வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரை கைப்பற்றுமா இந்தியா? - கடைசி ஆட்டம் மும்பையில் இன்று நடக்கிறது


வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரை கைப்பற்றுமா இந்தியா? - கடைசி ஆட்டம் மும்பையில் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 10 Dec 2019 11:52 PM GMT (Updated: 10 Dec 2019 11:52 PM GMT)

தொடர் யாருக்கு என்பதை முடிவு செய்யும் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது.

மும்பை,

இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஐதராபாத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்திலும், திருவனந்தபுரத்தில் நடந்த 2-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது.

இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்றிரவு அரங்கேறுகிறது.

தொடக்க ஆட்டத்தில் 208 ரன்கள் இலக்கை 8 பந்து மீதம் வைத்து எட்டிப்பிடித்த இந்திய அணி 2-வது ஆட்டத்தில் 170 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. ஆனாலும் பீல்டிங் ஓட்டையால் வெற்றி வாய்ப்பு நழுவிப்போனதை கேப்டன் கோலி வேதனையோடு ஒப்புக் கொண்டார். ஒரே ஓவரில் வாஷிங்டன் சுந்தரும், விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டும் கேட்ச் வாய்ப்பை வீணடித்ததால் ஆட்டம் வெஸ்ட் இண்டீசுக்கு சாதகமாக மாறிப்போனது. இந்த விஷயத்தில் இந்திய வீரர்கள் கூடுதல் சிரத்தையுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். பந்து வீச்சில் ஓரளவு சிக்கனத்தை காட்டிய தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் இரண்டு ஆட்டங்களிலும் கேட்ச்சை நழுவ விட்டிருப்பதால் இன்றைய போட்டியில் அணியில் நீடிப்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மற்றபடி அணியில் மாற்றம் இருக்காது. முந்தைய ஆட்டத்தில் அரைசதம் விளாசிய ஆல்-ரவுண்டர் ஷிவம் துபேவுக்கு இது சொந்த ஊர் மைதானம் என்பதால் அவர் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆட்டத்தில் கிடைத்த வெற்றியால் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் கூடுதல் உத்வேகம் அடைந்துள்ளனர். அந்த அணியில் லென்டில் சிமோன்ஸ், ஹெட்மயர், நிகோலஸ் பூரன், பொல்லார்ட், இவின் லீவிஸ் உள்ளிட்டோர் பேட்டிங்கில் மிரட்டுகிறார்கள். பந்துவீச்சில் தான் தடுமாற்றம் உள்ளது. அதிலும் எக்ஸ்டிரா வகையில் ரன்களை வாரி வழங்குகிறார்கள். இதை கட்டுப்படுத்துவதில் இனி கவனமுடன் இருப்பார்கள்.

வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் பில் சிமோன்ஸ் கூறுகையில், ‘இந்தியாவில் மற்ற இடங்களை காட்டிலும் இந்த மைதானத்தில் பொல்லார்ட் நிறைய ஐ.பி.எல். போட்டியில் விளையாடி இருக்கிறார். இங்கு 10 ஆண்டுகள் (மும்பை இந்தியன்ஸ் அணிக்காக) விளையாடி உள்ளார். அவரது அனுபவம் எங்களது பவுலர்களுக்கு நிச்சயம் அனுகூலமாக இருக்கும்.

கேட்ச்சுகளை தவற விடும் போது போட்டியில் வெற்றி பெற முடியாது. மின்னொளி சரியில்லை, பீல்டிங்கில் நிறுத்தப்பட்டிருந்த இடம் ஏதுவாக இல்லை என்றெல்லாம் சாக்குபோக்கு சொல்லக்கூடாது. கேட்ச்சுகளை தவற விட்டால் அது உங்களது தவறு. இதை சரி செய்ய கடினமாக உழைக்க வேண்டும். 2016-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை அரைஇறுதியில் இதே மைதானத்தில் நாங்கள் இந்தியாவை வீழ்த்தினோம். அது நீண்ட காலமாகி விட்டது. அதன் பிறகு நிறைய விஷயங்கள் மாறி விட்டன. கடைசி 2 ஆட்டங்களில் விளையாடிய விதம் எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. இங்கு ஐ.பி.எல். மற்றும் சர்வதேச போட்டிகளை பார்த்ததில் இருந்து, இந்த மைதானத்தில் 200 ரன்களுக்கு மேல் எடுத்தாலும் விரட்டிபிடித்து (சேசிங்) விட முடியும் என்பதை அறிவோம்’ என்றார்.

இரவில் பனிப்பொழிவுக்கு மத்தியில் பந்தை துல்லியமாக பிடித்து வீசுவதில் சிரமம் இருக்கிறது. எனவே டாஸ் ஜெயிக்கும் அணி 2-வது பேட்டிங்குக்கே முன்னுரிமை கொடுக்கும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), ரிஷாப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் அல்லது குல்தீப் யாதவ், தீபக் சாஹர், புவனேஷ்வர்குமார், யுஸ்வேந்திர சாஹல்.

வெஸ்ட் இண்டீஸ்: லென்டில் சிமோன்ஸ், இவின் லீவிஸ், பிரன்டன் கிங், ஹெட்மயர், நிகோலஸ் பூரன், பொல்லார்ட் (கேப்டன்), ஜாசன் ஹோல்டர், கேரி பியர், கேஸ்ரிக் வில்லியம்ஸ், காட்ரெல், ஹேடன் வால்ஷ்.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

‘தொடரை வெல்வது முக்கியம்’ -  ரோகித் சர்மா

இந்திய துணை கேப்டன் ரோகித் சர்மா நேற்று அளித்த பேட்டியில், ‘20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியை வலுப்படுத்த முயற்சிக்கிறோம் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்க விரும்பவில்லை. இப்போது இந்த தொடரை வெல்வதில் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் நீண்ட காலம் உள்ளது. நாம் தொடர்ந்து வெற்றிகளை குவித்து, களத்தில் பணியை சரியாக செய்தால், அணி வடிவமைப்பு தானாக அமைந்து விடும்’ என்றார்.

Next Story