ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான கொல்கத்தா அணி வீரர்கள் தேர்வு சரியில்லை - முன்னாள் கேப்டன் கம்பீர் அதிருப்தி


ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான கொல்கத்தா அணி வீரர்கள் தேர்வு சரியில்லை - முன்னாள் கேப்டன் கம்பீர் அதிருப்தி
x
தினத்தந்தி 21 Dec 2019 12:05 AM GMT (Updated: 21 Dec 2019 12:05 AM GMT)

அடுத்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் தேர்வு சரியில்லை என்று முன்னாள் கேப்டன் கவுதம் கம்பீர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

அடுத்த ஆண்டு நடைபெறும் 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா), இயான் மோர்கன் (இங்கிலாந்து), வருண் சக்ரவர்த்தி (இந்தியா), டாம் பாண்டன் (இங்கிலாந்து), ராகுல் திரிபாதி (இந்தியா), கிறிஸ் கிரீன் (ஆஸ்திரேலியா), நிகில் சங்கர் நாயக் (இந்தியா), பிரவின் தாம்பே (இந்தியா), எம்.சித்தார்த் (இந்தியா) ஆகியோரை ஏலத்தில் தன்வசப்படுத்தியது. அதிகபட்சமாக கம்மின்ஸ் ரூ.15½ கோடிக்கு வாங்கப்பட்டார்.

கொல்கத்தா அணியின் வீரர்கள் தேர்வு குறித்து 2012, 2014-ம் ஆண்டுகளில் அந்த அணி கோப்பையை வென்ற போது கேப்டனாக இருந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் அதிருப்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

கொல்கத்தா அணி கம்மின்ஸ்சை வாங்கி இருப்பது ஆக்கப்பூர்வமான அணுகுமுறையாகும். புதிய பந்தில் அவர் விக்கெட் வீழ்த்துவார் என்று எதிர்பார்க்கலாம். அவர் பந்தை நன்கு ஸ்விங் செய்வதுடன் நல்ல வேகத்திலும் பந்து வீசுவார். கடைசி கட்ட ஓவரில் அவர் தடுமாற்றத்தை சந்திக்கக்கூடும். 2014-ம் ஆண்டு அவர் கொல்கத்தா அணிக்காக விளையாடும் போது நல்ல பந்து வீச்சு திறமையுடன் இருந்தார். அதைவிட தற்போது நல்ல முன்னேற்றம் கண்டுள்ளார். கம்மின்ஸ், ஐ.பி.எல்.-ல் எல்லா ஆட்டங்களிலும் விளையாடுவார், 3-4 ஆட்டங்களில் தனிநபராக அணிக்கு வெற்றி தேடிக் கொடுப்பார் என்று நம்புகிறேன். ஏனெனில் அவர் மிகப்பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

ஒட்டு மொத்த கொல்கத்தா அணியை நீங்கள் பார்த்தால் ஆந்த்ரே ரஸ்செல், இயான் மோர்கன், சுனில் நரின் போன்ற வீரர்களுக்கு சரியான மாற்று வீரர் இல்லை. ஒருவேளை மோர்கனுக்கு காயம் ஏற்பட்டால் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்கக்கூடிய வெளிநாட்டு வீரர் அணியில் கிடையாது. அணியை மேலும் வலுப்படுத்த கொல்கத்தா அணி நிர்வாகம் மிட்செல் மார்ஷ் அல்லது மார்கஸ் ஸ்டோனிஸ்சை எடுத்து இருக்கலாம். கம்மின்ஸ் காயம் அடைந்தால் அவருக்கு மாற்றாக செயல்பட லோக்கி பெர்குசன் இருக்கிறார். ஆனால் தொடக்க வரிசை பேட்ஸ்மேன்கள் காயத்தை சந்தித்தால் அதனை சரிக்கட்ட தகுதியான மாற்று வீரர்கள் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story