயங்க் அகர்வால் 37 ரன்களுடனும், புஜாரா 43 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.


இந்த நிலையில் 2-வது நாளான நேற்று இந்திய வீரர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். வேகப்பந்து வீச்சாளர் அபுஜெயத்தின் ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் அடித்து அரைசதத்தை கடந்த புஜாரா (54 ரன், 72 பந்து, 9 பவுண்டரி) அவரது அடுத்த ஓவரில் கேட்ச் ஆகிப்போனார்.

இதையடுத்து 3-வது விக்கெட்டுக்கு கேப்டன் விராட் கோலி நுழைந்தார். ‘ரன் எந்திரம்’ என்று வர்ணிக்கப்படும் கோலி இந்த முறை தாக்குப்பிடிக்கவில்லை. அபுஜெயத்தின் பந்து வீச்சில் அவருக்கு எல்.பி.டபிள்யூ. கேட்டு வங்காளதேச வீரர்கள் முறையிட்டனர். நடுவர் விரலை உயர்த்தாததால் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தை நாடினர். டி.வி. ரீப்ளேயில், இன்ஸ்விங்காக உள்ளே ஊடுருவிய பந்து லெக்ஸ்டம்பை தாக்குவது தெரிந்தது. இதனால் நடுவர் தனது முடிவை மாற்றிக்கொண்டு கோலிக்கு (0) அவுட் வழங்கினார்.

கோலியின் பேட்டிங்கை காண குழுமியிருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளானார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி டக்-அவுட் ஆவது இது 10-வது முறையாகும். 


 இதன் பின்னர் மயங்க் அகர்வாலுடன், துணை கேப்டன் அஜிங்யா ரஹானே கைகோர்த்தார். வங்காளதேசத்தின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து அணியை சரிவில் இருந்து மீட்டதுடன், அணி வலுவான ஸ்கோரை நோக்கி பயணிக்கவும் அடித்தளமிட்டனர். வலுவாக காலூன்றிய இந்த கூட்டணியை உடைக்க வங்காளதேச பவுலர்கள் கடினமாக போராட வேண்டி இருந்தது. 


 மயங்க் அகர்வால் 83 ரன்னில் ஆடிக்கொண்டிருந்த போது, மெஹிதி ஹசனின் சுழலில் எல்.பி.டபிள்யூ. வழங்கப்பட்டது. உடனடியாக அவர் டி.ஆர்.எஸ். கேட்டு அப்பீல் செய்தார். ‘ரீப்ளே’யில் பந்து லெக்ஸ்டம்பை விட்டு விலகி செல்வது தெரிந்ததால் அகர்வாலுக்கு மறுவாழ்வு கிடைத்தது. சிறிது நேரத்தில் தனது 3-வது சதத்தையும் நிறைவு செய் தார்.

மறுமுனையில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹானே 21-வது அரைசதத்தை கடந்தார்.

சதத்திற்கு பிறகு அகர்வாலின் பேட்டிங் வேகமெடுத்தது. சுழற்பந்து வீச்சில் அவ்வப்போது சிக்சரும் பறக்க விட்டு அமர்க்களப்படுத்தினார். அணியின் ஸ்கோர் 309 ரன்களாக உயர்ந்த போது ரஹானே 86 ரன்களில் (172 பந்து, 9 பவுண்டரி) ‘ஷாட்பிட்ச்’ பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

அடுத்து ரவீந்திர ஜடேஜா, அகர்வாலுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியில் வெளுத்து வாங்கினர். வங்காளதேச பவுலிங்கை வறுத்தெடுத்த மயங்க் அகர்வால் ஷேவாக் பாணியில் மெஹிதி ஹசனின் பந்து வீச்சில் பந்தை சிக்சருக்கு தூக்கியடித்து தனது 2-வது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார்.

இதன் பின்னர் அகர்வால்- ஜடேஜா ஜோடி ரன்வேட்டையை முடுக்கி விட்டது. ஒரு நாள் போட்டி போன்று ஸ்கோர் துரிதமாக எகிறியது. மெஹிதி ஹசனின் பந்து வீச்சில் சில அடி இறங்கி வந்து பந்தை சிக்சருக்கு அனுப்பிய மயங்க் அகர்வால், அடுத்த பந்தை முட்டிப்போட்டு விளாசிய போது அதை ‘டீப் மிட்விக்கெட்’ திசையில் எல்லைக்கோடு அருகே அபுஜெயத் அருமையாக கேட்ச் செய்தார். மயங்க் அகர்வால் 243 ரன்களில் (330 பந்து, 28 பவுண்டரி, 8 சிக்சர்) பெவிலியன் திரும்பினார். அவருக்கு பிறகு வந்த விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா (12 ரன்) போல்டு ஆனார்.

கடைசிகட்டத்தில் உமேஷ் யாதவ் 3 சிக்சர்களை நொறுக்கி ரசிகர்களை மேலும் பரவசப்படுத்தினார். 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 114 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 493 ரன்கள் குவித்துள்ளது. ஜடேஜா 60 ரன்களுடனும் (76 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), உமேஷ் யாதவ் 25 ரன்களுடனும் (10 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் உள்ளனர்.

இதுவரை 343 ரன்கள் முன்னிலை கண்டு வலுவான நிலையை அடைந்துள்ள இந்திய அணிக்கு இன்னிங்ஸ் வெற்றியை பெறும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறும்.

12 இன்னிங்சில் 2-வது இரட்டை சதம்: பிராட்மேனை முந்தினார், மயங்க் அகர்வால்

* இந்திய தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் இந்த டெஸ்டில் 28 பவுண்டரி, 8 சிக்சருடன் 243 ரன்கள் குவித்து பிரமாதப்படுத்தினார். அவருக்கு இது 2-வது இரட்டை சதமாகும். ஏற்கனவே கடந்த மாதம் விசாகப்பட்டினத்தில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டிலும் இரட்டை சதம் அடித்திருந்தார். 8-வது டெஸ்டில் விளையாடும் அவர் அதில் பேட்டிங் செய்த 12-வது இன்னிங்ஸ் இதுவாகும். இதன் மூலம் குறைந்த இன்னிங்ஸ்களில் இரண்டு இரட்டை சதத்தை ருசித்த 2-வது வீரராக மயங்க் அகர்வால் திகழ்கிறார். இந்த சாதனை பட்டியலில் இந்தியாவின் வினோத் காம்ப்ளி (5 இன்னிங்ஸ்) முதலிடத்தில் இருக்கிறார். ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். பிராட்மேன் தனது 2-வது இரட்டை சதத்தை 13-வது இன்னிங்சில் தான் எடுத்தார்.

* டெஸ்டில் அதிக இரட்டை சதங்கள் அடித்த இந்திய தொடக்க ஆட்டக்காரர்களின் வரிசையில் வாசிம் ஜாபர், வினோ மன்கட் ஆகியோருடன் 3-வது இடத்தை மயங்க் அகர்வால் பகிர்ந்துள்ளார். ஷேவாக் (6 இரட்டை சதம்), சுனில் கவாஸ்கர் (3) முதல் இரு இடங்களில் உள்ளனர்.

* சமீபத்தில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மயங்க் அகர்வால் (215 ரன், விசாகப்பட்டினம்), விராட் கோலி (254 ரன், புனே), ரோகித் சர்மா (212 ரன், ராஞ்சி) ஆகியோர் இரட்டை சதம் அடித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக இப்போது வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்டில் மயங்க் அகர்வால் மீண்டும் 200 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். இந்திய அணியைச் சேர்ந்த வீரர்கள் தொடர்ச்சியாக 4 டெஸ்டுகளில் இரட்டை சதம் அடிப்பது இதுவே முதல் நிகழ்வாகும்.

* வங்காளதேசத்துக்கு எதிராக 2004-ம் ஆண்டு டாக்காவில் நடந்த டெஸ்டில் சச்சின் தெண்டுல்கர் 248 ரன்கள் சேர்த்தார். அவருக்கு பிறகு அந்த அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த இந்தியர் மயங்க் அகர்வால் தான்.

* கர்நாடகாவைச் சேர்ந்த 28 வயதான மயங்க் அகர்வால் இந்த இன்னிங்சில் 8 சிக்சர்களை தெறிக்க விட்டார். எல்லா சிக்சரும் சுழற்பந்து வீச்சிலேயே ஓடின. ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த இந்தியரான நவ்ஜோத் சித்துவின் (1994-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்டின் முதல் இன்னிங்சில் 8 சிக்சர்) சாதனையை சமன் செய்துள்ளார்.

* இந்திய துணை கேப்டன் ரஹானே டெஸ்டில் 4 ஆயிரம் ரன்களை கடந்த இந்தியர்களின் பட்டியலில் 16-வது வீரராக நேற்று இணைந்தார். 62-வது டெஸ்டில் ஆடும் ரஹானே இதுவரை 11 சதம் உள்பட 4,061 ரன்கள் எடுத்துள்ளார்.

ஒரே நாளில் 407 ரன்கள் குவித்த இந்தியா

இந்த டெஸ்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் இந்திய வீரர்கள் 88 ஓவர்களில் 407 ரன்கள் திரட்டி மலைக்க வைத்துள்ளனர். டெஸ்டில் ஒரு நாளில் இந்தியா 400 ரன்களுக்கு மேல் எடுப்பது இது 3-வது முறையாகும். ஏற்கனவே 2009-ம் ஆண்டு மும்பையில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்டின் 2-வது நாளில் 443 ரன்களும் (ஒரு விக்கெட்டை இழந்து), அதே தொடரில் கான்பூரில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்டில் முதல் நாளில் 417 ரன்களும் (2 விக்கெட்) இந்தியா எடுத்திருக்கிறது.

கோலி கொடுத்த ‘கிரீன் சிக்னல்’

மயங்க் அகர்வால் 150 ரன்களை கடந்த போது, வெளியில் இருந்த இந்திய கேப்டன் விராட் கோலி இரட்டை சதம் எட்ட வேண்டும் என்பது போல் இரட்டை விரலை காட்டினார். இதனால் உற்சாகமடைந்த மயங்க் அகர்வால் இரட்டை சதத்தை எட்டியதும் அவரை நோக்கி பேட்டை உயர்த்தி காட்டினார். அப்போது கோலி, அடுத்து முச்சதத்தை நோக்கி செல் என்று மூன்று வீரர்களை காட்டினார். இதன் பிறகு மேலும் ரன்மழை பொழிந்த மயங்க் அகர்வால் 243 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: பாகிஸ்தான் அணி 326 ரன்னில் ஆல்-அவுட் - ஷான் மசூத் சதம் அடித்தார்
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் பாகிஸ்தான் அணி 326 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது.
2. வங்காளதேசத்துக்கு 10 டீசல் என்ஜின்களை இந்தியா வழங்கியது
வங்காளதேசத்துக்கு 10 டீசல் என்ஜின்களை இந்தியா வழங்கி உள்ளது.
3. இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது.
4. இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலை
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி 318 ரன்களுக்கு ஆட்டம் இழந்து 114 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
5. வங்காளதேசத்தில் கொரோனா பாதித்த முன்னாள் மந்திரி மரணம்
வங்காளதேசத்தில் கொரோனா பாதித்த முன்னாள் மந்திரி மரணம் அடைந்தார்.