கிரிக்கெட்

பெண்கள் முத்தரப்பு கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் இந்தியாவுடன் மோதுகிறது + "||" + Women's Cricket:Australia clash with India in final

பெண்கள் முத்தரப்பு கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் இந்தியாவுடன் மோதுகிறது

பெண்கள் முத்தரப்பு கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் இந்தியாவுடன் மோதுகிறது
பெண்கள் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்டில் கடைசி லீக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
மெல்போர்ன், 

பெண்கள் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் மெல்போர்னில் உள்ள ஜங்சன் ஓவல் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த கடைசி லீக்கில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் சந்தித்தன. கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியுடன் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் சேர்த்தது. பெத் மூனி அரைசதம் (50 ரன், 40 பந்து, 6 பவுண்டரி) அடித்தார்.

அடுத்து 133 ரன்கள் இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி ஆடியது. தோற்றாலும் பரவாயில்லை, குறைந்தது 124 ரன்கள் எடுத்தால் தான் இறுதி சுற்றை எட்ட முடியும் என்ற நிலைமையில் பேட்டிங் செய்த இங்கிலாந்து வீராங்கனைகள், எதிரணியின் பந்து வீச்சில் திணறினர். 

குறிப்பாக இடக்கை சுழற்பந்து வீச்சாளர் சோபி மோலினெக்சின் மிரட்டலில் நதாலி சிவெர் (16 ரன்), கேப்டன் ஹீதர் நைட் (13 ரன்), பீமான்ட் (6 ரன்) ஆகிய பிரதான வீராங்கனைகளை வீழ்ந்தனர். 20 ஓவர்கள் முழுமையாக ஆடிய இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 116 ரன்களுக்கு அடங்கியது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய தரப்பில் சோபி மோலினெக்ஸ் 3 விக்கெட்டுகளும், விலாமின்க் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

லீக் சுற்று முடிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா தலா 2 வெற்றி, 2 தோல்வி என்று 4 புள்ளிகளுடன் சமநிலை வகித்தன. ரன்ரேட் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இங்கிலாந்து வெளியேற்றப்பட்டது.

நாளை மறுதினம் (புதன்கிழமை) இதே மைதானத்தில் நடக்கும் இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோத உள்ளன.